துளசி மாடத்திற்கு எதிரில் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு வாசல் திண்ணைக்கு வந்த சீதாலட்சுமியிடம் ராகினி சொன்னாள். “மகளே. அஞ்சு வருஷம் முடிஞ்சுப் போச்சு. உயிரோட இருந்திருந்தா இத்தனை நேரம் திரும்பி வந்திருப்பாரு”.கால்களில் சங்கிலி விழுந்ததுபோல சீதாலட்சுமி சட்டென்று நின்றாள். அவள் அம்மாவை உற்றுப் பார்த்தாள்.
“அம்மா இப்ப இப்படிச் சொல்ல என்ன காரணம்? செத்துப் போயிட்டாருன்னு எல்லாரும் சேந்து முன்பே தீர்மானிச்சதுதானே? ஆரம்பத்துல இத ஒன்னும் என்னால நம்ப முடியல. என்னிக்காச்சும் ஒரு நாள் “லட்சுமி”ன்னு கூப்பிட்டுகிட்டு வாசல்படியைத் தாண்டி வருவாருன்னுதான் நம்பினேன். அப்படி ஒரு வரவையும் எதிர்பார்த்து இந்த ஜென்மம் முழுக்கவும் காத்திருக்கவும் நான் தயாரா இருந்தேன்.
அந்தக் குரல் இப்பவும் என்னோட காதுல ஒலிச்சுகிட்டு இருக்கு. காலையில வேலைக்குக் கிளம்பும் போது கட்டிப் பிடிச்சு அன்போட ஒரு முத்தம். சாயங்காலம் “லட்சுமி”ன்னு கூப்பிட்டுக்கிட்டே படியேறி வர்ற ஒரு பாங்கு. வெறுங்கையோட வர்றது இல்ல. இனிப்புப் பொட்டலங்க. இல்ல வேற ஏதாச்சும் இருக்கும்.
சனிக்கிழமையில ரெண்டு மூனு முழம் முல்லப் பூவும் இருக்கும். ஞாயித்துக்கிழமைங்கள்ல ரெண்டு பேரும் சேந்து கோயிலுக்குப் போறது வழக்கம். அப்ப நான் புடவையைக் கட்டிக்கணும். தலையில முல்லப் பூவ வச்சுக்கணும். இதெல்லாம் நான் பாலுவுக்காக கட்டாயம் செய்யவேண்டியது. அந்த மாதிரி நான் இருக்கறதப் பாக்கறதுக்கு பாலுவுக்கு ரொம்பப் பிடிக்கும்.
இத்தனை அன்பான புருஷன் உலகத்துல எங்கயும் கிடைக்கமாட்டாரு. நல்லவங்க நீண்ட காலம் வாழமாட்டாங்கங்கற சொல் வழக்கத்துக்கு ஏத்தமாதிரி அவர நீண்ட ஆயுசோட வாழ தெய்வம் அனுமதிக்கல” இடைவிடாமல் பெய்த பெரு மழையில் கழன்று ஒரு பெரிய மண் மலை அடியோடு பெயர்த்துக்கொண்டு வந்தது.
ஏராளமான ஜீவன்களை விழ்ங்கி கீழே பள்ளத்டாக்கில் பெரிய ஆற்றில்தான் மண் மலை வந்து விழுந்தது! கடினமான மீட்புப் பணியில் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. “சொந்தக்காரங்களோட சம்பவம் நடந்த இடத்துக்கு நானும் போனேன். ஒவ்வொரு உடலயும் கண்டுபிடிக்கறப்ப என்னோட மனசுல ஒரே ஒரு பிரார்த்தனைதான் இருந்துச்சு. கடவுளே! அது பாலுவோடதா இருக்கக்கூடாது”
காணாமல் போனவர்கள் எத்தனை பேர் என்று சரியான விவரங்கள் இல்லை. வாகனங்களிலும் கால் நடையாகவும் போன பலரும் சம்பவத்தில் சிக்கிக் கொண்டார்கள். இறந்து போனவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் பாலுவின் உடல் இல்லை. “கண்டுபிடிக்க முடியலைங்கறதுக்காக செத்துப் போயிட்டாருன்னு நினைச்சுக்கமுடியுமா?”
இந்த எண்ணம் அவளுக்கு கொஞ்சம் ஆறுதல் தந்தது என்றாலும் தெளிவான ஒரு கேள்வி அவளுக்கு முன்னால் பதில் இல்லாமல் நின்றது. அது பாலுவைப் பற்றிதான். ஊர்க்காரர்களும் சொந்தக்காரர்களும் சொந்தமாகத் தீர்ப்பு எழுதினார்கள். ”பாலு செத்துப் போஇட்டாரு! உயிரோட இருந்திருந்தா இதுக்குள்ள நிச்சயமா வந்திருப்பாரு”
ஊர்க்காரர்கள் சொந்தக்காரர்களின் ஊகங்களை நிராகரிக்க அவளால் முடியவில்லை. அவர்கள் சொல்வதிலும் உண்மை இருப்பதாகத் தோன்றியது. எல்லா எதிர்பார்ப்புகளும் அஸ்தமித்து வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாக நின்றது. மகன் துருபதனுடைய முகத்தைப் பார்க்கும் போது அவளால் சாக முடியவில்லை. பாலு காணாமல் போகும்போது அவனுக்கு வயது ஒன்று.
தானும் இல்லாமல் போனால் அவன் அனாதையாகிவிடுவான் என்று அவள் நினைத்தாள். அவனையும் மரணத்துக்கு இட்டுச் செல்வது பாவம். பல கோடி ஜென்மங்கள் கழிந்தாலும் ஆத்மாவுக்கு மோட்சம் கிடைக்காத பெரும் பாவம்! கள்ளம் கபடம் இல்லாத குழந்தை. “இதுக்கு அப்புறமும் அவனுக்காக வாழணும்” ஊர்க்காரர்கள் சொந்தக்காரர்களுடன் சேர்ந்து அவள் தன் மனதுக்கு திரும்பத் திரும்பச் சொல்லிக் கற்றுக் கொடுத்தாள்.
இருந்தாலும் சீதாலட்சுமியுடைய உள் மனதில் இருந்து யாரோ மந்திரம் போலச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். “ஒரு நாள் பாலு வருவாரு” ஆனால் பொறுப்பில் இருப்பவர்களுடைய யோசனைகளைத் தள்ளிவிடவோ, புறக்கணிக்கவோ, தீர்மானங்களுக்கு எதிராக நிற்கவோ. அவளால் முடியவில்லை. அவளுடைய எதிர்ப்புகளும் நியாய வாதங்களும் பலன் தரவில்லை.
மறு கல்யாணம். அதுதான் அவர்கள் எல்லோருடைய தீர்மானம். “அத செஞ்சே ஆகணும்’ முன்னால் வாழ்க்கை கண்ணுக்கு எட்டாத தூரம் வரை நீண்டு நிமிர்ந்து கிடக்கிறது. ஒரு குழந்தையின் அம்மாவும் இளமையோடு இருக்கும் ஒரு பெண்ணுமான அவளால் அந்த தூரம் முழுவதையும் ஒற்றையாக நடந்து கடக்கமுடியும் என்று சொல்லமுடியாது.
கூட ஒரு புருஷன் இருந்தாகணும். அதுதான் வாழ்க்கையின் ஒரு சட்டம். ஒரு முழுமைத்துவம். அவளுடைய எதிர்ப்புகளின், மறுப்புகளின் முனையை ஒடித்தது அம்மாவுடைய நிரந்தரமான நிர்ப்பந்தமும் உபதேசமும்தான். “மகளே. நீ ஒத்துக்கணும். ஒத்துகிட்டுத்தான் ஆகணும். என்னோட காலம் முடிஞ்சா அப்பறம் உனக்கு யாரு இருக்கா?.
சாகற வரைக்கும் அம்மாக்களோட மனசுல பொண்ணுங்களோட ஒரு நெருப்பு போலத்தான்! அது அடங்கணும்னா குணமும் அக்கறையும் உள்ள ஒரு புருஷனோட கையில பொண்ண ஒப்படைக்கணும்”. நந்து பெண் கேட்டு வந்தபோது அம்மா சொன்னாள். “அவன் நல்லவனாக்கும். பாலு மாதிரி உன்னைக் கவனிச்சுப்பான்” நந்து பாலுவுடைய நெருங்கிய நண்பனாக இருந்தான்.
ஒரே கட்டுமான கம்பெனியில் ஒன்றாக வேலை பார்த்தவர்கள். பல காலமாக அவளுக்கும் நந்துவை தெரியும். பல சமயங்களில் பாலுவோடு வீட்டுக்கு வந்ததுண்டு. சாப்பாடு செய்து பரிமாறியதுண்டு. எதுவாக இருந்தாலும் பாலுவுக்கு பதிலாக நந்து இருக்க முடியாது என்ற உணர்வு அவளுக்கு இருந்தது. அந்த பகுத்தறிவோடுதான் வேண்டப்பட்டவர்களுடைய தீர்மானத்துக்கு அவள் சம்மதித்தாள்.
கல்யாணம் முடிந்த முதல் இரவில் ஒரே ஒரு விஷயத்தை பற்றி மட்டும்தான் அவள் அவனிடம் கேட்டாள். “துருபதனை சொந்த மகனா நினைக்கணும்” “உறுதியா” ஆனால் எல்லாம் தாறுமாறாகியது. “பொம்பளைங்க ஆம்பளைங்களோட விருப்பு வெறுப்புகளுக்கு எப்பவும் ஒத்துப் போகணும்” இது ஆண்களின் சுயநலம்.
மகனுடைய பிடிவாத குணம் நந்துவின் நிம்மதியைக் குலைத்தது. ராத்திரியில் ராகினி அம்மாவோடு படுத்துக் கொள்ள அவன் தயாராக இல்லை. ஊணிலும் உறக்கத்திலும் எல்லாம் அவள் கூடவே இருக்க வேண்டும். அவனை ஒரு விஷ ஜீவியைப் போல நந்து வெறுத்தான். எப்படியாவது அவனைத் தவிர்க்க வேண்டிய நிலைக்குக் காரியங்கள் சென்றன.
“என்னால அது முடியாது இல்லயா? தாயா இருக்கும் பொண்ணுங்களுக்கு குழந்தைங்கதான் முக்கியம். உடம்பு ரீதியான ஆசாபாசங்க எல்லாம் அப்பறம்தான். அதெல்லாம் ரொம்ப தூரத்துல. ஒத்துப் போகலைன்னா நாம பிரிஞ்சுடலாம்”. கடைசியில் சீதாலஷ்மி தன் நிலையை உறுதியாக வெளிப்படுத்தினாள். அந்த அளவுக்கு சுககரமாக இல்லாத ஒரு தாம்பத்ய வாழ்க்கை மனதுகளை வெகுதூரம் அகற்றியது.
“எனக்கு நந்து மேல அன்பு இல்ல. அவனோட விருப்பங்களுக்கு என்னால முக்கியத்துவம் கொடுக்கமுடியாது. என்னோட மனசுல இப்பவும் பாலுதான்” இதுதான் நந்துவின் புகாரும். அது ஒருவிதத்தில் சரிதான். “பாலுவ என்னால மறக்க முடியல. தன்னோட வாழ்க்கையில முதல் புருஷனை எந்தப் பொண்ணாலும் மறக்கமுடியாது. இதுதான் பொண்ணோட மனசு”.
காலையில் வேலைக்குக் கிளம்பிப் போனால் ராத்திரியில் எப்போதாவது வருவான். அதுவும் குடிபோதையில் மூழ்கிக் குளித்தபடி… சாந்தியும் சமாதானமும் இல்லாத பொழுதுகள். “மறு கல்யாணத்துக்கு அதிகமா வற்புறுத்தின அம்மா கூட நந்து எப்படியாச்சும் ஒழிஞ்சா பரவாயில்லையேன்னு நினைக்க ஆரம்பிச்சிருக்கா. அந்த அளவுக்கு மோசமான ஆளா இருந்தான் அவன்”
“நாம ஒரு ஜோசியரப் போய்ப் பாக்கணும்”. ராகினி சொன்னாள். “ஏம்மா இப்ப இதச் சொல்ற?”. சீதாலஷ்மி ஆர்வத்தோடு அம்மாவைப் பார்த்தாள். “துருபதனுக்கு இருக்கறது பாலுங்கற ஒரே ஒரு அப்பாதான். பாலு செத்துப்போயிட்டாருன்னு உறுதியாயிடுச்சுன்னா அடுத்த ஆடி அமாவாசைக்கு மகனை கூட்டிகிட்டுப் போய் திதி கொடுக்கணும்.
இல்லாட்டா ஆத்மாவுக்கு மோட்சம் கிடைக்காது. கதியில்லாம அலைஞ்சுகிட்டு இருக்கும். அந்தப் பாவம் துருபதனுக்குத்தான். அப்படி நடக்கக்கூடாது. பாலு அவனோட அப்பா இல்லயா? இரத்த பந்தத்தோட விலய நிச்சயிக்க யாரால முடியும்?” “அதுக்கு ஜோசியரப் பாத்தா என்ன நடக்கும்?”. “சும்மா சொல்லாத மகளே. நாம ரெண்டுல ஒன்ன தீர்மானிக்கணும்” ராகினி சொன்னாள்.
அம்மாவின் கருத்தை ஏற்றுக்கொண்டு அடுத்த நாளே ஜோசியரைப் போய்ப் பார்த்தார்கள். ராசி பார்த்து கணக்கைக் கூட்டிக் கழித்து சொக்கட்டானை உருட்டியபடி ஜோசியர் சொன்னார். “இனிம திரும்ப வர்றதுக்கான சாத்தியம் இல்ல”. சீதாலஷ்மி பதட்டத்தோடு கேட்டாள். “செத்துட்டாருன்னு நினைக்கறதுதான் நல்லது. அதுதான் சரியானதா இருக்கும்”. ஜோசியர் தெளிவாகச் சொன்னார்.
அப்படி நினைத்துதான் இன்னொரு ஆளோடு வாழ ஆரம்பித்தது. சீதாலஷ்மியுடைய உள் மனது நடுங்கியது. கண்களில் ஈரம் படர்ந்தது. “உடம்பக் கூடப் பாக்கமுடியலயே கடவுளே!”. மகனுடன் திதி கொடுக்க போகவேண்டும் என்று முடிவு செய்தாள். மகனோடு மட்டும் தனியாகப் போக முடியாது. கூட ஒரு ஆணின் துணை வேண்டும்.
இரண்டு மூன்று மணி ரயில் பயணம். போதாக்குறைக்கு மழைக்காலம். முதல் நாளே போய் ஏதாவது ஒரு லாட்ஜில் ரூம் எடுக்கவேண்டும். அப்போதுதான் அடுத்த நாள் விடிகாலையில் போய் திதி கொடுக்கமுடியும். அன்போடும் பொறுமையோடும் நந்துவிடம் விஷயத்தை சொன்னாள். கேட்க ஆரம்பித்த போதே நந்து வெடித்துச் சிதறினான்.
“நான் வரல. அவனோட ஆத்மாவுக்கு மோட்சம் கிடைக்கணும்னு எனக்கு எந்த ஒரு கட்டாயமும் இல்ல”. தரும சங்கடத்தோடு மகனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அவள் சிறிது நேரம் அழுதாள். கடைசியில் எங்கிருந்தோ வந்த ஒரு ஆத்ம தைரியத்தோடு சொன்னாள். “பாலுவோட ஆத்மாவுக்கு மோட்சம் கிடைக்கணும்னு எனக்கு நிர்ப்பந்தம் உண்டு.
நீங்க வரலைன்னாலும் நான் என்னோட மகனைக் கூட்டிகிட்டுப் போவேன்.பாலு அவனோட அப்பா. என்னோட மகனுக்காக… அவனோட அப்பாவோட ஆத்மாவுக்காக… திதி கொடுக்கணும். கொடுத்தே ஆகணும்”. ஒரு நிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு சீதாலஷ்மி நந்துவைப் பார்த்தாள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு அவன் ஏதோ யோசனையில் மூழ்கியிருந்தான்.
“முன் பின் தெரியாத ஊருல இந்தக் குழந்தையயும் கூட்டிகிட்டு போறேன். காலம் கெட்டகாலமாக்கும். ஏதாச்சும் நடக்கக்கூடாதது நடந்துடுச்சுன்னா அப்பறம் நானும் குழந்தையும் திரும்பி வரவே மாட்டோம். அந்தக் கடல்லயே உசிர விட்டுடுவோம்”. அவள் நைட்டியுடைய நுனியை எடுத்து கண்களைத் துடைத்தாள்.
“நான் வரேன்”. நந்து பட்டென்று சொன்னான். சீதாலஷ்மி தெளிந்த முகத்தோடு புருஷனைப் பார்த்தாள். முதல் நாளே போனார்கள். மாலை ஆவதற்கு முன்பே அங்கே போய்ச் சேர்ந்தார்கள். திதி கொடுக்கும் இடத்திற்கு அருகிலேயே லாட்ஜில் ரூம் எடுத்தார்கள். போதுமான வசதிகள் எல்லாம் இருந்தன. விடிகாலையில் எழுந்து குளித்து திதி கொடுக்க ஏற்பாடு செய்துள்ள இடத்துக்குப் போனால் போதும்.
ரூமுக்கு போனவுடனேயே நந்து பெட்டியைத் திறந்து மது பான பாட்டில்களையும் கோப்பையையும் மேசை மீது எடுத்து வைத்தான். கூட வரேன் என்று பட்டென்று சம்மதித்ததின் இரகசியம் அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. “ஒரு நல்ல காரியத்துக்குத்தானே வந்திருக்கறோம் நந்து? இன்னிக்கு ஒரு ராத்திரியாச்சும் இத செய்யாம இருக்கக்கூடாதா?”
சீதாலஷ்மி கெஞ்சினாள். “நல்ல காரியம் உனக்கும் உன்னோட மகனுக்கும்தான். எனக்கென்ன நல்ல காரியம்? நான் உங்களோட காவல்காரனாதானே வந்திருக்கேன்? ஒரு தைரியத்துக்கு இது கொஞ்சம் வேணும்” மது போதையின் பலத்தில் தைரியம் காட்டும் ஆண்கள் பலர் இருக்கிறார்கள். சரக்கு உள்ளே சென்றால் புலி. இல்லாவிட்டால் வெறும் எலி.
வார்த்தைகள் இல்லாத போதையின் மயக்கத்தில் ஆழ்ந்தான் அவன். சுய நினைவு இல்லாத அந்த நிலையைக் கண்டு சீதாலஷ்மி ஒரு நிமிடம் வெறுப்போடு பார்த்தாள். ஒரு நிமிடம் நின்றாள். பிறகு வாசல் கதவை மூடிவிட்டு மகனையும் கூட்டிக்கொண்டு பால்கனியில் இறங்கி நின்றாள். அங்கே நின்றால் கடல் பார்க்கலாம்.
கடற்கரையில் பகல் போல பிரகாசம் இருந்தது. திதி கொடுக்க இடங்கள் தயாராகிக் கொண்டிருந்தன. இருட்டில் கிடந்து முரளும் வன விலங்கைப் போல கடல். மீன் பிடிக்கும் படகுகளின் வெளிச்சம் அலைகளில் பிரதிபலித்து சாய்ந்தாடிக் கொண்டிருந்தன. அது வேறு ஏதோ உலகத்தில் இருந்து கடலில் நீந்தி வரும் ஆத்மாக்களின் ஜொலிக்கும் கண்கள் போல இருந்தது.
அந்த விடிகாலைப் பொழுதில் மகனையும் கூட்டிக்கொண்டு சீதாலட்சுமி கடலை நோக்கி சென்றாள். அவர்கள் போனது நந்துவுக்குத் தெரியவே தெரியாது. அவன் மது போதையின் ஆழத்தில் தளர்ந்து போய் உறங்கிக் கொண்டிருந்தான். அந்த அளவுக்கு நெரிசல் இல்லாத திதி கொடுக்கும் இடத்துக்கு சீதாலட்சுமி மகனுடன் போனாள்.
பூசாரி விரலில் பவித்ர மோதிரத்தை அணிவித்தார். மந்திரங்கள் ஒலித்தன. குத்துவிளக்கின் முன்னிலையில் எள்ளும் பூவும் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போதுதான் சீதாலட்சுமி திதி செய்துவைக்கும் ஆளைப் பார்த்தாள். கழுத்தையும் தாண்டி நிற்கும் முடி. நெற்றியிலும் மார்பிலும் தோள்களிலும் எல்லாம் நீட்டமாக திருநீற்றுப் பட்டைகள்.
தெரிந்த ஒரு ஆள்?! ஆனால் யார்? அந்த கேள்விக்கு விடை கிடைக்க்கும் முன்பே ஆத்மாவில் இருந்து யாரோ கூப்பிட்டுச் சொன்னார்கள். “பாலு!” ஜீவனின் ஜீவனாக இருந்தவன். குழந்தையின் அப்பா! மனதில்… புத்தியில் உடல் முழுவதும் சிறியதும் பெரியதுமாக பூகம்பங்கள் வெடித்தன. சுற்றுப்புறம் மறந்து… சுய நினைவு மறந்து ஒரு கனம் அசைவில்லாமல் நின்றாள் சீதாலட்சுமி!
அடுத்த நிமிடம். அவளுடைய உள் மனது துடிதுடித்துக் கொண்டு விழித்தது. “கூடாது! கூடவேகூடாது!”. திதிக்கான இடத்தில் ஏறினாள். விளக்கைத் தட்டிவிட்டாள். எள்ளும் பூவும் சிதறிக் கலைந்து விழுந்தன. அந்த இடம் முழுவதும் அலங்கோலமானது. சீதாலட்சுமி பாலுவை சுற்றி சுற்றி வந்தாள். “பாவம் செய்யாதீங்க. அதுவும் நம்ம மகனை வச்சு”. அவள் பெரிதாக அழுதாள்.
“அசுத்தமாக்காதே… தள்ளி நில்லு”. பாலு அவளுடைய பிடியில் இருந்து விடுபட முயற்சி செய்தான். “புருஷனுக்கு பொண்டாட்டி அசுத்தமான பொருளா?” அவள் பாலுவின் கண்களை உற்று நோக்கினாள். அப்போதுதான் பாலு அவளை உன்னிப்பாகப் பார்த்தான். “லட்சுமி”. அவன் மெல்ல அவள் பெயரை மந்திரித்தான்.
“இது நம்ம மகன். செத்துப் போயிட்டீங்கன்னு நினைச்சு மகனை வச்சு…” வார்த்தைகளை முடிக்க முடியாமல் அவள் விசும்பினாள். அம்மாவோடு சேர்ந்து நின்று மகன் பாலுவை உற்றுப் பார்த்தான். என்ன நடக்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை.
“இது உன்னோட அப்பா. அப்பான்னு கூப்பிடு”. அவள் மகனிடம் சொன்னாள். அவன் மெல்லிய குரலில் மெதுவாக சொன்னான். “அப்பா!”. பாலு மகனை வாரி எடுத்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பான் என்று சீதாலஷ்மி நினைத்தாலும் அவ்வாறு நடக்கவில்லை. அலங்கோலமான திதி கொடுக்கும் தரையில் இருந்து பாலு இறங்கி நடந்தான். “பாலு. நான் உங்களோட மனைவி இல்லயா? இது நம்பளோட பையன் இல்லயா? உங்களுக்குச் சொல்றதுக்கு ஒன்னும் இல்லயா?”.
“பாலு திரும்பி நடந்தான். “நான் என்ன சொல்லணும்? ஒரு காலத்துல நீ என்னோட மனைவியா இருந்த. இப்போ இல்ல”. “பாலு”. மகனை சேர்த்துப் பிடித்துக் கொண்டு அவள் மணல் தரையில் தளர்ந்திருந்தாள். “ஒரு சமயம் நான் உன்னையும் நம்ம மகனையும் தேடிகிட்டு வந்தேன். அன்னிக்கு உனக்கும் நந்துவுக்கும் கல்யாண நாள். அந்த நிமிஷத்துல நான் அனுபவிச்ச ஆத்மார்த்தமான வலியும் வேதனையும் உனக்குப் புரியாது”
நீ அவ்வளவு சீக்கிரமா என்னை மறப்பன்னு நான் நினைக்கல. நினைக்கவேயில்ல லட்சுமி”. “என்னை மன்னிச்சுக்கங்க பாலு. அவ்வளவு காலமும் உங்களப் பத்தி ஒரு விவரமும் கிடைக்காமப் போனதுனால மத்தவங்களோட வற்புறுத்தலுக்கு நான் அடிபணிய வேண்டியதாப் போச்சு”
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவள் தொடர்ந்தாள். “உங்களுக்கு சம்மதம்னா நான் வரேன். இந்த நிமிஷமே உங்க கூட வரேன். நம்ம மகனையும் கூட்டிட்டு போலாம். என்னோட மனசுல உங்களத் தவிர வேற ஒரு புருஷனும் இல்ல” “இனிம அப்படி ஒரு மீள் வரவுக்கு சாத்தியமில்ல லட்சுமி”. “பாலு!”. சீதாலஷ்மி உரத்த குரலில் அலறினாள்.
“அன்னிக்கு அந்த விபத்துல சிக்கிகிட்டு ஆபத்துல மாட்டினப்ப ஆத்தோட மிதந்து போயிட்டிருந்த என்னைக் காப்பாத்தி எனக்கு வாழ்க்கைய திரும்பக்க் கொடுத்த ரெண்டு பேரு இருக்காங்க. அவங்களோட நீண்ட நாள் சிகிச்சையாலும் உபசரிப்பாலும்தான் இப்ப நான் உயிரோட இருக்கேன். அவங்க ரெண்டு பேரு ரங்கன் சாஸ்திரிகளும் அவரோட மனைவி நாகம்மையும்.
இனிம அவங்கள கை விட என்னால முடியாது. அதோட சேந்து அவங்களோட ஒரே மக காஞ்சனாவையும். எல்லாம் தாறுமாறாப் போனப்பறம் அவங்களோட அனுமதியோடதான் நான் உன்னையும் மகனையும் தேடி வந்தேன். அப்போ எல்லாம் முடிஞ்சு போயிருந்துச்சு. அப்பறம் நான் ரங்கன் சாஸ்திரிகள் கிட்டேர்ந்து இந்தத் தொழிலக் கத்துகிட்டேன். அவங்களோடயே வாழ ஆரம்பிச்சேன்.
வயசான அவங்கள பாத்துக்கற பொறுப்பு எனக்கு வந்துச்சு. அவங்களோட அனுக்கிரகத்தோடயும் ஆசீர்வாதத்தோடயும் நான் காஞ்சனாவ கல்யாணம் செஞ்சுகிட்டேன்”. தாங்க முடியாத வேதனையோடு எல்லாவற்றையும் சீதாலட்சுமி கேட்டுக்கொண்டு நின்றாள். பாலு தொடர்ந்தான். “என்னோட மகன் லட்சுமியோட இருக்கான் இல்லயா?
இனியுள்ள காலத்துல நந்துவுக்கு ஒரு நல்ல மனைவியா வாழு. நாம ஒருத்தர ஒருத்தரு மறப்போம். மறந்துதான் ஆகணும்”. அங்கவஸ்திரத்தை விரித்து கழுத்தோடு சேர்த்துப் போர்த்திக்கொண்டு பாலு மணற்பரப்பில் வேகமாக நடந்தான். மகனை கட்டிப் பிடித்துக்கொண்டு மண்ணில் தளந்து போய் விழுந்து சீதாலஷ்மி கூக்குரலிட்டு அழுதாள்.
கடலோரப் பகுதிகளில் ஆட்கள் கூட்டம் குறைய ஆரம்பித்திருந்தது. தெளிந்த ஆகாயத்தின் ஊடே மேகக்கூட்டங்கள் மெல்ல மெல்ல கிழக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன.