தைக்காடு இசக்கியம்மன் கோயில் நடையில்தான் பிரசவ ஆஸ்பத்திரி. இரண்டு பெரிய ஆலமரங்கள் கேட்டுக்குக் காவலாக உண்டு. “தாயும் குழந்தையும் ஆஸ்பத்திரியில்” என்று சொன்னால்தான் சாதாரணமானவர்களுக்குப் புரியும். குழந்தைகளுக்கான ஆடைகள், பக்கெட், துண்டு, சோப்பு போன்ற சாமான்கள் விற்கும் கடைகளும் ஹோட்டல்களும் ஆட்டோ டாக்சி ஸ்டாண்டும் ஆஸ்பத்திரியைப் பொதிந்து நிற்கின்றன.
பொது இடத்தில் மேம்பாலம் வரை பெரும் பாம்பைப் போல ஒற்றைக்குக் கடந்து பாலத்தில் வைத்து சாலை மூன்றாகப் பிரியும். இணை சேர்ந்து கிடக்கும் இரயில் தண்டவாளங்களைத் தூரத்தில் இருந்து பார்க்கலாம். புறப்படத் தயாராக நிற்கும் இரயில்கள் கூவி அழைக்கும். அதற்கப்புறம் தம்பானூர் பஸ் ஸ்டாண்டு. சுற்றிலும் ஆட்கள் பெருகி நிறைந்திருக்கும் இடங்கள்.
அரசாங்கப் பிரசவ ஆஸ்பத்திரி என்பதால் ஒரே கூட்டம். பாவப்பட்டவர்கள் அதிகமாக இருக்கும் நாட்டில் பிரச்சனை பிரசவம்தான். இவ்வளவு நெருக்கடிகளுக்கும் இடையில்தான் என்னுடைய இரண்டாவது குழந்தை பிறக்கப் போகிறது. வார்டில் ரஜினியுடைய அம்மாவும் இருந்தாள். அவளுடைய முதல் பிரசவமும் இங்கேதான்.
அன்று ஓடிய ஓட்டம். பக்கெட்டிற்கும் சோப்புக்கும் மருந்துக்கும் மந்திரத்துக்கும்... ஓடடா ஓட்டம்! பெரிய ஓட்டம்! இதைப் பற்றி நினைக்காமல் சமாதானத்தோடு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த அனுபவத்தில் கிடைத்த தைரியத்தோடு அவள் இருக்கிறாள். பெட்டிக்கடையில் இருந்து ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்தேன்.
இசக்கி அம்மன் கோயிலில் ஒரே மேளதாளக் கொண்டாட்டம். கர்ப்பிணிகளையும் பிறக்கும் குழந்தைகளையும் ஆசீர்வதிப்பது போல இருந்தது அது. இந்த சிறிய / பெரிய உலகத்தில்தான் மூன்று நான்கு நாட்களாக வாழ்க்கை. முதல் குழந்தை தம்பி வீட்டில். இவ்வளவு நாள் ஸ்கூலுக்குப் போய்க்கொண்டிருந்தது.
இப்போது அவனுக்கு ஸ்கூலுக்குப் போகமுடியாத நிலை. பெட்டிக்கடையைச் சுற்றிலும் சிகரெட் புகைப்பவர்கள் அங்குமிங்குமாக இருந்தார்கள். அவர்களிடையில் சில உரையாடல்களும் உண்டு. கவலைகள், கனவுகள், எல்லாம் அதில் கலந்திருந்தன. மனைவியின் முதல் பிரசவத்திற்காக வந்திருந்த இரண்டு பேரின் பேச்சுகளுக்கு நான் காது கொடுத்தேன்.
“அவள விட எனக்குத்தான் டென்ஷன். சில சமயத்துல டென்ஷன் அதிகமாகறப்ப ஒரு சிகரெட் பிடிக்கணும்”. பக்கத்தில் நின்றவன் புகையைப் பரப்பினான். “அடேய். நாம எதுக்காகடா டென்ஷன் ஆகணும். பொம்பளைங்கதான் பிரசவிக்கறவங்க. எனக்குப் பயமில்ல. அவளுக்குத்தான் பயம்”. அவன் பயிற்சி பெற்றவனைப் போல புகை வளையங்களை உண்டாக்கினான்.
காரமான ஒரு சிகரெட்டை பிடித்துக் கொண்டிருந்த வயதான மாமா அந்த உரையாடலில் சேர்ந்து கொண்டான். “நீங்க நினைக்கறது மாதிரி பிரசவம்ங்கறது சின்ன விஷயமில்ல. பொண்ணுன்னு சொன்னா தேவியாக்கும் தேவி. அம்மன்”. ஏதோ ஒரு சம்பவத்தை சொல்லத் துடிப்பது போல இருந்தது அந்தப் பேச்சு. “என் மகளோட மூனாவது பிரசவம் அது.
அவளோட அம்மா பிரசவிச்சதும் இங்கதான். அன்னிக்கு அவ குழந்தையப் பெத்தெடுத்துகிட்டு வர்றதுக்கு முன்னால...! தீயைத்தான் நான் தின்னுகிட்டு இருந்தேன். அந்த அளவுக்கு மன உலைச்சல். அப்பப்பா!”. தொண்டையில் இருந்ததை காரித் துப்பிக் குரலை நன்றாக்கிக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தான். “இன்னிக்கு மாதிரி அன்னிக்கு ஒன்னும் இல்லயே?
இத்தன வசதிங்க ஒன்னும் இல்லயே? முப்பது நாப்பது வருஷங்களுக்கு முன்னால நடந்த கதையாக்கும். செல்வியம்மா டாக்டர் இருந்ததுனால தப்பிச்சேன்னு சொல்லணும்”. அவன் கோயிலை நோக்கிக் கைகளைத் தூக்கித் தொழுது கண்களை மூடிக்கொண்டான். மீதியைச் சொல்வதற்காக எரிந்து அணைந்து கொண்டிருந்த சிகரெட்டைக் கடைசித் தடவையாக இன்னும் ஒரு முறை ஊதினான்.
“இவளோட அம்மா, அதாவது என்னோட மனைவி ஒரு நோயாளி. கர்ப்பிணியானதுக்கு அப்புறம் உடம்பு இன்னும் மோசமாயிடுச்சு. பாறசாலையைச் சேர்ந்த செல்வியம்மா டாக்டர்தான் இந்த ஆஸ்பத்திருயில முக்கியமான பிரசவ டாக்டர்”. அந்தக் காலத்தையே கண்ணில் காண்பது போல அவனுடைய முகம் மலர்ந்தது.
நாங்க நெய்யாற்றங்கரா காரங்க. எனக்கு சிட்டின்னு சொன்னா திருவனந்தபுரம்தான். எல்லாத்துக்கும் வண்டி ஏறி இங்க வரணும். ஒரு தடவ வந்தா பல வேலைங்களயும் பாத்துக்கு போலாம்”. முடிந்த சிகரெட்டை கீழே போட்டு மிதித்து அணைத்தான். இளம் சந்தனக் கலர் டெர்லின் ஷர்ட்டும் வேட்டியும் அணிந்து கொண்டிருந்தான்.
நெற்றியில் சந்தனப் பொட்டு. தாடி உரோமங்கள் நிறைந்து எழும்பி அடங்கிய அந்த முக பாவம் அவனுக்கு ஒரு சாமியார் போன்ற தோற்றத்தை அளித்தது. அவனுக்கு ஒரு தனித்துவமான செல்வம் இருப்பது போல எனக்குத் தோன்றியது. மீதிக் கதையைக் கேட்பதற்காக நான் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டேன்.
“அன்னிக்கு இன்னிக்கு மாதிரி வண்டிங்களும் வள்ளங்களும் இல்லயே? கவர்மெண்ட் பஸ்தான் சரணம். உடம்பு முடியாத இவளயும் இழுத்துகிட்டு நான் தம்பானூர்ல இறங்குவேன். ஆஸ்பத்திரிக்கு வருவோம். அன்னிக்கு காலுக்கு நல்ல ஆரோக்கியம் இருந்துச்சு. நல்லா ஓடியாடி வேல செய்யலாம். ஆனா என்ன? மனசு தளர்ந்து போச்சுன்னா போனதுதான்!
இவளுக்கு வேணுங்கறத வாங்கிக் கொடுத்து டாக்டர் செல்வியம்மாவப் பாக்கப் போவோம். அப்புறம் இவளுக்கு வீட்டிலும் சிசுருஷைநடக்க ஆரம்பிச்சது. நம்ம நாயன்மார் சாதியில பிறப்பு, கல்யாணம், சாவு எல்லாம் கொண்டாட்டங்கதானே? கர்ப்பமாயிருக்கறதச் சொல்றது, பிரசவமா இருக்கறப்ப வந்து பாக்கறது, பலகாரங்களோட வரிச வைக்கறது... எல்லாம் ஆசாரங்கதானே?
இதற்கு நடுவில் முதல் பிரசவத்திற்காக வந்திருந்த புருஷன்களில் ஒருவனுடைய மொபைலில் தமிழ்ப் பாட்டு பாடி அழைத்தது. அவன் பட்டென்று பேசி அழைப்பைத் துண்டித்தான். “அவசியமான அழைப்புங்களக் கட் செய்யாதீங்க. விவரம் தெரிஞ்சுக்கறதுக்காக அவங்க அடுத்த முனையில காத்துகிட்டு இருப்பாங்க”. மாமா இளம் வயதுக்காரனைத் திட்டினான்.
“அன்னிக்கு இந்த மாதிரி கையில எடுத்துகிட்டு நடக்க வசதியா போன் ஒன்னும் இல்லயே? ஒரு பஞ்சாயத்துல ஒரு லேண்ட் போன் இருந்தா அதுவே பெரிய புண்ணியம். எங்க சுத்துப்புறத்துல போன் ஒரு இடத்துலயும் இல்ல. விவரம் தெரிஞ்சுக்கணும்னா ஆளு வரணும், இல்ல போய்ப் பாக்கணும். இவளோட விஷயத்துல எல்லாருக்கும் ஒரே கவலை.
அன்னிக்கு எங்க வட்டாரத்துல பிறக்கற குழந்தைங்க எல்லாம் செல்வியம்மா டாக்டரோட கையில இருந்துகிட்டுதான் அது உலகத்த முத தடவையாப் பாக்கும். டாக்டருன்னு யாரும் கூப்பிடறது இல்லை. அம்மான்னுதான் சொல்வாங்க. காச கையால தொடமாட்டாங்க. உயிரத் தொடற தெய்வத்த போல கர்ப்பிணியோட வயித்தத் தொடுவாங்க.
சில பெரியவங்க சொல்வாங்க. புதுசாக் கல்யாணம் ஆன பையங்ககிட்ட “டேய். பிரசவத்துக்கு செல்வியம்மா டாக்டர் போதும். புரியுதா?”. அந்தப் பகுதியில நடக்கற எல்லாக் கல்யாணத்துக்கும் செல்வியம்மா டாக்டருக்கு அழைப்பு கொடுக்கறது வழக்கம். “அம்மா... தாயே... வரணும்னு சொல்லி கால்ல விழுந்து வரச்சொன்னா அவங்ககிட்ட டாக்டரம்மா சண்டை போடுவாங்க.
பெரும்பாலான கல்யாணத்துக்கும் நேரத்த ஒதுக்கிவச்சுட்டு வந்துடுவாங்க. பட்டுப்புடவை கட்டிகிட்டு அலங்காரமா வருவாங்க. கழுத்து நிறைய ஆபரணங்க. மரத்தால செதுக்கியிருக்கற வேலப்பாடுங்களோட நடுவுல தங்கட்தால ஆன சிலுவை. அது பெரிய நிறஞ்ச மார்புல கிடந்து ஆடும். மண்டபத்துக்குள்ள வந்து மணப்பொண்ண ஆசீர்வதிப்பாங்க. அவளுக்கு வெட்கம் ஏற்படற மாதிரி உரத்த குரல்ல சொல்வாங்க
“அடிப் பொண்ணேய். அதையும் இதையும் சொல்லி காலத்த தாமதிக்காத. சீக்கிரமா ஒரு குழந்தயப் பெத்துக்கப் பாரு. பயப்படவேணாம். உன்னோட பிரசவத்த நான் பாத்துக்கறேன்”. புதுப்பொண்ணு வெக்கத்தோடு நிக்கறப்ப அவளோட கன்னத்துல செல்லமா ஒரு கிள்ளு கிள்ளிட்டு மண்டபத்தை விட்டு இறங்கிப் போவாங்க. வெள்ளை நிற அம்பாசிடர் காரோட கதவத் திறந்து பிடிச்சுகிட்டு டிரைவரு நிப்பாரு.
கல்யாணத்துக்கு வந்தா சாப்பாட்டுக்காக நிக்கமாட்டாங்க. பொண்ணுக்கு வாழ்த்து சொல்லி ஏதாச்சும் அன்பளிப்பை கொடுத்துட்டுப் போவாங்க. அம்பாசிடருல ஏறி சுத்திலும் இருக்கறவங்களப் பாத்து கை ஆட்டுவாங்க. மந்திரி வந்துட்டுப் போனது மாடிரி ஒரே கலகலப்பா இருக்கும். உண்டாகும். என்னோட கல்யாணத்துக்கும் வந்தாங்க.
இவள கிள்ளி சீக்கிரமே ஒரு குழந்தயப் பெத்துக்கன்னும் சொல்லிட்டுப் போனாங்க”. வயதான மாமா கதையைச் சொல்வதற்கு நடுவில் பெட்டிக்கடையின் அடியில் இருந்து ஒரு நாய்க்குட்டியின் அழுகை சத்தம் கேட்டது. இரண்டு நாய்க்குட்டிகள் அம்மா நாயின் மார்பைச் சப்பிக்கொண்டு கிடந்தன. அவன் இன்னொரு சிகரெட்டையும் பற்ற வைத்தான்.
சிகரெட் மணம் சுற்றிலும் படர்ந்தது. “செல்வியம்மா டாக்டர் சொன்னது மாதிரியே இவளும் பட்டென்று கர்ப்பிணியாயிட்டா. செக் அப்பும் மருந்துங்களும் எல்லாம் டாக்டரம்மா தான். ஊர்க்காரங்க சொல்ற மாதிரி தோணிச்சு. ஆனா அத்தனயும் சத்தியம். செல்வியம்மா டாக்டர் கூட இருந்தா தெய்வமே கூட இருக்கறது மாதிரிதாண்டா.
அப்பறம் எதுக்காகப் பயப்படணும்? குழப்பம் இல்லாம மாசங்க சீக்கிரமாவே கடந்து போச்சு. பிரசவ தேதியும் நெருங்கிச்சு. நாங்க இங்க வந்துதான் அட்மிட் ஆனோம். இவளுக்கோ பயங்கர வலி. டெலிவரி ரூமுக்குக் கொண்டு போகும் போது அழுகைன்னா ஒரே அழுகை. நான் வேர்த்து விறுவிறுத்துப் போய் வெளியில நின்னுகிட்டு இருந்தேன்.
செல்வியம்மா டாக்டர் வெளியில வந்தாங்க. கொஞ்சம் குழப்பம் இருக்குன்னு சொன்னாங்க. கர்ப்பத்துல குழந்த குடுங்கிப் போய்க் கிடக்குது. நான் அம்மனை பிராத்தனை செஞ்சேன். தளர்ந்து போய் இருந்தேன். கூட இருந்தவங்க எல்லாரும் ஓடி வந்தாங்க. அழுகைக்கு நடுவுலயும் நான் டாக்டரோட நேரத்தப் பாத்துகிட்டே இருந்தேன்.
நான் அலறிகிட்டு இருந்ததப் பாத்து மத்தவங்க “டாக்டர் இருக்காங்க இல்லயா? மத்தவங்க சண்டைக்கு வருவாங்க”ன்னு சொல்லி உபதேசம் செஞ்சாங்க. செல்வியம்மா டாக்டர் எனக்கு பக்கத்துல வந்தாங்க. “டேய். நீ நெய்யாத்தங்கரக்காரன் தானே? அழுதுகிட்டு இருக்கியா? அடேய். உங்கிட்ட மட்டும் ஒரு விஷயம் சொல்லட்டுமா?”.
என்னையும் அழைத்துக்கொண்டு கொஞ்ச தூரம் தள்ளிப் போய்நின்றார். வார்டுல இருந்தவங்க எல்லாரும் திகைத்துப் போய் நின்னுகிட்டு இருந்தாங்க”
“உன்னோட பேரு என்ன?”. “நான் பேரை சொன்னேன்.
செல்வியம்மா டாக்டர் லேசா ஒரு சிரிப்பு சிரிச்சாரு. “டேய். குழந்தைக்கு புத்தி இல்லைன்னா நினைக்கற? குழந்தைன்னு சொன்னா பாதித் தெரிஞ்ச ஒரு மனுஷண்டா. அதாவது, பாதி விழிச்சுகிட்டு இருக்கற ஒரு மனுஷன். ஒவ்வொரு குழந்தைக்கும் புத்தியோட ஒரு மூளையும் இருக்கு. எல்லா டாக்டருங்களுக்கும் இது தெரியும். யாரும் வெளியில சொல்றது இல்ல. உண்மையில குழந்தை அது இல்ல. காட்டுல போய் மாட்டிகிட்டா நாம எப்படியாச்சும் வழியக் கண்டுபிடிச்சு வெளியில வருவோம் இல்லயா? அந்த மாதிரி சொந்தமா வழியக் கண்டுபிடிச்சு உன்னோட குழந்தையும் வெளியில வரும். தைரியமா இரு”. சொல்லிட்டு டாக்டரம்மா போனாங்க. அவங்க சொன்னது மாதிரியே நடந்துச்சு. ஒரு குழப்பமும் இல்லாம குழந்தை வெளியில வந்துச்சு. அதனால நீங்க யாரும் டென்ஷனாக வேணாம் பசங்களா. சரி. நான் அங்க போயிட்டுவரேன்”. அவன் அதைச் சொல்லிவிட்டு போனான்.
“பாதி தெளிஞ்ச மனுஷன்தான் குழந்தை”. மாமா கதை சொல்லி முடித்ததை நான் நினைத்துக் கொண்டேன். பெட்டிக்கடையின் அடியில் இருந்து வெளியில் வந்த நாய்க்குட்டி கண்களைத் திறந்து வெளியுலகத்தைப் பார்த்தது. எனக்கு உடனே ரஜினியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. நான் வார்டை நோக்கி வேகமாக நடந்தேன்.
(குறிப்பு- தைக்காடு, தம்பானூர், நெய்யாற்றங்கரா, திருவனந்தபுரம் – ஊர்களின் பெயர்கள். மாமா- வயதான ஒரு மனிதன்)