“அவசியம் இல்லாத பழய சாமானுங்கள ஒன்னும் புது வீட்டுக்கு எடுத்துட்டுப் போக வேணாம்” மகனுடைய கருத்து. பெரிய அட்டைப் பெட்டிகளில் கட்டி வைத்த சாமான்களை அவன் ஒவ்வொன்றாக எடுத்துத் தரம் பிரிக்க ஆரம்பித்தான்.
“புதுச வைக்கறதுக்கே இடம் போதாது. அப்புறம்தானே பழசு?”. அவனுடைய கருத்தை மனைவி ஆதரித்தாள்.
புது மனை புகு விழா முடிந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தன என்றாலும் புது வீட்டில் அடுக்கி வைப்பதும் பிறகு அதை மாற்றி வைப்பதும் தொடர்ந்து கொண்டேயிருந்தது. “அப்பா. இந்த பழய ரேடியோ எதுக்கு? புராண காலத்து சாமான்?”. “அது அப்பாவோட கடந்த காலத்துப் பொக்கிஷம்”
மனைவி சிரித்துக் கொண்டே தொடர்ந்தாள். “அத அப்பாவோட அறையில வச்சுடு”. “சரிதான்”. கடந்த காலத்தின் நினைவுகளாக அதன் நறுமணம் என் மனதிற்குள் வியாபித்தது. லேசான குளிர் அடிக்கும் காலைப் பொழுதில் வானொலியில் பக்திப் பாடல்கள் முடியும்போது அப்பா எண்ணைக் குப்பியைத் திறப்பார்.
அடுத்தாற்போல வரும் வேளாண் செய்திகளின் ஆரம்ப இசைக்குத் தாளம் பிடிப்பது போலத்தான் அப்பா எண்ணையைத் தலையில் தடவுவார். சாணம் மெழுகிய தரையில் பாயில் படுத்துக்கொண்டிருக்கும் என்னால் அதைத் தெளிவாகப் பார்க்கமுடியும். பெரிய பாயை விரித்து அதற்கும் மேல் ஒரு கெட்டிப் பாயை விரித்துதான் நாங்கள் படுத்துக்கொள்வோம்.
வீட்டில் இருந்த ஒரே ஒரு இருக்கையான கயிற்றுக் கட்டிலில் அப்பா இருப்பார். உயரத்தில் வைக்கப்பட்டிருந்த ரேடியோவில் இருந்து வரும் சான்றோர் செய்தியை கேட்டபடிதான் சில நாட்களில் நான் கண் விழிப்பேன். சில சமயங்களில் பக்தி பாடல்களைக் கேட்டபடி எழுந்திருப்பது உண்டு. இருந்தாலும் எழுந்திருக்க மனது வராமல் இன்னும் கொஞ்சநேரம் கண்களை மூடிக்கொண்டு பாயில் சுருண்டு படுத்துக் கொண்டிருப்பேன். அப்போது ஒரு நறுமணம் அறை முழுவதும் நிறைந்து காணப்படும். ரேடியோ நிகழ்ச்சிகளின் நேரத்தை அனுசரித்துதான் அப்பாவுடைய அன்றாட வேலைகள் இருக்கும்.
மாநில செய்திகள் வாசிக்கும் போது காபியை குடித்துவிட்டுக் கையில் துணிப் பையில் வைக்கப்பட்டிருக்கும் அடுக்கு கேரியரில் பகல் சாப்பாட்டுடன் அப்பா வீட்டை விட்டு கிளம்புவார். பஸ் ஸ்டாப்புக்குப் போக பத்து நிமிடம் நடக்கவேண்டும். ஏழு பத்திற்கு வரும் பஸ்ஸைப் பிடித்தால்தான் பட்டணத்தில் இருக்கும் கயிறு தொழிற்சாலைக்கு எட்டு மணிக்குப் போய்ச்சேரமுடியும்.
முனிசிபாலிட்டியில் சங்கு ஊதும்போது கயிறு தொழிற்சாலையின் கேட் மூடப்படும். அதனால் சாப்பாடு தயாராக தாமதமானாலும் ரேடியோவில் செய்திகளுக்கு அடுத்த நிகழ்ச்சி முடியும்போது அப்பா படியிறங்கியிருப்பார். மழைக்காலத்தில் ஈரமான விறகுகளும் நனைந்து போன ஓலைகளுமாக எரிய மறுக்கும் அடுப்பில் தீயை மூட்டி கலங்கிய கண்ணும் சிவந்து போன முகமுமாக அம்மா பகல் சாப்பாட்டை தயாரித்து தருவார்.
அப்போது நடந்து போகும் அப்பாவை ஓடிப் போய் ஹெல்த் சென்ட்டர் வளைவில் பிடித்து நிறுத்தி சாப்பாட்டுப் பையைத் தருவேன். ஹெல்த் செண்ட்டரில் இருந்து கிடைக்கும் சத்து மாவையும், உப்புமாவையும் சாப்பிட்டுத்தான் வேகமாக நடந்து போகும் அப்பாவை நான் ஓடிப் போய் பிடிக்கிறேன் என்று அம்மா சொல்வதுண்டு.
ஒவ்வொரு நாளும் சாயங்கால நேரத்திலும் ரேடியோ கேட்கப் பக்கத்து வீட்டு மனோகரன் மாமாவும் அவுசேப் மாமாவும் சரியான நேரத்துக்கு வந்து விடுவார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் அதிகமாக வருவார்கள். சனிக்கிழமை இரவு எட்டு மணிக்கு அரை மணி நேர நாடகம் ஒலிபரப்பாகும்.
நாடகத்தில் நடித்தவர்களும் கதை எழுதியவர்களும் நெருங்கிய சொந்தக்காரர்கள் போலக் கருதப்பட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பதே காலுக்கு தொடர் நாடகம். ஒரு நாடகத்தை முழுவதும் தொடர்ந்து கேட்டுமுடிக்க நான்கைந்து ஞாயிற்றுக் கிழமைகள் ஆகும். அதனால் சனிக் கிழமை நாடகத்தைதான் எல்லோருக்கும் பிடிக்கும்.
இரவில் ராந்தல் வெளிச்சத்தில் சில நாட்கள் அப்பாவும் அவுசேப் மாமாவும் சர்ச்சை செய்துகொண்டிருப்பதைக் கேட்கமுடியும். மூன்று பாட்டரிகள் உள்ள ரேடியோ அரிதாக வேலைநிறுத்தம் செய்யும். ரேடியோ பாடவில்லை என்றால் அப்பாவுக்கும் உடம்பும் மனதும் சரியில்லாமல் போய்விடும்.
முதலில் உடம்பு சரியில்லாமல் போவது ரேடியோவுக்கா இல்லை அப்பாவுக்கா என்பதை புரிந்து கொள்ளமுடியாது. எப்படி என்றாலும் ஒரு ஆளுடைய நோய் இன்னொருவரையும் பாதிக்கும் என்பது நிச்சயம். ரேடியோ இல்லை என்றால் அப்பா யாரோடும் பேசமாட்டார். அதிகக் கோபம் வரும்.
இரண்டு நாட்களுக்குக் கூடுதலாக ரேடியோவுக்கு பாடாமல் இருக்கமுடியாது. அப்பாவும் அதற்கு அனுமதிப்பதில்லை. உடம்பு சரியில்லை என்றாலும் பட்டணத்தில் இருக்கும் ரேடியோவை பழுது பார்க்கும் கடை வைத்திருந்த சுரேஷ் அண்ணனை அப்பா கூட்டிக்கொண்டு வருவார்.
நாங்கள் ஸ்கூலுக்குப் போகும் வழியில்தான் அந்த அண்ணனுடைய வீடு இருந்தது. ரேடியோ ரிப்பேர் செய்யும் ஆள் என்ற நிலையில் எனக்கு அந்த ஆளை நான் அதிகமாக மதித்தேன். வெளிப்பக்கம் இருந்த ஸ்க்ரூவை கழற்றி பேட்டரிகளை வெளியில் எடுத்து ஸ்ப்ரிங்கையும் பேட்டரியின் வெளியிலும் படர்ந்திருக்கும் துருவை ப்ளேடால் சுரண்டி அகற்றி ரேடியோவை அந்த ஆள் மறுபடியும் பாடவைப்பதை ஆச்சரியத்தோடு நான் பார்த்துக் கொண்டிருப்பேன்.
சில சமயங்களில் பேட்டரி கசிந்து வெளியில் வந்தாலும் ரேடியோ பாடாது. மேலிருந்து ஒரு குட்டிக் குழந்தையை எடுப்பது போலதான் அப்பா எப்போதும் ரேடியோவை கீழே இறக்குவார். கூடுதல் பாதுகாப்புக்காக ரேடியோவை பத்திரமாக எடுக்க ஒரு கம்பியும் கொடுக்கப்பட்டிருக்கும். ரேடியோவின் சத்தம் குறைந்து பாட்டில் ஒரு நடுக்கம் ஏற்படும்போது ஒரு நொவீனோ பேட்டரியை வாங்கி ஸ்ப்ரிங்கோடு இருக்கும் பகுதியிலும் அப்போது மிகவும் மேலாக இருக்கும் பேட்டரியையும் எடுத்து மாற்றி ரேடியோவை பாடவைப்பார். அப்பாவைத் தவிர வீட்டில் வேறு யாருக்கும் ரேடியோவைத் தொட அனுமதி இல்லை.
இல்லாவிட்டாலும் தரையில் இருந்து அப்பாவுக்கு மட்டும்தான் ரேடியோ ஸ்விட்ச் எட்டும். மழைக்காலமாகும்போது மேற்பகுதியில் வேயப்பட்டிருக்கும் ஓலைக் கூரையில் இருக்கும் விரிசல்கள் வழியாக தண்ணீர் சொட்டு சொட்டாக வீட்டிற்குள் விழும். ஆகாயக் கீறல்கள் திறப்பது போன்ற துவாரங்களை துணிக் கடை பிளாஸ்டிக் கவர்களையும் ஆஸ்பத்திரியில் இருந்து கிடைத்த எக்ஸ் ரே பிலிம்களையும் சொருகி வைத்து அப்பா அந்த ஓட்டைகளை மூடுவார்.
சில இரவுகளில் நாங்கள் படுத்துக் கிடக்கும் பாயில் மழைத் தண்ணீர் விழும்போது சமையலறையில் இருந்து அம்மா பாத்திரங்களை எடுத்துவந்து நிரப்பி வைப்பார். எல்லா வருடங்களிலும் சரியான நேரத்தில் கூரையில் புதிய ஓலைகளை மாற்றுவது இல்லை. அதனால்தான் கூரையில் ஓட்டைகள்.
அப்பாவுக்கு கம்பெனியில் இருந்து போனஸ் கிடைக்கும்போது மட்டும்தான் ஓலைகளை மாற்றும் வேலை நடக்கும். ஓலை மாற்றுவது என்பது எங்களுக்கு ஒரு திருவிழா. ஐந்து அண்ணன்களும் அப்போது வேலை செய்வார்கள். முதலில் இரண்டு பேர் ஊர்ந்து ஊர்ந்து கூரை மேல் ஏறுவார்கள். கீழே இருப்பது போல இரண்டு கால்கலையும் வைத்துக்கொண்டு மேல் கூரையில் கட்டுகளை அரிவாளால் வெட்டுவார்கள். பழைய ஓலைகள்தான் முதலில் கீழே விழும்.
ஒட்டிப் பிடித்திருக்கும் ஓலைகளில் கீழே இருப்பது போன வருஷத்திலும் அதற்கும்மேல் இருப்பது அதற்கும் முந்தைய வருஷத்திலும் போடப்பட்டவை. மிகவும் பழையதாகப் போன ஓலைகளை மாற்றி, கடந்த வருஷத்து ஓலைகளை அப்பா தனி கவனத்துடன் வைப்பார். பழைய ஓலைகளோடு சேர்த்து அவற்றைதான் இந்த முறை கட்டவேண்டும்.
பழைய ஓலைகளை ஒன்றுசேர்த்து கட்டி வைத்து எரித்து பச்சை ஓலைகளை அந்த நெருப்பில் இட்டு வாட்டி எடுப்பது இன்னொருவனுடைய வேலை. ஓலைத் துண்டுகளை கட்டுகளாக கட்டி துடைப்பம் போன்ற வடிவத்தில் மாற்றுவார்கள். ஓலைகள் முழுவதும் மாற்றி முடித்தவுடன் வீடு முழுவதும் ஒரே வெளிச்சமாக இருக்கும். மேலே இருக்கும் துணிமணிகளில் அழுக்கு படியாமல் இருப்பதற்காக பாய் விரித்துப் போடப்பட்டிருக்கும். பெரிய மரப்பெட்டியிலும் துணிமணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். கூரை வேலை எல்லாம் முடித்து இறங்கும்போது மணி பத்தாகிவிடும். கஞ்சியைக் குடித்துவிட்டுதான் மீதி வேலை.
புதுக்கூரை போடும் வேலை ஞாயிற்றுக் கிழமைகளில்தான் நடக்கும். ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ரேடியோவில் நிகழ்ச்சிகள் இருந்து கொண்டேயிருக்கும். பதினோரு மணிக்கு குழந்தைகள் உலகம் நிகழ்ச்சியில் ரேடியோ மாமாவிடம் கேள்வி கேட்கும் பகுதி ஒலிபரப்பாகும். எத்தனையெத்தனையோ சந்தேகங்களுக்கு அப்போது பதில் கிடைக்கும்.
கூரை போடும் போது மூன்று பேர் மேல் கூரையில் இருப்பார்கள். ஓலை எடுத்துக் கொடுக்க இரண்டு பேர் கீழே இருப்பார்கள். கூரை வேலை முடிந்தால் அப்பா முதலில் செய்வது ரேடியோவை அதற்குரிய இடத்தில் பத்திரப்படுத்தி வைப்பதுதான். கான்க்ரீட் வீட்டுக்கு குடும்பம் மாறியபோதும், இணைய தள வசதி வந்த பிறகும் கூட எங்களுடனேயே வந்தது ரேடியோ மட்டும்தான்.
அப்பா இறந்து போன நாள் அன்றுதான் ரேடியோ கடைசியாக பாடியது. சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு ரேடியோவை பாடவைக்க முயற்சி செய்த போதும் அது அசைந்து கொடுக்கவேயில்லை. அதைச் சரி செய்ய மனது வரவில்லை. அப்பா இல்லாத வீட்டில் பாடாத ரேடியோ என் கடந்த காலத்தின் குரல்தானே?