“குட் மார்னிங் டீச்சர்”
“குட் மார்னிங் டியர்” ஸ்டாஃப் ரூமுக்குப் போகும் வழியில் என்னைப் பார்த்து வணக்கம் சொல்வதற்காக நின்று கொண்டிருந்த அவளுடைய வலது கன்னத்தில் கருத்துப் போன காயம் இருப்பதை நான் கவனித்தேன்.
“கன்னத்துல என்ன காயம்?”
“சமத்துவம்” அவள் பதில் சொன்னாள்.
“சமத்துவமா?” நான் ஆச்சரியப்பட்டேன்.
“ஹாங். சமத்துவம்” அவள் அதே வார்த்தையைத் திரும்பச் சொன்னாள்.
“டீச்சரும் கொஞ்சம் ஜாக்கிரதயா இருக்கணும். அப்பா உங்களப் பாக்கவரேன்னு சொல்லியிருக்காரு”
“அப்படியா? அப்பாவ நான் ஒன்னும் வரச்சொல்லிக் கூப்பிடலயே?”
“டீச்சர் நீங்க பசங்கள தப்பான வழி காட்டறீங்கன்னு சொல்லி அதப் பத்திக் கேக்கறதுக்குதான்”
“யாரு வராங்க?”
“என்னோட அப்பாதான்”
“என்னடா? விவரமாச் சொல்லு”
“அடுத்த வாரம் மாமாவோட மகளுக்குக் கல்யாணம். அப்பாக்கு முன்னால இருந்தே அம்மாவோட வீட்டுக்காரங்களப் பிடிக்காது. பாக்கவும் கூடாது. ஒரு விஷயத்துலயும் அம்மா வீட்டுக்காரங்களுக்கு உதவி செய்யமாட்டாரு. ஒத்துழைக்கவும் மாட்டாரு”
“உன்னோட வீட்டு விஷயங்கள எதுக்காக நீ எங்கிட்ட சொல்ற?” நான் கேட்டேன்.
விஷயத்த விவரமாச் சொல்றப்ப டீச்சருக்குப் புரியும்”
அவள் என்னுடைய கையைப் பிடித்துக் கொண்டு சொன்னாள். “அம்மாவோட வீட்டுக்கு எதுக்குப் போனானாலும் தொட்டதுக்கும் துடச்சதுக்கும் எல்லாம் அப்பா சண்ட போடுவாரு” எதுவும் செய்ய இயலாதவளாக அவள் சொன்னாள்.
“அம்மா ஒன்னும் சொல்லமாட்டாங்களா?” நான் கேட்டேன்.
“ஓ! சொல்லிட்டாப் போதும். வீட்டுக்காரங்களோட அஞ்சு தலமுறை முன்னால இருந்த அம்மா வீட்டுக்காரங்களயும் சேத்து வச்சு அப்பா திட்டுவாரு” அதைச் சொல்லும் போது அவளுடைய கண்களில் இருந்து தீப்பொறி பறந்தது.
“கல்யாணத்துக்குப் பத்திரிக வைக்க மாமாவும் மாமியும் வந்தப்பவே அப்பா அவங்களுக்கு முகம் கொடுக்கல. அம்மாவ சங்கடப்படுத்தாம இருக்க அவங்க வேற எதயும் சொல்லல”. அவளுடைய வார்த்தைகளில் விரக்தி நிரம்பி வழிந்தது.
“நாம கல்யாணத்துக்குப் போகவேணாமான்னு அம்மா கேட்டதும் அப்பாவுக்கு ஆவேசம் வந்துடுச்சு. வழக்கம் போல ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பிச்சுட்டாரு”
அவளுடைய கண்களில் பீதி படர்வதை நான் கவனித்தேன்.
“நாங்க போகணும்” பட்டென்று நான் அதைச் சொன்னேன். சொன்னது மட்டும்தான் எனக்கு ஞாபகத்துல இருக்கு டீச்சர். மூஞ்சியப் பாத்து ஒரே ஒரு அடிதான்! கண்ணுல பூச்சிங்க பறக்க ஆரம்பிச்சது”
“நீ கொஞ்சம் பேசாம இருந்திருக்கக்கூடாதா?”
“இது நல்ல கதை”. அவள் தாடையில் கை வைத்துக்கொண்டு சொன்னாள்.
“அப்ப சமத்துவம் என்ன ஆகறது?”
“சமத்துவமா?” நான் கேள்விக் குறியாக நின்றேன்.
“ஹாங். போன வாரம் ஓரியண்ட்டேஷன் க்ளாஸ்” எனக்கு விஷயம் புரிந்தது.
“பெண்ணும் ஆணும் சமமானவங்கதான். கூட இருப்பவங்க நம்மள மாதிரி தனிப்பட்ட ஆளுமை உள்ளவங்கதான். நம்மளோட விருப்பு வெறுப்புங்கள அடுத்தவங்க மேல திணிக்கக்கூடாது. வீடு ஜனநாயகத்தோட முதல் பள்ளிக்கூடமாகணும். இதயெல்லாம் டீச்சர்தானே சொன்னீங்க?” ஆவேசத்தோடு சமத்துவத்தைப் பற்றி அவள் என் முன்னால் திரும்பிச் சொல்லிக் காட்டிய போது ஒரு ப்ரத்யேக பளபளப்பு அந்தக் கண்களில் ஒளிர்வதை நான் பார்த்தேன்.
“அப்பறம்?” எனக்கும் ஆவேசம் பிறந்தது.
“அப்பா வரலைன்னா என்ன? நாங்க போவோம்”
“பேசாதடி” ஒரு இடி முழக்கம் மாதிரி அப்பா அலறினாரு. நானும் விடறதா இல்ல டீச்சர்.
“என்ன? நாங்க அடிமைங்களா?” பதிலுக்கு நானும் கேட்டேன்”
“நிலைமை மோசமா போகுதே கடவுளே!”
என்னையும் அறியாமல் நான் தலையில் கை வைத்தேன். “பொம்பளக் கோழி கூவுதாக்கும்? பொம்பளைங்க ஆளுற வீடா இது? வலிமையானவனோட வீட்டுல பொம்பளைங்கதான் பொறுத்துப் போக வேணும். வாயத் திறக்கக்கூடாது. நாலு சுவருங்களுக்கு அப்பால பொம்பளைங்களோட சத்தம் கேக்கக்கூடாது”
அவள் அந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் புலம்பிக் கொண்டேயிருந்தாள்.
“சமத்துவம் அபத்தமாப் போச்சா?”
“இது நல்ல கூத்து” அவள் பரிகாசத்தோடு என்னைப் பார்த்தாள்.
“டீச்சரே இப்படிச் சொல்லலாமா? வேணுமா இது உங்களுக்கு?” அர்த்தத்தைப் புரிந்துகொண்டு நான் தலையை ஆட்டினேன்.
“பொண்னுங்களுக்குப் படிப்புச் சொல்லித்தர்றது அபத்தமாப் போச்சேன்னு சொல்லலாமா? அடிச்சு நொறுக்கினப்பறமும் கூட அம்மா ஒரு வார்த்தை கூட திருப்பிச்சொல்லல தெரியுமா? அப்பா என்னோட படிப்ப நிறுத்திடுவேன்னு மிரட்டினாரு”
“என்னது? படிப்ப நிறுத்திடுவாரா?” எனக்குப் பயம் ஏற்பட்டது.
“போலீஸ்ல புகாரு கொடுப்பேன்னு நானும் சொன்னேன். அப்பா அப்படி ஒரு பதில கொஞ்சம் கூட எங்கிட்ட இருந்து எதிர்பார்க்கல.
“நீயென்ன அந்த அளவுக்குப் போயிட்டியா?”. அவருக்கு என் மேல இருத கோபம் அம்மாவுக்கு நேராத் திரும்பிடுச்சு.
“அம்மாவத் தொடக்கூடாது. நான் கேஸ் கொடுப்பேன். நானும் விடல டீச்சர்.
குழந்தைஞ்கள தப்பான வழியில நடத்தறவங்க. குடும்ப அமைதிய தகக்கறவங்க”
அவளுடைய அப்பா சொன்ன வார்த்தைகளை அதே போல அவள் என்னிடம் திரும்பச் சொன்னாள்.
“அடோய். உனக்கு என்ன தோணுது?” நான் அவளிடம் கேட்டேன்.
“அப்பாவோட சரிகளுக்கு அவரே சுயமா முடிவு செய்யலாம்னா அம்மாக்கும் அது போல ஏன் செய்யக்கூடாது?
அவனவனோட காரியம் மாதிரியே கூட இருக்கற மத்த ஆளுங்க செய்யறப்ப தப்பாகறது ஏன்? கேள்வி கேக்கறவங்கள நிசப்தமாக்கறவங்க சர்வாதிகாரிங்க. அப்பதான் புரட்சிங்க வெடிச்சுச் சிதறறது. உலக சரித்திரத்துல ஒரு புரட்சியும் ஒரே ஒரு ராத்திரியில ஜெயிச்சது இல்ல. அதுக்கு நிறய நாள் நீண்டு நிக்கற போராட்டங்க வேணும்”
சிவந்து வீங்கிப் போன கன்னத்தைத் தடவிக் கொண்டு அவள் சொன்னாள். உறுதியாக காலடிகளை எடுத்து வைத்து அவள் வகுப்பு அறைக்குப் போகும் அவளுக்குள் ஒரு புரட்சிக்காரி ஒளிந்திருப்பதை நான் பார்த்தேன். சரித்திரமும் சமூக அறிவியலும் அரசியல் அறிவியலும் எல்லாம் சாத்தியமான தளத்தில் செயல்பட சமத்துவம் தூண்டுதலாக அமைந்ததை நான் மகிழ்வுடன் நினைத்துப் பார்த்தேன்.