திருவனந்தபுரத்தில் ஒரு ப்ளாட். காலை மணி எட்டரை. அங்கே குறும்புகள் செய்தபடி ஓடி விளையாடும் இரண்டு பெண் குழந்தைகள். சமையலறையில் குழந்தைகளுக்கான சாப்பாட்டை பார்வதி எடுத்துக் கொண்டிருந்தாள். அதற்கு நடுவில் அவர்கள் போட சாக்ஸுகளைத் தயார்படுத்தினாள்.
சாப்பாட்டு மேசையில் டிபனை கொண்டுவந்து வைத்தாள். இதற்கு இடையில் குளித்து முடித்து டிரஸ் செய்துகொண்டிருந்த சுரேஷ் பார்வதியிடம் கேட்டான். “நீ எப்ப போற?”. “என்ன? என்ன சொன்னீங்க?. ஏய் குட்டிகளா. கொஞ்சம் பேசாம அமைதியா இருங்க. என்ன? என்ன சொன்னீங்க சுரேஷ்?”
“என்ன சுரேஷ்?”
“நீ எப்ப போறன்னு கேட்டேன்”
“எங்க?”
“ஓ. இப்ப அப்படி ஆயிடுச்சா கத?. நீ தானே இன்னிக்கு நீ படிச்ச பழைய ஸ்கூலுக்குப் போகப்போறேன்னு சொல்லியிருந்த?”
“ஓ. சரிதான். நான் அத மறந்துபோயிட்டேன். பத்தரை ஆறப்ப கிளம்பறேன். அந்தக் கீதாவும் ப்ரியாவும் வரேன்னு சொல்லியிருக்காங்க. ஆனா எனக்கு இதுல ஒன்னும் பெரிசா ஆர்வம் இல்ல. இல்லாட்டாலும் முன்னால படிச்ச இந்த ஸ்கூலுக்குப் போய் என்னத்த எடுக்கப்போறேன் நான்? சும்மா பொழுது போகாத அதுக செய்யற வெட்டி வேலைங்க”. “ஹாங். போகட்டும் விடு. உன்னோட தோழிங்க கூப்பிட்டதுதானே? உனக்கும் ஒரு ரிலீஃப் கிடச்சாப்ப்ல இருக்கும். சும்மா போயிட்டு வா என்னோட டியர். சரி நீ எப்படிப் போகப்போற?”
“சரியான நேரத்துக்கு அவங்க கார்ல வந்துடறதா சொல்லியிருக்காங்க”
அப்படின்னா… நீ கார எடுத்துட்டுப் போ”. “அப்ப நீங்க”. “நான் எப்படியாச்சும் போறேன். இன்னிக்கு சாயங்காலம் நான் குழந்தைங்களயும் கூட்டிகிட்டு அங்க வரேன்”
“ஹும்”. குழந்தைகளைப் பஸ் ஸ்டாப்பில் கொண்டு போய் இறக்கிவிட்டுவிட்டு அவள் வந்தபோது சுரேஷ் கிளம்பிக் கொண்டிருந்தான்.
“கிளம்பிட்டீங்களா? சாப்பாட்ட எடுத்துக்கிட்டீங்களா”. “எடுத்தாச்சு. கவனமா போகணும்”. “சரி”. சுரேஷ் போவதை பால்கனியில் இருந்து அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
உடனே போனை எடுத்து கீதாவைக் கூப்பிட்டாள். “ஹலோ. நீ எங்க இருக்க”
“யெஸ் பாரு. வீட்டுல”. “என்ன வீட்டுலயா? நீ இன்னமும் கிளம்பலயா? நீதானே என்னை போன் செஞ்சு கூப்பிட்ட. நாம படிச்ச ஸ்கூலுக்குப் போகலாம்னு”
“ஆமாம். ஆனா… என் பையனோட மார்க் ரிப்போர்ட் இன்னிக்குதான் கொடுக்கறாங்க.
அவன் பயந்து போயிருக்கான். அவன் இந்த விஷயத்த நேத்து ராத்திரிதான் சொன்னான்”
“அப்ப நீ வரலயா?”
“இன்னிக்கு இந்த வேல அவசியமானதா ஆயிடுச்சேடி. சரி. ப்ரியா இருக்கா இல்ல? அவதான் அவசியமாப் போகணும்னு சொன்னா. அவ வரா இல்லயா? நீங்க போயிட்டு வாஞ்க. போட்டோ எடுக்க மறந்துடாதீங்க”
“சரி சரி. போயிட்டு வந்துட்டு நான் உன்னைக் கூப்பிடறேன்”
போனை வைத்துவிட்டு “ஆமா. இவளும் போட்டோவும்” என்று தன் மனதுக்குள் பார்வதி நினைத்துக்கொண்டாள். “சரி. நேரமாயிடுச்சு. இனிம டிரஸ் செஞ்சுட்டு ப்ரியாவக் கூப்பிடலாம்”. அவள் அறைக்குள் போய் ஆடை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தாள்.
கார் சாவியை எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டினாள். “இவ என்ன போன எடுக்கவேயில்ல? ஒருசமயம் கார் ஓட்டிகிட்டு வராளா இருக்கும்”
படிகளில் இறங்கி பார்வதி காரில் ஏறினாள். சிறிது நேரம் கழித்து போன் அழைத்தது. பார்த்தபோது ப்ரியா. காரை ஓரமாக நிறுத்திவிட்டு போனை எடுத்தாள்.
“ஏய். நீ வந்துட்டியா?”
“ஓ. அத ஏன் கேக்கற? என் புருஷன் ரவியோட குடும்பத்துக்காரங்க திடீர்னு வீட்டுக்கு வந்துட்டாங்க. வசமா மாட்டிக்கிட்டேன். கிளம்ப முடியல. என்ன செய்யறது? நீ இப்ப எங்க போய்ச் சேந்திருக்க?”
“இதோ நான் இப்பப் போய்ச்சேந்துடுவேன்”
“அப்ப நீ ஒரு காரியம் செய். நீ முதல்ல போ. நான் எவ்வளவு லேட்டானாலும் மத்தியானத்துக்குள்ள அங்க வந்துடுவேன்”
“உருதியாத்தான் சொல்றியா?”
“நிச்சயமா”
“ம்”
பார்வதி ஸ்கூலுக்கு முன்னால் போய் காரின் வேகத்தைக் குறைத்தாள். கேட்டுக்கு வெளியில் நின்றாள். ஸ்கூலில் ஒரு சத்தமும் இல்லை.
ஒரே அமைதி. ஹாரனை அடித்துப் பார்த்தாள். பதினேழு பதினெட்டு வயது இருக்கும் ஒரு பையன் வந்து கேட்டைத் திறந்துவிட்டான். உள்ளே நுழைந்தவுடன் ஏதோ ஒரு அதிசய சக்தி அவளை இழுப்பது போலத் தோன்றியது. காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவள் நடந்து அந்தப் பையனுக்கு அருகில் சென்றாள்.
“இன்னிக்கு ஸ்கூல் லீவா?”
“ஹெட் மாஸ்ட்டர் பாஸ்கரன் மாஸ்டர் செத்துப் போயிட்டாரு. ஸ்கூல் அதுக்காக லீவு. அதோ அந்தப் போட்டோவ்ல இருக்கறதுதான் மாஸ்ட்டர்”
பார்வதி அந்த நோட்டீஸைப் பார்த்தாள்.
“அப்பாவோட கையப் பிடிச்சு முத தடவையா ஸ்கூலோட படிங்கள்ல ஏறி நுழைஞ்சப்ப “மக நல்லா வரட்டும்”னு சொல்லி ஆசீர்வாதம் செஞ்ச மாஸ்டர்.
வளர்ந்தபோது பாக்கரன் மாஸ்ட்டர்னு பட்டப் பேரச் சொல்லிக் கூப்பிட்ட அதே மாஸ்ட்டர். முத தடவையா அப்பாவோட கையப் பிடிச்சு ஸ்கூலுக்கு வந்தது… ஸ்டாஃப் ரூமுல வச்சு மாஸ்ட்டர் ஆசீர்வாதம் செஞ்சது… நானும் என்னோட தோழிங்களும் “பாக்கரன் மாஸ்ட்டரே”ன்னு சொல்லி ஓடறது…” அவளுடைய திரைச்சீலை மனதில் படம் போல ஓடின.
அவள் நடந்து மத்தியான சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு கையைக் கழுவும் இடத்தை அடைந்தாள். அங்கே ஒரு பிளாஸ்டிக் பாட்டில் கீழே கிடப்பதைப் பார்த்தாள். அதை எடுத்து ஒரு படியில் பத்திரமாக வைத்தாள்.
அப்போது மெல்ல மெல்ல… மெல்ல… அவளுடைய நினைவுகள் கடந்த காலத்தை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தன.
கையைக் கழுவிக்கொண்டு பாட்டிலில் தண்ணீரைப் பிடித்துக்கொண்டு ஓடும் பார்வதி. அந்த தண்ணீர் அடுத்த கிளாஸில் படித்த ரமேஷ் மீது விழுந்தது. பாட்டிலைக் கீழே போட்டுவிட்டு அழுது கொண்டு ஓடும் பார்வதி. அதை அவன் பார்த்துக் கொண்டு நின்றான். பிறகு எப்போதும் அதே இடத்தில் அவன் பார்வதிக்காக காத்துக்கொண்டு நிற்க ஆரம்பித்தான்.
பார்க்கும்போது அவன் சிரிப்பான். ஆரம்பத்தில் அவளுக்கு பயமாக இருந்தது. நாட்கள் போகப் போக அவளும் சிரிக்க ஆரம்பித்தாள்.
திடீரென்று அடுத்த இரண்டு நாட்கள் கழித்து பார்வதியைக் காணவில்லை.
ரமேஷ் அவளுடைய தோழிகளிடம் விசாரித்தபோது அவர்கள் ஒரு கள்ளச் சிரிப்போடு “அவ இனிம ஒரு வாரம் கழிச்சுதான் வருவா” என்று சொன்னார்கள்.
பார்வதி நிகழ்காலத்துக்குத் திரும்பி வந்தாள். அந்த பிளாஸ்ட்டிக் பாட்டிலை அங்கே வைத்துவிட்டு திரும்பி நடந்தாள். அவள் அப்புறம் ஸ்கூலுக்கு வந்தது முழுப் பாவாடையில்தான். பாவாடை கட்டிக்கொண்டு வந்த அந்த நாட்கள்… நடந்து நடந்து பார்வதி வகுப்பறைகளுக்குச் செல்லும் வழியைப் பார்த்தாள்.
அந்த வழியின் ஒரு ஓரத்தில் ரமேஷும் பதினான்கு வயது பார்வதியும் மட்டும். அப்போது ரமேஷ் ஒரு முத்தம் கேட்க பார்வதி அவன் கன்னத்தில் ஒரு முத்தம் தந்தாள். உடனே அவன் அவளைக் கட்டிப்பிடித்தான். விளையாட்டு ஆசிரியர் அதைப் பார்த்துக் கொண்டே வந்துவிட்டார்.
ஞாபகங்கள் தூரத்திற்கு அகன்று செல்வது போல அவளுக்குத் தோன்றியது. அப்பாவின் வசவுகளும் வார்த்தைகளும் அவள் காதுகளில் வந்து முழங்கின. “என்ன ஒரு அகங்காரம் இவளுக்கு? அடிக்கக்கூடாது.
அடிச்சுக்கொல்லணும் இவள. அப்பவாச்சும் அவமானம் தீரும் இல்ல?
எதுக்கும் வக்கில்லாத அந்தப் பய ரமேஷ்.
ச்சீ! நினைச்சுப் பாக்கவே அசிங்கமா இருக்கு” அம்மாவும் அதையே திருப்பிச் சொன்னாள்.
“இனிம இவ இங்க படிக்கவேணாம். திருவனந்தபுரத்துக்கு அனுப்பிடலாம். அங்க போய் படிக்கட்டும். அதுதான் ஒரே வழி. விடியறதுக்கு முன்னாலயே இந்த ஜந்துவ அங்க கொண்டுபோய் தள்ளிடுவேன் நான்”
வீட்டில் ஜன்னல் கம்பிகளில் முகத்தை வைத்துக்கொண்டு பார்வதி தொலைதூரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் காதுகளில் அப்பா சொன்ன வார்த்தைகள் வந்து விழுந்தன.
அவளுடைய நினைவுகள் கடந்த காலத்தை நோக்கி பாய்ந்தன. ஸ்கூல் வகுப்பறையில் ஜன்னல் கம்பிகளில் முகத்தை வைத்து பார்த்துக் கொண்டிருந்த அவளை யாரோ தட்டுவது போலத் தோன்றியது.
திரும்பிப் பார்த்தாள். சுரேஷ். புன்னகை செய்தாள்.
“இது என்னடா இது? எந்த உலகத்தில இருக்க நீ? நேரம் என்னன்னு தெரியுமா? யாரும் வரல இல்லயா? ஹ ஹ ஹா! உன்னைக் கூப்பிட்டுட்டு நீ போன்ல கிடைக்கலைன்னு ப்ரியா என்னைக் கூப்பிட்டாள்ல்”. அவள் திரும்பி நடந்தாள்.
சுரேஷ் பார்க்காத வகையில் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
சுரேஷ் மறுபடியும் அவளிடம் “கார் சாவியக் கொடு. நான் ஓட்டறேண்”என்றான்.
அப்போது ஸ்கூலில் ஓடி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளும் காரில் வந்து ஏறிக்கொண்டார்கள். “இதுதான் அம்மா படிச்ச ஸ்கூலா?”
“ம்”
“அம்மா. அக்காவுக்கு ப்ரோக்ரஸ் கார்டு கிடைச்சுடுச்சு. கணக்குல மார்க் குறைஞ்சிருக்கு”
பார்வதி நிகழ்கால சம்பவங்களுக்கு நடந்து வந்துகொண்டிருந்தாள். “இல்ல அம்மா. கணக்குல மட்டும் பி க்ரேடு கிடைச்சிருக்கு”
சுரேஷ் எல்லாம் தெரிந்தும் தெரியாத மாதிரி காரை ஓட்டினான்.
“ஆமாமாம். மீதி எல்லாத்திலயும் நூத்துக்கு நூத்து பத்தாக்கும்” சுரேஷ் சொன்னான்.
காருக்குள் இருந்து கூட்டமாக சிரிப்பொலி உயர்ந்தது. கார் மெல்ல வெளியில் வந்து ஓடத் தொடங்கியது.