நாங்கள் செய்தித்தாள்களை விநியோகிப்பவர்கள். விடிவதற்கு முன்பாக, கோழி கூவும் முன்பே எழுந்திருக்க வேண்டியவர்கள். ஒவ்வொரு இரவிலும் தூங்கப் போகும் முன்பு போனில் அலார்ம் செட் செய்து பொழுது விடியக்கூடாதே என்று கனவு காணும் எங்களுக்குப் புகார் எதுவும் இல்லை. பதட்டமும் இல்லை.
ஒருவேளை இரவும் தூங்கப் போவதற்கு வெகுநேரம் ஆனாலும், விடியும் பொழுது நாங்கள் சீக்கிரமே எழுந்திருக்க வேண்டும். படித்துப்படித்து தூங்குவதற்கு லேட்டாகவில்லை. வேறு ஏதாவது சிறிய வேலைக்குப் போய்விட்டு வரும்போது களைப்பு அதிகமாகிவிடுவதால் எங்களுக்குத் தூங்கத் தாமதமாகிறது.
வீட்டில் அடுப்பு புகையவேண்டும். கரண்ட் பில் கட்டவேண்டும். தங்கைகளுக்கு டியூஷன் பீஸ் கட்டவேண்டும். நாங்களும் உங்களைப் போல மாணவர்கள்தான். எங்களில் பெரும்பாலானோர் உங்களைப் போல தினமும் ஸ்கூலுக்கு வருபவர்கள்தான். எங்களுக்கு யார் மீதும் புகார் எதுவும் இல்லை.
ஒரு மாத வருமானம் மிகக் குறைவானது. அதை அம்மாவிடம் கொடுக்கும் போது அவளுடைய கண்கள் பல வேளைகளிலும் நனைந்து போவதுண்டு. ஒருவேளை அம்மாவுக்கு அதில் ஒரு சின்ன சந்தோஷத் துளிர் இருக்கலாம். அது தன் மகனுடைய ஒரு மாதத்து வியர்வையின் விலை என்று அவளுக்குத் தெரியும்.
உண்ணும் உணவுகளின் விலை எங்களுக்குத் தெரியும். வசதிகளின் வறுமைக்கோடுகள். ஆடம்பரங்களோடு எந்த ஆர்வமும் இல்லை. ஒரு ஸ்மார்ட் போன் இல்லை. கேன்வாஸ் ஷூக்கள் இல்லை. டி ஷர்ட் இல்லை. இதற்கெல்லாம் முயற்சி செய்வதும் இல்லை. எங்களுக்கு யார் மீதும் புகார் இல்லை.
மாநிலத்தின் படிப்பறிவு பெருமைகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நாளை ஹர்த்தால்… பத்திரிகைகள், பால், கல்யாணம், ஆம்புலன்ஸ் தவிர மற்ற எல்லாவற்றுக்கும் வேலை நிறுத்தம் பொருந்தும் என்ற அறிவிப்பை நீங்கள் அடிக்கடிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அடுத்த நாள் ஹர்த்தால் என்ற கனவுடன் இன்பமாக தூங்கும் மக்களே எங்களுக்கு அப்படி ஒன்றும் இல்லையே!
உங்களுடைய வீட்டுத் தலைவர் எழுந்திருப்பதற்கு முன்பு பத்திரிகைகள் உங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கும். இல்லாவிட்டாலும் எங்களுக்கு யார் மீதும் புகார் இல்லை. பதட்டமும் இல்லை. மழையை விரும்புபவர்கள் நீங்கள். உலக மகா ஜனங்களுடைய உயிரைக் காக்க வரும் மழை மேகங்களுக்கு இருகரம் கூப்பிய நன்றி.
ஆனால் நாங்கள் இதே மழையைத் தான் விரும்புவது இல்லை. ஆமாம் மழையைதான். எங்களுடைய வேலையை தாறுமாறாக்கும் மழை. எத்தனை தடவை உங்களிடம் கெஞ்சுகிறோம். வாசல் கேட்டில் ஒரு பையைக் கட்டித் தொங்கவிடுங்கள் என்று? அப்படிச் செய்யாத உங்களிடம் இருந்தும் எங்களுக்கு வசவுகள் விழுகின்றன. அதை நாங்கள் கேட்கவேண்டியிருக்கிறது.
பத்திரிகைகள் நனைந்து போய்விட்டன. கிழிந்து போய்விட்டன என்றெல்லாம் உங்களிடம் இருந்து பேச்சு கேட்கவேண்டியிருக்கிறது. ஏஜெண்ட்டுகளிடம் இருந்தும்தான். மழை பெய்யும் போது ஒரு கையில் குடையையும் பிடித்துக்கொண்டு சைக்கிள் ஓட்டுவது என்பது எவ்வளவு சாகசம் நிறைந்த வேலை தெரியுமா உங்களுக்கு?
மழைக்கோட்டு வாங்க எங்களுக்கு தற்போதைக்கு வசதி இல்லை எஜமானர்களே! தலையில் தொப்பி போட்டுக் கொள்ளலாம். ஆனால் ஜலதோஷம் பிடிக்கும். பரவாயில்லை. ஆனால் செய்தித்தாள்கள் நனையக்கூடாது. அது எங்களின் உத்தரவாதம். அப்பறம் மற்றொன்று. நீங்கள் வீட்டில் செல்லமாக வளர்க்கும் நாய்கள்.
பேப்பரை நாய் கசக்கிக் கிழித்தால் நாங்கள் என்ன செய்வோம்? வாசல் கேட்டில் ஒரு பையைத் தொங்கவிடுங்கள் என்று சொல்கிறோம் இல்லையா? இது உங்களுக்காகத்தானே? நாய் கேட்டுக்குள் பத்திரமாக இருக்கட்டும். இதுவாவது பரவாயில்லை. இதை விட மோசமானது தெரு நாய்கள்தான்.
யாருக்குத் தெரியும் நான் வருங்காலத்தில் இதே மாதிரி ஒரு பத்திரிகை விநியோகிக்கும் பையனாகவே இருப்பேனா இல்லை ஒரு சயண்ட்டிஸ் ஆக மாறுவேனா என்று? தெருவில் இருக்கும் நாய்கள் கடிக்கவில்லை என்றாலும் குரைத்துக்கொண்டே ஓடிவரும். நான் சைக்கிளை வேகவேகமாக ஓட்டுவதாலும் நகரப் போக்குவரத்து அதிகமாக இருப்பதாலும் தப்பிக்கிறேன்.
தெரு நாய்களைக் கொல்லக்கூடாது என்று ஒரு வீரத்திருமகன் பிரசங்கம் செய்ததை நான் வாசித்திருக்கிறேன். சந்தோஷம்! அவற்றுக்காகப் பரிந்து பேசவாவது ஆட்கள் இருக்கிறார்கள் அல்லவா? நீங்கள் உங்கள் வேலையில் இருந்து லீவு எடுக்கலாம். எத்தனை சுலபமாக அதை உங்களால் செய்யமுடியும்!
ஆனால் நாங்களோ…! ஒரே ஒரு நாள் லீவு போட்டால் கூட என்னுடைய வழித்தடத்தில் 130 செய்தித்தாள்களும் 28 இதழ்களும் மற்ற மாதாந்திர, மூன்று மாத அரையாண்டு மற்றும் ஆண்டுக்கு ஒரே ஒரு தடவை மட்டும் பிரசுரமாகும் இதழ்களை போய்ச் சேரவேண்டிய சரியான இடங்களுக்கு கொண்டு போய்க் கொடுப்பது யார்?
யார் மீதும் எங்களுக்கு ஒரு புகாரும் இல்லை. பதட்டமும் இல்லை. நீங்கள் உங்களுடைய வாகனங்களை நேசிப்பது போல நூறு மடங்கு நாங்கள் எங்கள் சைக்கிள்களை நேசிக்கிறோம். அதை விட இரு நூறு மடங்கு பாதுகாப்பையும் பராமரிப்பையும் நாங்கள் எங்கள் சைக்கிளுக்குத் தருகிறோம்.
காலை எழுந்திருக்கும்போது சைக்கிள் ஒரு சின்ன பஞ்சராகிவிட்டால் கூட அன்றைய வேலை தீர்ந்தது! அப்படியும் நடந்திருக்கிறது. பதைபதைத்துப் போன நிமிடங்கள்! ஆனாலும் பத்திரிகை சரியான நேரத்தில் உங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கும். அதற்கு நாங்கள் பொறுப்பு. இறக்கத்தில் வைத்து ப்ரேக் உடைந்துபோய் உங்களுடைய வீட்டு மதில் சுவரின் மீது சைக்கிள் வந்து மோதி இடித்த சம்பவங்களும் நடந்திருக்கிறது.
அந்த அளவுக்கு சைக்கிள் கண்டிஷனாக இருப்பதுதான் காரணம். இதெல்லாம் இல்லாமல் போனால் வாழ்க்கையில் என்ன த்ரில்இருக்கிறது? இல்லையா நண்பரே! எங்களுக்கு யார் மீதும் எந்த புகாரும் பதட்டமும் இல்லை. இந்த வேலைக்கு நாங்கள் வருவதற்கு எங்களுடைய வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஒரு பக்கம் உண்டு.
அது என்ன என்கிறீர்களா? அது வேறொன்றுமில்லை. அதுதான் பயம். ரொம்ப ரொம்ப பயம். ரெண்டாம் வகுப்பில் படிக்கத் தொடங்கிய போது முதலில் ஏற்பட்ட பயம்தான் இன்றும் தொடர்கிறது. இன்று எனக்கு வயது பதினைந்து. உங்களில் ஒருவன் நான். வார்டு மெம்பர் பஞ்சாயத்து நிதியை ஒதுக்கவில்லை என்பதற்காகத் தெருவிளக்குகள் எதுவும் வைக்கவில்லை.
ஆனாலும் செய்தித்தாள்களைச் சரியான நேரத்திற்கு கொண்டு போய்க் கொடுக்க வேண்டும் என்பதற்காக இருட்டையும் வெளிச்சம் இல்லாத இடத்தையும் நாங்கள் மறந்து போகிறோம்.
ஏதோ ஒரு சக்தி இதெயெல்லாவற்றையும் எங்களுக்கு மறக்கச் செய்கிறது. பத்து இருபது ரூபாய் சிகரெட் லைட்டரே போதும். இரப்பர் காடுகளுக்கு நடுவில் இருக்கும் உங்களுடைய வீட்டு வாசல்களை அடைய அந்த வெளிச்சமே எங்களுக்குப் போதும். பலாத்காரம், ஊழல் மோசடி, நம்பிக்கைத் துரோகம், கொலை, கொள்ளை இது போன்ற செய்திகள்தான் பத்திரிகைகளில் வருகின்றன.
நீங்கள் அடிக்கடி இதைப் பற்றி எங்களிடம் சொல்லுவது உண்டு. நல்ல செய்திகளும் இதற்கு இடையில் வருவது உண்டு. கிடைக்கிற செய்திகளை வாசித்து முடியுங்கள். வாசிப்பு என்பது வாழ்க்கையில் தொடரவேண்டிய ஒரு செயல்.
வாசித்தால் வளர்வோம். வாசிக்கவில்லையென்றால் வளைந்து போய்விடுவோம். உங்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் தெரியுமா? ஓணம், புதுவருடப் பிறப்பு, கிறிஸ்துமஸ் போன்ற சிறப்பு நாட்களில் ஒரு சிறிய அன்பளிப்பு தருபவர்களும் உண்டு.
அந்த ஒரு நிமிடத்திற்காக நான் காத்திருந்தது உண்டு. எல்லா மாதமும் என்னை வீட்டுக்கு அழைத்துப் பத்து ரூபாய் தரும் ஒரு டீம் இருக்கிறது. எனக்கு அவர்களிடம் எப்போதும் நன்றி உண்டு. கேட்டபோது அவர்களில் ஒருவர் எப்போதோ சொன்னார். அவருக்கு ஐயாயிரம் ரூபாய் லாட்டரி விழுந்ததாம்.
ஒவ்வொரு நாளும் உங்கள் பொழுது விடிவது எங்கள் முகத்தில்தான். எங்களுக்கும் அப்படித்தான். எங்களுக்காகக் கேட்பதற்கும் பரிந்து பேசுவதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள் தெரியுமா? பேப்பரை எல்லாம் போட்டுவிட்டு நேராக வீட்டிற்குப் போய் அம்மா தரும் பால் இல்லாத தேநீரைக் குடித்துவிட்டு நேராக ஸ்கூலை நோக்கி ஒரே ஓட்டம்.
பள்ளிக்கூடத்தில் வகுப்பறையில் மூன்று வகையான பெஞ்சுகள். முன்வரிசை, நடுவரிசை, பின்வரிசை இதை வைத்துதான் படிப்பவர்களை ஒரு வகுப்பறையில் முக்கியமாகத் தரம் பிரிக்கிறார்கள். நாங்கள் பின்வரிசைப் பெஞ்ச். எப்போதாவது லேசாக கண்ணை மூடினால் போதும்.
அவ்வளவுதான். ஹோம் வொர்க் செய்யலயா? அதற்கெல்லாம் எங்களுக்கு ஏது நேரம்? டெஸ்ட்டுகள் வைத்தால் அதற்கெல்லாம் படிக்க எங்கே நேரம். வகுப்பில் அழகிகளாக இருக்கும் சுந்தரிகளோடு பேசவேண்டும் என்று எங்களுக்கும் ஆசை உண்டு. ஆனால் எங்களிடம் யார் பேசுவார்கள்?
யாரும் பேசுவதில்லை. காரணம் நீதான் ஆமாம் நீதான் சமூகமே! படிப்பது பரீட்சையில் மார்க் வாங்க. எனக்குள் கலை ரசனையோ எலக்ட்ரானிக்ஸோ எதுவும் இல்லை. மனப்பாடமாகப் படித்து எழுதி வாகி எல்லோருக்கும் பிடித்தமான மாணவர்கள் இல்லை நாங்கள்.
அவர்களுக்கு நாங்கள் விளையாட்டுப் பொம்மைகள். அடி கொடுப்பதற்கென்று இருக்கும் வெறும் பொம்மைகள். நாங்கள் அடி வாங்குவதைப் பார்த்து ரசிக்கும் சக மாணவர்களே, நீங்களோ அதிமேதாவிகள். ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் கனலைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
உங்களுடைய வீட்டில் கம்ப்யூட்டர், ப்ரிட்ஜ், கார் எல்லாம் இருக்கிறது. உங்களுடைய வாழ்க்கை நிலை மேலானது. பொருளாதார உத்தரவாதம் உடையது. ஆனால் நாங்களோ இல்லாததில் இருந்து வந்தவர்கள். தரித்திர வாழ்வின் நூலிழைகள் வழியாகப் பயணிப்பவர்கள்தான் நாங்கள். ஒரு பாடப் புத்தகமும் நேரம் தவறாமையைப் பற்றி எங்களுக்குச் சொல்லித்தரவில்லை.
சைக்கிள் சங்கிலி கழன்று போனால், அதை எப்படிச் சரி செய்வது என்றோ, சைக்கிள் மெக்கானிஸம் பற்றியோ ஒரு பிசிக்ஸ் பாடப் புத்தகமும் சொல்வது இல்லை. ஒரு சர்க்கஸ்காரனின் திறமையோடு ஒருவருடைய வீட்டுக்குப் பத்திரிகையைக் கொண்டு போய்ப் போட எவ்வளவு தூரம் எடுக்கும் என்று துல்லியமாக எந்தக் கணக்குப் புத்தகமும் சொல்லித்தரவில்லை.
ஒவ்வொரு மாதமும் விற்காமல் போகும் செய்தித்தாள்களை கிலோகு ஒன்பது ரூபாய்க்கு விற்கும் எங்கள் வியாபாரத் திறமை உங்களுக்கு உண்டா? ஒவ்வொரு மாதமும் பத்திரிகைகளுக்கு உரிய காசை நேராக உங்களிடம் இருந்து எண்ணி வாங்கும் எங்களுடைய திறமை அபாரமானதுதானே?.
இதற்கெல்லாம் நாங்கள் எங்கேயும் போய் ஸ்பெசலாகப் படிக்கவில்லை. நாங்கள் தோற்றுப் போனவர்கள்தான். ஆனால் யதார்த்தமான வாழ்க்கையை புரிந்து கொண்டவர்கள். எங்களுக்கு யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. இதற்காக நாங்கள் பதட்டப்படுவதும் இல்லை.