நகரத்தில்தான் இப்போது இருக்கிறான் என்ற விவரத்தைத் தவிர, அவன் எங்கே இருக்கிறான் என்று துல்லியமாகத் தெரியவில்லை. கிரிமினல்கள் வாழும் இடமான அந்தக் காலனிக்கு உள்ளேதான் இருக்கிறான் என்று பிறகு இன்னும் கொஞ்சம் விவரம் கிடைத்தது. போன் நம்பர் உண்டு. அது வழியாகத்தான் செய்ய வேண்டியதைச் சொல்லிக் காரியத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிறிது நாட்களாகவே அவனைக் கண்டுபிடிப்பது என்பது அந்த ஆளுடைய வாழ்வின் அன்றாடச் செயல்களில் ஒன்றாக இருந்தது. அதனால் அவனைப் பற்றிக் கேட்பது எதையும் அந்த ஆள் மனதில் அடுக்கி வைத்தான். சாக்கடை வாய்க்காலாக ஓடும் இடத்துக்கு அருகில்தான் இருந்தது அந்தக் காலனி. முன்பு அந்த வழியாகப் போகும் போது மூக்கைப் பொத்திக் கொண்டுதான் போவான்.
வழியில் எருமைகளும் பசுக்களும் நாய்களும் அலைந்து திரிந்து நடந்துகொண்டிருந்தன. ஈக்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. “வெளுத்த பாபுவோடவீடு எது?”. கடைத் திண்ணையில் உட்கார்ந்திருந்த ஒரு ஆளிடம் அவன் கேட்டான். அந்த ஆள் ஆதரவோடு எழுந்திருந்து பரிவோடு கூடவே வந்து வீட்டைக் காட்டித் தந்தான்.
பாபு யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தான். பொறுமையோடு கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. வெளியில் ஒரு ஆளின் வருகையை உணர்ந்து கொண்டபோது பாபு வீட்டுக்கு வெளியில் தலையை நீட்டினான். வெளுத்த உடம்பு. உடல் பருமனான சிறிய வயதுக்காரன்.
“பாபுதானே?”
“இல்ல”
பட்டென்று என்ன சொல்வது என்று தெரியாமல் வந்தவன் குழம்பினான்.
“எனக்கு உங்களப் பாக்கவேண்டிய வேல இருக்கு”
“நீங்க ஆளு மாறி வந்திருக்கீங்க”. அவன் உள்ளே போக முயற்சி செய்தான்.
“பாபுங்கற ஆளு…”
“சொன்னேன் இல்லயா? என்னோட பேரு வேறொன்னு”
அவனுக்குக் கோபம் வந்தது. அதை வந்தவன் கவனித்தான்.
வந்தவன் அவனை பட்டென்று அப்படி விட்டுவிடத் தயாராக இல்லை. விநாடி வித்தியாசத்தில்தான் பார்க்க முடியாமல் இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வந்தவன் வீட்டுக்குள் நுழைந்தான்.
”நான் உங்களத்தான் பாக்கணும்”
“இங்க யாரையும் வர அனுமதிக்கறது இல்ல. வேல கொடுக்கறவங்களோட பாதுகாப்புக்குதான் அப்படி செய்யறோம்”
விடுவது போல இல்லை என்பதை உணர்ந்து பாபு சொன்னான்.”இந்த விஷயத்துல நீங்க எனக்கு உதவ நிறைய இருக்கு. அதனாலதான் உங்கள நேராப் பாக்க வந்தேன்”
“அதனால உங்களுக்கு பெரிய லாபம் ஒன்னும் இல்ல. எல்லாத்துக்கும் துல்லியமான ரேட் இருக்கு. அது குறையவும் குறையாது. எல்லா இடத்துலயும் பணத்த எறியணும். இல்லாட்டா ஜெயில் இடிஞ்சாலும் தப்பிக்கமுடியாது. சொல்லுங்க. சீக்கிரமா சொல்லுங்க. எனக்கு கொஞ்சம் அவசரவேல இருக்கு” பாபு பொறுமை இழந்தான்.
வந்தவன் மேசைக்கு அந்தப் பக்கம் இருந்தான். “சிட்டி ப்ளாட்டுலதான் இருக்கேன்”
அவன் விவரிக்க ஆரம்பித்தான். “அஞ்சாவது ப்ளோர். அந்தக் கட்டிடத்துல பதினைஞ்சு ப்ளோருங்க இருக்கு. எப்பவும் லிஃப்ட் வேல செய்யறது இல்ல. பெரிய குப்பைத் தொட்டி அதோட ஒரு பக்கத்துலதான் இருக்கு. வெளியில வாட்டர் டேங்க் இருக்கு. ப்ளாட்டக் கண்டுபிடிக்கறதுக்கு உள்ள அடையாளம் இது. அஞ்சாவது ப்ளோரில் 62 ஆவது அறை. அந்த ஆளு தனியாத்தான் இருக்கான். சாயங்கால நேரம்தான் சரியான நேரம். அந்த சமயத்துல கடலை நோக்கி திறக்கும் பெரிய ஜன்னலுக்குப் பக்கத்துல இருந்து புத்தகம் வாசிப்பான். 61ல் ராத்திரி பத்து மணியானாத்தான் ஆளுங்க வருவாங்க”
பாபு காகிதத்தில் சிட்டி ப்ளாட்டுக்கு போகும் சாலை, குப்பைத்தொட்டி, வாட்டர் டேங்க்கின் படங்களை வரைந்தான். வந்தவன் அதை உணர்ச்சி எதுவுமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
பாபு சொன்னான். “வர்றவங்க கிட்ட கேக்கக்கூடாத கேள்வி. இந்த அளவுக்கு உங்களோட வயசுல ஒரு ஆளு என்னை அணுகறது இதுதான் முத தடவை. அதுவும் ஒரு ஆளைக் கொல்ல. வயசு அதிகமாக அதிகமாக பக்குவமும் சகிப்புத்தன்மையும் அதிகமாகும். அப்படிதானே சார்?”
“நிம்மதி இல்ல பாபு. நிறய யோசிச்சேன். அத நானே செஞ்சுடலாம். ஆனா… துணிச்சல் போதாது”
“கேட்டதுக்காக மன்னிச்சுக்கங்க” பாபு பரிவோடு சொன்னான்.
அந்த உணர்ச்சி அவனுடைய உடம்புக்குக் கொஞ்சம் கூட பொருத்தமில்லாததாகத் தோன்றியது. வந்தவன் பாபுவிடம் யாசித்தான். சொன்ன தொகையை பையில் இருந்து எடுத்து பாபுவுக்கு நேராக நீட்டினான்.
“காரியத்த ,செஞ்சு முடிக்காம அட்வான்ஸா காசு வாங்கறது இல்ல சார்”
“பரவாயில்ல. எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு”
“போன் நம்பர் கொடுங்க. வேல முடிஞ்சா நான் உங்களக் கூப்பிடறேன்”
“எப்படியிருந்தாலும் நான் அப்ப இங்க இருக்கமாட்டேன்”
“அப்ப பாக்கலாம் சார்” பாபு அவனுடைய கையைப் பிடித்துக் குலுக்கினான்.
“அப்ப இனிம நாம ஒருத்தர ஒருத்தரு பாக்கப் போறதே இல்ல இல்லயா?”
வந்தவன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
“இன்னொரு தடவ… நீங்கதானே அந்த வெளுத்த பாபு?”
வந்தவனுக்கு அதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது.
“நான் அப்படி ஒரு பேரயும் நிலையா வச்சுக்கறது இல்ல”
அவன் பதில் சொன்னான்.