நேற்று நான் ஒரு நாடகம் பார்க்கப் போனேன். போனேன் என்பது சரியில்லை. கூட்டிக்கொண்டு போகப்பட்டேன் என்பதுதான் சரி. அது ஒரு சுவாரசியமான கதை. சுருக்கமாகச் சொல்கிறேன். நேற்று வானம் தெளிவாக இருந்ததால் வெளியில் இறங்கி நடந்துவிட்டு வரலாம் என்று மனதிற்குள் ஒரு உற்சாகம் ஏற்பட்டது.
எந்த ஒரு நோக்கமும் இல்லாத நடை. சும்மா ஒரு நடை. காக்கா நடை போன்ற நடைப்பயிற்சிகளும் ஒரு முன்பின் தெரியாத காதலியைப் பற்றி சிந்தித்தபடி சாய்வு நாற்காலியில் மல்லாந்து படுத்துக் கொண்டு கனவு காண்பதும் ஏறக்குறைய ஒன்றுதான். அதில் ஒரு சுகம் உண்டு. அன்று காலையில் பெய்த மழையின் ஈரம் இலைகளில் இருந்து இன்னும் காயவில்லை.
அந்தப் பசுமைப் பரப்புகளில் வந்து விழும் சூரியக் கீற்றுகள் இரண்டு மடங்கு சுகம் தருவது. நாடகத்தைப் பார்த்துவிட்டு திரும்பும் ஒரு நவநாகரீகப் பெண் போல இருந்தது பிரபஞ்சம். கூட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த பறவைகளும் வௌவால்களும் என்னுடைய தலைக்கு மேல் பறந்து போய்க் கொண்டிருந்தன.
அவற்றின் சமூக வாழ்க்கையைப் பற்றியும் மனிதர்களுடைய சமூக வாழ்க்கையைப் பற்றியும் நான் சிந்தித்தேன். இவை இரண்டும் எங்கே வைத்து வேறுபடுகின்றன? விமரிசனங்கள் அவற்றின் வாழ்க்கையை மூச்சு முட்டுவதில்லை. இயற்கையின் மடியில் கிடந்து உறங்கும் பறவைகளுக்கு இயற்கை வழங்கிய வேறுபாடுகளே இருக்கின்றன.
நாடுகளின் எல்லைகள் அவற்றைத் தடை செய்யமுடியுமா? பிரபஞ்சத்தின் சராசரங்கள் முழுவதையும் உட்கிரகித்துக் கொண்டு மனதிற்குள் அலையலையாக எழும் இது போன்ற சிந்தனைகள் மிகவும் சிக்கலானவை. இது போன்ற சிலந்தி வலை சிந்தனைகளில் மூழ்கியபடி நான் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது பின்னால் இருந்து ஒரு காரின் ஹாரன் ஒலி கேட்டது. கேட்டு நான் வழிவிட்டு நின்றேன்.
அது நேராகப் போகவில்லை. மாறாக எனக்கு அருகில் வந்து நின்றது. காருக்குள் இருந்து கூட்டில் இருக்கும் ஒரு பறவை தன் இணையை அழைப்பது போல ஒரு குரல் கேட்டது. அந்தக் குரல் மிருதுவாகவும் அழகாகவும் இருந்தது. நான் நின்றேன். காருக்கு அருகில் சென்றேன். “மிஸ்ட்டர் மேனன். வர்றீங்களா?”
அந்த அழைப்பு எதிர்பாராததாக இருந்தது. காருக்குள் எட்டிப் பார்த்தேன். “நம்ம டாக்டரோட மனைவி”. வர்ண ஜாலம் காட்டும் அழகிய ஆடைகளை அணிந்து கொண்டிருந்த அவளுடைய அந்தத் தோற்றம் ஒரு மாபெரும் அழகியை எனக்கு நினைவுபடுத்தியது. தண்டில் இருந்து மெல்ல வெளியே நீட்டி தலை காட்டும் ஒரு வாழைப்பூ மாதிரி இருந்தது அது.
காரின் வெளியில் தலையை நீட்டியபடி அவள் ஒரு மந்தகாசச் சிரிப்பு சிரித்தாள். “நன்றி. நான் சும்மா நடப்பதற்காக வந்தேன்”
அவளுடைய அழைப்பை நாகரீகமாக நிராகரித்தேன். “வாங்களேன்”. கெஞ்சும் குரலில் அவள் அழைத்தாள். அவள் தொடர்ந்தாள். “நாம நாடகம் பாக்கப் போலாம்”
“நாடகம் எங்க நடக்குது?”
“டவுன் ஹால்ல. அங்க போய்ப் பாக்கறது சுவாரசியமானதா இருக்கும் இல்லயா? நடுநடுவே இப்படி ஏதாச்சும் இடங்களுக்குப் போகவேணாமா?... ம். ஏறுங்கங்கறேன்”. கார் கதவைத் திறந்து கொண்டு அவள் என்னை ஆக்கிரமித்தாள். “அய்யோ! நேரமாயிடும். ” நான் பதுங்கினேன். “பரவாயில்லங்கறேன். வீட்டுல கொண்டு போய் நான் விடறேன். ம்! வாங்க”
இதற்கு மேலும் எதிர்ப்பு தெரிவிக்க எனக்கு ஒரு காரணமும் இல்லாமல் போனது. நான் காரில் ஏறி அவளுடைய இடப்பக்கம் உட்கார்ந்தேன். அதுவரை உணர்ச்சிகள் எதுவும் இல்லாமல் ஸ்டீயரிங்கைப் பிடித்துக் கொண்டிருந்த டிரைவர் லேசாகத் தலையைத் திருப்பிப் பார்த்தான். நானும் அந்த மரியாதைக்குரிய பெண்மணியும் அடுத்தடுத்து உரசிக் கொண்டு உட்கார்ந்திருந்தோம்.
கார் ஒவ்வொரு தடவை குலுங்கியபோதும் அவளுடைய தோள் என் மீது உரசியது. நாங்கள் இரண்டு பேரும் நிசப்தமாக இருந்தோம். டாக்டருடைய மனைவி முதலில் மௌனத்தைக் கலைத்தாள். “நல்ல தெளிவான சாயங்காலப் பொழுது. இல்ல?”. அவள் என் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தாள். மந்தகாசமான ஒரு புன்னகையுடன் கேட்டாள்.
அவளுடைய பதினேழு வயது மகளையும், அவளையும் சுலபமாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. “சரிதான். தெளிவான வானம். சாயங்காலப் பொழுது”. நானும் பதில் சொன்னேன். “மிஸ்ட்டர் மேனன். எதுக்காக எப்பப் பாத்தாலும் வீட்டுலயே அடஞ்சு கிடக்கறீங்க?”
“இல்லயே. சாயங்கால நேரத்துல நான் எப்பவும் வெளியில இறங்கி நடக்கறது உண்டு”
“இருந்தாலும் எங்க வீட்டுக்கு நீங்க வர்றது இல்லயே?. நாங்க எல்லாம் அன்பு செலுத்தறதுக்கு உரிய ஆளா இருக்கமாட்டோம்” அதை சொல்லிவிட்டு ஒரு காவிய நாயகியைப் போல அவள் அழகாக நடித்துக் காட்டினாள்.
“அப்படி ஒன்னும் இல்ல”. நான் மெதுவாக பதுங்கினேன். என் கையின் மேல் தட்டியபடி அவள் சொன்னாள்.
“மிஸ்ட்டர் மேனன். உங்களப் பாக்கறது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? அது எனக்கு மட்டும்தான் தெரியும்” அவள் மறுபடியும் என் கண்களை நேராக உற்றுப் பார்த்தாள். முகஸ்துதிகளை எடுத்து வீசும் அந்த நிமிடம் தாங்க முடியாததாக இருந்தது. “விருப்பம் இல்லாம இல்ல. இருந்தாலும் புகழ் பாடறது முகத்துல வந்து அடிச்சா என்ன செய்யறது?
நாம நமக்கு முன்னால எப்பப் பாத்தாலும் ஒரு கண்ணாடியப் போட்டுகிட்டே இருக்கோம் இல்லயா? ஒரு நாள் இல்ல ஒரு நாள் நாம்பளே அத எடுத்து வீசியெறிஞ்சு உடைச்சுடமாட்டோமா?”. அவள் என்னுடைய குணங்களை வாழ்த்த ஆரம்பித்தாள். நான் ஒரு துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டேன். பேச்சை மாற்ற முயன்றேன்.
“டாக்டர் இங்க இல்லயா?”
“ஓ! அந்த மனுஷனோட கதயப் பத்திப் பேசாம இருக்கறதுதான் நல்லது. எப்பப் பாத்தாலும் நோயாளிங்க. எப்பவும் பயணம். இதுதான் அவரோட வாழ்க்கை. வீட்டுலயும் சில பேரு இருக்கறாங்கன்னு ஒரு நினைப்பு கூட அவருக்கு இல்ல. காலையில நான் எந்திரிக்கறதுக்கு முன்னாலயே கார்ல ஏறிக் கிளம்பிடுவாரு.
மத்தியானம் வந்து சாப்பிடறேன்னு பேருக்கு கொறிப்பாரு. ராத்திரி எல்லாரும் தூங்கினப்பறம்தான் திரும்பி வர்றது” அவளுடைய அந்த புகார் பட்டியல் நீண்டு கொண்டு போக வேண்டுமே என்று நான் பிரார்த்தனை செய்தேன். சொந்தப் புருஷனைப் பற்றி நல்லதையும் கெட்டதையும் சொல்வதற்கு உரிய அதிகாரம் ஒரு மனைவிக்கு உண்டு.
அதில் நான் ஒரு விஷயமாகாமல் தப்பிக்கவேண்டும். “நல்லபடியா தொழில் செய்யாம ஏதாச்சும் சம்பாதிக்கமுடியுமா?”. அந்த வசவுப் பாட்டை கொஞ்சம் கிளறிவிட நான் ஆசைப்பட்டேன்.
அது பலித்தது. “சம்பாத்யம். பணம்… பணம்… அந்த ஒரு ஒத்த நினைப்பு மட்டும் இருந்தாப் போதுமா?” ஒரு தத்துவ ஞானியின் குரலில் அவள் தொடர்ந்தாள்.
“இதோ. இன்னிக்கு இப்படி ஒரு நாடகம் நடக்குதுன்னு அவருக்குத் தெரியுமா? அந்த மனுஷனுக்குத் தெரிஞ்சாலும் அதெல்லாம் அவரு கவனிக்கறதே கிடையாது. நாடகங்கறது ஒரு கலை சம்பந்தப்பட்ட விஷயம். மனுஷனா இருந்தா இதுலெல்லாம் ஒரு அக்கறை இருக்க வேணாமா?. அந்த ஆளுக்கு இதுல எல்லாம் ஒரு ஆர்வமும் இல்ல.
இன்னிக்கு காலையில கிளம்பி பாலக்காட்டுக்குப் போயிருக்காரு. யாரோ ஒரு கிழவி அங்க சாகக் கிடக்குதாம்”
“ஆஹா! ஒரு டாக்டருக்கு அதுதானே பெரிய விஷயம்?”
“ இல்லைன்னு யாரு சொல்றது? ஆனா எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கவேணாமா? இப்ப நான் கார்ல ஏறுங்கன்னு சொன்னப்ப நீங்க அத நிராகரிச்சிருக்கலாம்.
ஆனா அன்பாவும் நாகரீகமாவும் உள்ள மனுஷருக்கு அப்படி செய்யமுடியாது” நான் பயந்து போனேன். உரையாடல் மீண்டும் எனக்கு நேராகத் திரும்பி வருகிறது. அது ஆபத்து என்று கருதி ஒரு கேள்வியை நான் அவளை நோக்கி வீசினேன்.
“டாக்டர் ராத்திரி லேட்டாத்தான் திரும்பி வருவாரு. இல்லயா? பதினொன்னரை மணிக்குதான் இனிம வண்டி”
“இன்னிக்குத் திரும்பி வரவே மாட்டாரு. பயப்படவேணாம்”
“ம்” நான் ஒரு முட்டாளைப் போல முனகினேன்.
“நாளைக்கு மத்தியானம்தான் திரும்பி வரமுடியும். பாருங்க. ஒன்னுமில்லைன்னாலும் குழந்தைங்களோட காரியத்திலாவது மனுஷனுக்கு அக்கறை இருக்க வேணாமா?”
“வேணும்” நான் ஏற்றுக்கொண்டேன்.
டவுன் ஹால் வளாகத்திற்குள் கார் நுழைந்தது. மக்களின் கூட்டத்துக்கு நடுவில் நாங்கள் ஹாலுக்குள் நுழைந்தோம். முன்னால் அவளும், பின்னால் நானும் நடந்தோம். நாடகம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. பச்சைப் படுன் ஒளி வீசும் திரைச்சீலை அழகைப் பார்த்துக் கொண்டு அருகருகே இருந்த போடப்பட்டிருக்கைகளில் மௌனமாக உட்கார்ந்திருந்தோம்.
மெல்லிய வாத்ய இசை ஒரு துயர கானத்தை இசைத்தது.
“என்ன ராகத்த வாசிக்கறாங்க?” டாக்டருடைய மனைவி என்னிடம் கேட்டாள்.
“எனக்கு சங்கீதத்துல அந்த அளவுக்கு எதுவும் தெரியாது” நான் கை விரித்தேன்.
“பிடிக்கும் இல்லயா?” கொஞ்சும் குரலோடு அவள் மந்தகாசமாக ஒரு புன்னகையை வீசியபடி கேட்டாள்.
“பிடிக்கும். அவ்வளவுதான் என்னால சொல்லமுடியும்”
“கேக்கறதுக்கு கேட்டு ரசிக்க காது இருந்தாப் போதும் இல்லயா?” சொல்லிவிட்டு அவள் துரு துருவென்று இருந்த விழிகளில் ஒரு புன்முறுவலைப் பூத்து என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
அப்போது எங்களுடைய தோள்பட்டைகள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ள ஆரம்பித்தன.
சட்டென்று அந்தப் பச்சை திரைச்சீலை மெல்ல இரு பக்கங்களிலும் விலகி அகன்றது. நீல நிற ஒளி வீசிய அந்த காட்சியில் ஒரு மரத்தின் அடியில் ஒரு இளைஞனும் ஒரு இளம் பெண்ணும் நின்று கொண்டிருந்தார்கள். அந்த இளம் பெண் உள்ளங்கைகளால் முகத்தை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். மன அழுத்தத்தோடு இருந்த அந்த இளைஞனோ அவளுடைய தோளில் கையை வைத்துக்கொண்டு நின்றான்.
நிதானமாக மிக நிதானமாக அவளுடைய கைகல் முகத்தில் இருந்து எடுக்கப்பட்டன. அந்த முகம் கண்ணீர் ஓடைகளால் சிவந்து போயிருந்தது. அங்கே உணர்ச்சிகளின் கொந்தளிப்பு பிரதிபலித்தது. இளைஞனோ ஏதோ சூடான பொருள் தொண்டையில் சிக்கியது போல நின்றான். பிரிவை எடுத்துச்சொல்லும் அந்தக் காட்சி மனதைத் தொடுவதாக இருந்தது.
இப்படி பன்னீர் பூ இதழ்களைக் கிழித்து எடுப்பது போன்ற சிறிய சிறிய உரையாடல்களால் வளர்ந்த அந்தக் காட்சி கடைசியாக முடிந்தது. மக்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
டாக்டருடைய மனைவி உணர்ச்சி வசப்பட்டு அவளையும் அறியாமல் என்னுடைய கையைப் பிடித்து அழுத்தினாள். அடுத்த நிமிடம் “சாரி” என்று சொன்னாள்.
இரண்டுக்கும் நான் பதில் எதுவும் சொல்லவில்லை. பிறகுதான் கதை யதார்த்தத்தை நோக்கி நகர்ந்தது.
ஒரு கிராமப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியைதான் கதாநாயகி. ஒரு இருபது வயதுக்காரி. அவளை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் காதலியை ஞாபகப்படுத்தும் ஏதோ ஒன்று அவளிடத்தில் இருந்தது. அந்தக் கதாநாயகி ஒரு நாகரீக இளைஞனால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறாள்.
அவள் கர்ப்பிணியாக இருக்கிறாள். தரித்திரனான அவளுடைய அப்பா என்ன நடந்தது என்று தெரியாமல் கவலைப்படுகிறான். சமுதாயத்தின் குத்து வார்த்தைகள் அவளுக்கு நேராக எறியப்படுகின்றன. அவமானங்கள் அவளை பயமுறுத்துகின்றன. கடைசியில் அவல் தற்கொலை செய்து கொள்ளத் துணிகிறாள். கதை இந்த அளவுக்கு வந்த போது டாக்டருடைய மனைவி என்னிடம் சொன்னாள்.
“ஆபாசம்! நாகரீகம் இல்லாத காட்சிங்க. மனுஷனுக்கு நாகரீகம்னு ஒன்னும் கிடையாதா? இதெல்லாம் பொண்ணுங்கள அவமானப்படுத்தற மாதிரி இருக்கு இல்லயா?” நான் அமைதியாக இருந்தேன்.
ஆம்பளை பெண்ணை வஞ்சித்தால் அதனால் பெண் எவ்வாறு அவமானப்படுத்தப்படுவாள் என்று எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் ஒரு கலை விமரிசனத்துக்கு நான் அப்போது தயாராக இல்லை.
அந்த நாயகியுடைய கர்ப்பத்தைப் பற்றிப் பேசப்படும் போதெல்லாம், டாக்டருடைய மனைவி அருவருப்பை வெளிப்படுத்தினாள். அவளுடைய அபிப்பிராயங்கள் எதையும் பற்றி கவலைப்படாமல் காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து போய்க் கொண்டிருந்தன.
அந்த நாகரீக இளைஞன் இன்னொரு முக்கியக் குடும்பத்தில் தன்னுடைய கடந்த காலம் முழுவதையும் அழிக்க முயல்கிறான். அந்தக் குடும்பக்காரர்களுக்கு கதாநாயகனுடைய கடந்த காலம் பற்றித் தெரியும். அதைப் பற்றி அவர்கள் விரிவாக குறிப்புகள் மூலம் உணர்த்துவதை நாடக எழுத்தாளர் நன்றாகக் காட்சிப்படுத்தியிருந்தார்.
அந்த இளைஞனுடைய மனைவிக்கு இதில் அதிருப்தி. ஆனால் அவளுடைய அம்மா அவளைச் சமாதானப்படுத்துகிறார். “ஏண்டி. எல்லாப் பெரிய இடத்துப் பிள்ளைங்களுக்கும் இந்த மாதிரி கதைங்க உண்டு. அவங்க எல்லாத்துக்கும் இந்த மாதிரி ஒரு கடந்த காலம் இருக்கு. அப்படி இல்லாதவங்க யாருதான் இருக்காங்க இப்ப?
நீ இந்தப் பயலக் கல்யாணம் கட்டிகிட்டதுனால உன்னோட முன்னாள் காலேஜ் பயல நீ காதலிக்கக்கூடாதுன்னு யாரு சொன்னது? கல்யாணங்கறது வெறும் ஒரு சடங்கு சம்பிரதாயம். அவ்வளவுதான். அது முடியறது எல்லாத்துக்கும் நல்லதாக்கும். அந்த அம்மாக்காரியோட வார்த்தை சாமர்த்தியம் நீண்டுகொண்டே போனது.
அதைக் கேட்டு நாடகம் பார்க்க வந்த சாமான்யமானவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். டாக்டருடைய மனைவியின் அதிருப்தி அதிகமானது. கடைசியில் கர்ப்பிணியான அந்த ஆசிரியைக்கும், நிராசையான அந்த கல்லூரிப் பையனுக்கும் இடையில் கல்யாணத்துடன் நாடகம் முடிந்தது. கடைசி காட்சி முடிந்த போது டாக்டருடைய மனைவி எதிர்ப்பைக் காட்டும் விதமாக தாடையைக் குலுக்கிக் கொண்டு எழுந்திருந்தாள்.
காரில் ஏறியபோது வெடித்துச் சிதறும் விதத்தில் சொன்னாள். “அடிக்க ஆளில்ல. இந்த நாட்டுல”. நான் ஒத்துக்கொண்டேன். இருந்தா இப்படி ஒரு நிலைமை வராது. இந்த நாட்டுக்குன்னு ஒரு கலாச்சாரம் இல்லயா? அத அழிச்சு ஒழிக்கறதுக்குதான் இந்த மாதிரி குப்பைங்கள் கிளம்பியிருக்கு. மேடையில் என்னவெல்லாம் காட்டினாங்க? வசனம் பேசினாங்க?பாத்தீங்களா?”
உலகத்தின் ஒரு சுருக்கெழுத்துப் பதிப்பாக இருந்தது அந்த நாடகம். தயங்கித் தயங்கி நான் சொன்னேன். “உலகத்துல இந்த மாதிரி கெட்டதுங்க இருக்கதான் செய்யுது. ஆனா அத எல்லாம் நாடகத்துல காட்டினா வேண்டாததுதான் ஏற்படும்” அவள் கேட்டாள்.
“சரிதான். பாக்கறவங்களுக்குக் கஷ்டமா இருக்கும்னு அவங்க நினைச்சுப் பாத்திருக்கணும்”
“ஆமாம். இதற்கு அப்புறமும் நாடகத்தை நடத்தியவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சொன்ன்னாள். மூச்சிரைத்து தளர்ந்து போய் காரின் இருக்கையோடு சாய்ந்து உட்கார்ந்தாள். என்னுடைய முகத்தைப் பார்த்து ஒரு புன்முறுவலைப் பூத்தாள். ஜில்லென்ற காற்று திறந்து வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடி ஜன்னல்கள் வழியாக உள்ளே நுழைந்து வந்தது.
தோள்கள் உரசியபடி உட்கார்ந்திருந்தாள். கையை எடுத்து என்னுடைய கை மேல் வைத்துக் கொண்டாள். காரின் ஒவ்வொரு குலுக்கத்திலும் அவளுடைய உள்ளங்கை என்னுடைய கை மேல் அமர்ந்தது. நெளிந்தபடி நான் முனகினேன். “மிஸ்ட்டர் மேனனுக்கு இன்னிக்கு வீட்டுக்குப் போகணுமா?”
“போகணும்”
“வேண்டாங்கறேன். இன்னிக்கு இங்கயே தங்கிடலாம். இந்த ராத்திரியில அங்க எதுக்காகப் போகணும்?”
“வீட்டுல சமையல்காரன் மட்டும்தான் இருக்கான்”
“வேற யாரும் இல்ல இல்லயா?”அவள் ஒரு கெஞ்சும் தொணியில் கேட்டாள்.
“இல்ல” அவள் ஒரு சலங்கை குலுங்கும் சத்தத்துடன் சிரித்தாள்.
பிறகு ஒரு கெஞ்சும் குரலில் சொன்னாள்.
“மிஸ்ட்டர் மேனன். இன்னிக்குப் போக வேணாம்”
“அய்யோ! அப்படிச் சொல்லாதீங்க” எப்படி தப்பிக்கறது? நான் யோசித்தேன்.
என்னுடைய நாட்டுப்புறக் காதலியின் முகம் பல ரூபங்களிலும் மின்னி மறைந்தது. காதல் என்பது ஒரு பாதுகாப்புக் கவசம் என்பதை இன்றுதான் நான் உணர்ந்தேன்.
கார் அவளுடைய வீட்டு வாசல் படியருகில் போய் நின்றது.
காரில் இருந்து இறங்கியபடியே அவள் சொன்னாள். “நான் சொன்னா மேனன் நீங்க கேக்க மாட்டேங்கறீங்களே? இவ்வளவுதானா?”
“அய்யோ! இன்னிக்கு கஷ்டமாயிருக்குங்கறதுனாலதான் சொன்னேன்” இதற்கு நடுவில் அவளை உள்ளே கூட்டிக்கொண்டு போக ராந்தல் விளக்குடன் வந்த வேலைக்காரன் சொன்னான்.
“ரொம்ப நேரமா காத்துகிட்டு இருக்காரு சின்னம்மா?”
“யாரு? மாதவன் குட்டி மேனனா?”
“ஆமாம் சின்னம்மா”அவள் ஒரு நிமிடம் யோசித்தாள்.
பிறகு எனக்கு நேராகத் திரும்பி சொன்னாள். “சரி. அப்படின்னா உங்கள நான் கஷ்டப்படுத்தல. அடிக்கடி வரணும்”
“ஓ!”. “இவர அவுங்க வீட்டுல கொண்டு போய் விடு” அவள் டிரைவருக்கு யோசனை கூறினாள்.
கார் நகர்ந்தபோது அன்று முழுவதும் நடந்த நாடகத்தைப் பற்றி நான் நினைத்துப் பார்த்தேன்.