பிதாகோரஸைப் பற்றிச் சரித்திர ஆவணங்களில் இவ்வாறுதான் சொல்லப்படுகிறது. “கணிதத்தில் மிகுந்த ஆர்வமுடைய பிதாகோரஸ் மத்தியக் கிழக்கு தேசங்களுக்குப் பயணம் கிளம்பினார். நீண்டதொரு புனித யாத்திரையின் ஆரம்பமாக இருந்தது அது. எகிப்திலும் பாபிலோனியாவில் உள்ள ஆய்வு மையங்களிலும் அவர் ஆராய்ச்சிகள் செய்தார்.
அப்போதுதான் சிந்து கங்கைச் சமவெளிகளில் விவசாயத்தைப் பற்றி நடக்கும் ஆய்வுகளை அவர் கேள்விப்பட்டார். அந்த இந்தியப் பள்ளத்தாக்குகளைப் பற்றி கனவு கண்டபடி காரவான் குழுக்களோடு அவர் இந்திய தேசத்திற்கு வந்தார்”.
-இந்த விவரங்கள் கேரள ஆய்வாளர் கே ராமகிருஷ்ணப் பிள்ளை எழுதிய “கணித அறிவியலில் மேதைகள்” என்ற நூலில் இருந்து பெறப்பட்டது.
இனி கதை தொடங்குகிறது.
பிதாகோரஸ் திருவனந்தபுரம் புளி மோடு ஜங்ஷனில் வெயில் படாமல் லேசாக நகர்ந்து நின்று கொண்டிருந்தார். செருப்புக்கடைக் கண்ணாடியை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார். குறிப்பாக எதையும் செய்வதற்கு இல்லை. சாயங்காலமே இரயில். எங்கே இறங்கி, பிறகு எங்கே ஏறினால் கிரீஸுக்குப் போய்ச் சேரலாம் என்பது பற்றிய விவரங்களைக் கணித மேதையும் விவரச் சேகரிப்பில் அதிபுத்திசாலியான அந்தக் கணித அறிஞர் தன்னுடைய தோள் பையில் அதையெல்லாம் பத்திரமாக வைத்துக் கொண்டிருந்தார்.
பயணம் தொடங்கியதற்குப் பிறகு புள்ளி விவரங்கள் பற்றிய அறிவியலின் வெற்றியைத் தவிர, தன் சுக நடமாட்டங்களுக்காக அந்த மகான் சிறப்பாகப் பயன்படுத்தினார். ஆனால் புளி மோடு ஜங்ஷனில் இருந்து எங்கே செல்லவேண்டும் என்பது குறித்த துல்லியமான எண்ணம் அவருக்கு இல்லை. எம்ஜி ரோடு வழியாக கீழே நடந்தால் அந்த சாலை ரயில்வே ஸ்டேஷனுக்குக் கொண்டு போய் விடும்.
வழக்கமாகப் பயணம் செய்யும் ஒருவருக்கு அந்தக் குறைந்தத் தூரத்தைக் கடக்க ஆட்டோ ரிக்ஷாவைப் பிடிப்பது தேவையில்லை. கிரீஸ், மெசபடோமியா போன்ற பரந்து விரிந்த நாடுகளில் பலப்பல வழிகளில் வெகுதூரம் பயணம் செய்து அங்கே இருந்த மகத்தான பயணப் பாதைகளைக் கண்டறிய பிதாகோரஸுக்கு மூட்டையைப் போல இருந்த ஆட்டோ என்ற அந்த வாகனத்தின் மீது முதல் நோட்டத்திலேயே அதிருப்தி ஏற்பட்டிருந்தது.
வெய்யில் அதிகமாகியது. ஸ்டேச்சூ ஜங்ஷன் வழியாக நடக்கலாம் என்று தோன்றியது. அப்போதுதான் எதிரில் வந்த ஒரு ஆள் அவருடைய கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். பிதாகோரஸ் திடுக்கிட்டார். எழுத்தாளர்கள் சினிமாக்காரர்களைத் தவிர இரசிகர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள்.
வெளிநாட்டுக்காரனான ஒரு கணித விஞ்ஞானிக்கு இப்படி ஒரு அனுபவம் ஏற்படும் என்று அவர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. என்றாலும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தோன்றியதால் உண்டான சந்தோஷத்தை மறைத்து வைக்கமுடியாமல் பிதாகோரஸ் எதிராளியைப் பார்த்துப் புன்னகை செய்தார். “யூக்லிட்தானே?”
அந்த ஆளின் கேள்வியில் பிதாகோரஸ் அதிர்ந்து போனார். உடனே ஒரு ஆண்டி க்ளைமேக்ஸை மிதித்ததால் ஏற்பட்ட நடுக்கம் அவரைப் பாதித்தது. இருந்தாலும் நிலைமையைச் சமாளித்துக் கொண்டு அவர் புன்னகை மாறாமல் சொன்னார். “ யூக்லிட் இல்ல. நான் பிதாகோரஸ்”. இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் இப்படி ஒரு கேள்வியைக் கேட்ட ஆளுக்கும் ஒரு சங்கடம் ஏற்பட்டிருக்கும்தானே?
அந்த மனநிலையோடு அந்த ஆளும் சிரித்தார். பிதாகோரஸுக்கும் யூக்லிடுக்கும் இடையில் ஏதாவது ஒரு சண்டை கிண்டை இருந்தால் அது பெரிய பிரச்சனையாகப் போய்விடுமே என்று அந்த ஆள் சிந்தித்தான். இப்படிப்பட்ட பிரபலமானவர்கள் எந்தத் துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு நடுவில் இருக்கும் சொந்தம் நாம் கொஞ்சமும் எதிர்பார்க்கும் ரீதியில் இருப்பதில்லை.
வெளியில் சொல்லப்படுவது போல இருப்பதில்லை அவர்களுக்கு இடையில் இருக்கும் உண்மையான சொந்தபந்தம். கேரளாவில் வாழும் எவருக்கும் இதை சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும். “சாரி”. அந்த ஆள் சொன்னார். பிறகு தொடர்ந்தார். “உங்க எல்லாரயும் எனக்கு அவ்வளவு நல்லாத் தெரியும்னு சொல்லமுடியாது. எல்லாரயும் உசிரோடப் பாத்ததும் இல்ல இல்லயா?”. கணித மேதைங்களோட முக பாவம் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும்னு எனக்கு தோன்றது உண்டு”
“ஏய். பரவாயில்ல”. பிதாகோரஸ் சொன்னார். “கணித மேதைங்கள அடையாளம் கண்டுபிடிக்கறதே பெரிய விஷயம் இல்லயா? அதுவும் இப்படி வழியோரத்துல வச்சு?. அப்பறம்… நான் யூக்லிடப் பத்தி யோசிச்சுகிட்டே நடந்தேன்”
“அப்பறம் ஊருக்குப் போய் நாங்க ரெண்டு பேரும் ஒன்னா ஒரு செமினாருக்குப் போகணும்”
“அது இருக்கட்டும். நீங்க ஒரு கணித மேதயா? இந்த விஷயத்துல இவ்வளவு ஆர்வம் ஏற்பக்ட காரணம் என்ன?”. பிதாகோரஸ் ஒரு கடையின் திண்ணையில் ஏறி நின்றார். வெய்யில் கடுமையாகிக் கொண்டிருந்தது. “அய்யோ! நான் வெறும் ஒரு பாவப்பட்ட மனுஷன் சார். ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு எதுத்தாப்புல ஒரு போட்டோ ஸ்டேட் கட நடத்தறேன். அவன் சொன்னான்.
“ஓ! அப்படியா? இருந்தாலும் கணக்கு சம்பந்தப்பட்ட விஷயத்துல இத்தன அறிவு எங்கேர்ந்து கிடைச்சது? தனியா ஏதாச்சும் படிக்கறீங்களா?”
“அதுவும் இல்ல சார். நான் புத்தகங்களோட போட்டோ ஸ்டேட் எடுத்து முதல் தரமான பைண்டிங் செஞ்சுகொடுக்கறேன். அத வச்சுதான் பொழப்பு நடத்தறேன். கடையோட வாடகை கொஞ்சம் அதிகம்தான். இருந்தாலும் தேவையான அளவுக்கு வேலை கிடைகுதுங்ககறதுனால வாழ்க்கைய நடத்தறேன். புத்தகங்களுக்கு எல்லாம் இப்ப வில அதிகம் இல்லயா? அதனால பிள்ளைங்களுக்கு வேண்டிய புத்தகங்களத் தேடிப் பிடிச்சு அத போட்டோ ஸ்டேட் எடுப்பேன். அதுல அதுன்னு இதுன்னு ஒன்னும் கணக்கு இல்ல இல்லயா? எல்லா வகைப் புத்தகங்களும் வரும்.
“அப்படி இருந்தும் என்னை எப்படி அடையாளம் கண்டுபிடிச்சீங்க?”
அந்த மனிதன் யூக்லிடைப் பற்றிதான் சொன்னான் என்பதை பிதாகோரஸ் பட்டென்று மறந்துபோனார்.
“போட்டோ ஸ்டேட் எடுக்கறதுல நான் ரொம்ப கவனமா இருப்பேன். அதனால ஒரு மாதிரியான மகான்களோட முகம் எனக்கு நல்லா மனப்பாடமாயிடுச்சு”. அந்த ஆள் சொன்னான்.
பிதாகோரஸிற்கு நிராசை ஏற்பட்டது. என்றாலும் தன்னை மதிக்கின்ற ஒரு ஆள்தான் தனக்கு முன்னால் நிற்கிறான் என்ற உணர்வில் லேசான சந்தோஷமும் ஏற்பட்டது. “இல்ல. கேக்க மறந்துபோயிட்டேன். நீங்க எங்கப் போறீங்க? இந்த நேரத்துல இந்தப் பக்கம் எங்க வந்தீங்க?”. அவன் கேட்டான்.
நான் இங்க காரியவட்டத்துக்கு ஒரு செமினாருக்கு வந்தேன். கிரீஸுக்கு அவங்க லட்டர் எழுதியிருந்தாங்க. இந்தியா விஷயத்துல நான் ரொம்ப ஆர்வம் காட்டறவனாக்கும். அதனால இந்த வாய்ப்பப் பயன்படுத்திக்கலாம்னு நினைச்சேன். அப்பறம் அவங்க டிக்கெட்டயும் அனுப்பியிருந்தாங்க”
“அப்படியா? அப்ப செமினார் முடிஞ்சு போயிடுச்சா? எத்தன நாள் இருந்தீங்க?”
பிதாகோரஸ் சொன்னார். “அங்கதானே விஷயமே இருக்கு. அந்த லட்டருக்கு பதில் எழுதவும் நான் முயற்சி செய்யல. இங்க வந்தப்பதான் தெரிஞ்சுது. செமினார் அடுத்தமாசம்தான்னு. விஐபி வந்து தொடங்கிவைக்கறதா இருந்துச்சு. அவரு வரமுடியலன்னு சொன்னதுனாலதான் நிகழ்ச்சிய மாத்திவச்சிட்டாங்க. இதப் பத்தி கிரீஸ் விலாசத்துக்கு அவங்க லட்டரு எழுதி அனுப்பியிருந்தாங்க. ஆனா நான் அந்த சமயத்துல பாபிலோனியாவுல இருந்தேன். இப்படிதான் எப்பவும் நான் பல நாடுங்கள்ல பயணம் செஞ்சிகிட்டே இருப்பேன். ஓ! அது பெரிய கஷ்டமாப் போச்சு”
பிறகு பிதாகோரஸும் அந்த ஆளும் சேர்ந்து மரத்தடி நிழலில் பழம் விற்றுக் கொண்டிருந்தவனுடைய கடைக்கு அருகில் நின்றுகொண்டு மேலும் சில விஷயங்களைப் பேசினார்கள்.
இதற்கு நடுவில் அந்த ஆளுடைய பொழுதுபோக்கு அவனுக்கு ஆத்மார்த்தமானது என்பதை பிதாகோரஸ் கண்டுபிடித்தார். அதனால் ஆன்மீகத்தை கணிதத்துடன் சேர்த்து எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றியும் கூடுதலாகத் தெரிந்து கொள்ளலாம் என்று அவர் நினைத்தார். இதற்கு நடுவில் தீர்த்த பாத மண்டபத்தில் சில சாமிகள் ஆன்மீகச் சொற்பொழிவுக்கு போகும் விஷயம் தெரிந்தது.
ஒவ்வொருவராக வந்து நன்றாக சொற்பொழிவு செய்துவிட்டுப் போவார்கள் என்று அந்த ஆள் சொன்னான். ஆனால் தான் உடனே திரும்பிப் போகவேண்டியிருப்பதால் அதையெல்லாம் கேட்க முடியாதே என்று பிதாகோரஸ் பரிதவித்தார்.
அதிகமாகப் பழகிய உரிமையுடன் அந்த ஆள் கேட்டான். “உங்க பேரு பிதாகோரஸா பைதகோரஸா இல்ல பிதகோரஸா இல்ல இதத் தவிர வேற பேரு ஏதாச்சும் உண்டா?. இந்த விஷயத்துல இங்க யாருக்கும் ஒரு உறுதியான முடிவு இல்ல”. கிரீஸ்லயும் இதே சர்ச்சைதான் நடக்குது என்று அவர் சொன்னார்.
இதற்கு இடையில் இருவரும் சேர்ந்து சர்பத் குடித்தார்கள். “நல்ல சாப்பாடு எங்க கிடைக்கும்? என்று பிதாகோரஸ் கேட்டார்.
“இந்த காலத்துல ஒரு ஹோட்டல்லேர்ந்து ஒரு சாப்பாடு கூட வாங்கி சாப்பிடமுடியாது”. அந்த மனிதன் சொன்னான்.
“பசிய ஆத்தறதுங்கறத விட ஏமாத்தறதுதான் அதிகமா இருக்கு. நான் இப்ப ஒரு ஆயா மகளோட கல்யாணத்துக்குப் போறேன்”.
பிதாகோரஸையும் கல்யாண விருந்துக்கு அந்த ஆள் அழைத்தான். கூப்பிடாத விருந்துக்குப் போகற பழக்கம் கிரீஸ்ல இல்லை என்று அவர் சொன்னார். ஆனால் தன்னுடைய சொந்தக்காரருடைய கல்யாணம் என்பதால் அழைப்பதற்கு தனக்கும் உரிமை உண்டு என்று அந்த ஆள் சொன்னான். பசியும் வர ஆரம்பித்திருந்ததால் பிதாகோரஸ் வேறு வழியில்லாமல் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
இப்படி அவர்கள் ஒரு கல்யாண மண்டபத்தை அடைந்தார்கள். அங்கே இருந்த பெரும் கூட்டத்தைப் பார்த்து பிதாகோரஸ் நடுங்கினார். கணித மேதையாக இருந்தபோதிலும் அங்கே இருந்த கூட்டத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது பற்றி அவருக்கு ஒரு விஷயமும் பிடிகிட்டவில்லை. உள்ளே எப்படி நுழைவது என்று அவர் யோசித்தார்.
“இந்த வாசக் கதவுக்கு முன்னால போய் நின்னாப் போதும். இலை போட்டுட்டாங்கன்னா திறப்பாங்க. அப்ப எல்லாரும் உள்ள போலாம்”. அந்த ஆள் சொன்னான்.
அதற்குப் பிறகு ஒரு நீண்ட நேரக் காத்திருப்பு. தொடர்ந்து ஒரு திறப்பு விழா. ஒரே ஆரவாரம். என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்கு முன்பே பிதாகோரஸ் பந்து போல தெறித்து உள்ளே தள்ளப்பட்டார்.
அந்த ஆள் வேறு ஏதோ சுற்று வட்டப்பாதையில் சஞ்சரித்து பந்து போல சுருட்டப்பட்டு வேறு ஒரு இடத்தை நோக்கித் தள்ளப்பட்டான். யார் யாரோ எங்கெங்கோ ஓடினார்கள். எந்த ஒரு ஒழுங்குக்கும் கட்டுப்படாத எண்களின் வரிசை போல அந்த காட்சி அவருக்குத் தோன்றியது. கடைசியில் எங்கேயோ உட்கார்ந்தார்.
திரும்பி வரும்போதும் அந்த ஆளைக் கண்டுபிடிக்க அவரால் முடியவில்லை. கை கழுவும் இடத்திலும் வெற்றிலைப் பாக்கு தாம்பூலம் வைத்திருந்த இடத்திலும் அந்த ஆளைத் தேடினார். காணவில்லை. பிறகு ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நடந்தார். வெகு நேரம் கழித்து பிதாகோரஸ் அந்த ஆளைப் பார்த்தார்.
தான் பிதாகோரஸை எல்லா இடங்களிலும் தேடியதாகவும் அவரை எங்கேயும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அந்த ஆள் சொன்னான். “இங்க கல்யாணத்துக்குப் போறவங்க காணாமப் போகறது ரொம்ப சாதாரணமானது”. என்று அவன் சொன்னான். என்றாலும் பிதாகோரஸ் எதைப் பற்றியோ யோசித்துக் கொண்டிருந்தார்.
விசாரித்தபோது சொன்னார். “எனக்குச் சாப்பிடப் போட்டது ஒரு கிழிசல் இலை”. இதைக் கேட்டு அந்த ஆள் பெரிதாக சிரித்தான்.
“இதுக்குதானா இவ்வளவு யோசனை? சிலது அப்படிதான் இருக்கும். அட்ஜஸ்ட் செஞ்சு சாப்பிட்டிருக்கலாம் இல்லயா?”
“அது இல்ல. எனக்குக் கிடச்ச இலயோட நம்பர் சாத்தியத்தப் பத்தி யோசிச்சேன். அப்படி ஒரு இலை எனக்கு மட்டும் கிடைக்கறது நான் எவ்வளவு அதிருஷ்டம் இல்லாதவன்னு நினைச்சுப் பாத்தேன்”. இதைக் கேட்டு அந்த ஆள் திடுக்கிட்டு நின்றான்.
பிதாகோரஸ் பையில் இருந்து ஒரு தீப்பெட்டியையும் ஒரு பேனாவையும் ஒரு பென்சிலையும் எடுத்து சிமெண்ட் பெஞ்சில் வரிசையாக வைத்தார்.
“இந்த சாமானுங்கள எப்படி வரிசைப்படுத்தலாம். முதல்ல பென்சில், அடுத்தது பேனா அப்புறம் தீப்பெட்டி. மொத்தம் மூனு சாமானுங்கதானே இருக்கு. அதனால முதல்ல பேனா அப்புறம் பென்சில் அப்புறம் தீப்பெட்டின்னும் வரிசைப்படுத்தலாம். இப்படி எத்தன விதமா வரிசைப்படுத்தலாம்? வாய்ப்பாடுபடி ஆறு விதமா வரிசப்படுத்தலாம்”
“இப்ப இதப் பத்தி எதுக்காக சொல்றீங்க?”. அவன் கேட்டான்.
பிதாகோரஸ் சொன்னார். “நண்பரே. கல்யாணத்துக்கு எத்தன பேரு வந்திருந்தாங்க? ஆயிரம் பேரு வந்தாங்கன்னு வச்சுப்போம். அப்ப அவங்க எல்லாரயும் எப்படி உக்காரவச்சிருக்கலாம்னு யோசிச்சேன். அவ்வளவுதான். அவ்வளவு பேரு வந்திருந்த இடத்துலதான் எனக்கு மட்டும் கிழிசல் இலை கிடைச்சிருக்கு”
அதைக் கேட்ட அந்த ஆளுக்கு பிதாகோரசின் அந்த பிரபஞ்ச துக்கம் புரிந்தது போல வெகுநேரம் எதுவும் பேசாமல் இருந்தான். பிதாகோரஸ் ப்ளாட்ஃபார்மில் நடந்து போய் முடிவில்லாத இணைக்கோடுகளாக செல்லும் தண்டவாளத்தைப் பார்த்துக் கொண்டு நின்றார். திடீரென்று ஞானம் வந்தவனைப் போல அந்த ஆள் பிதாகோரஸை நோக்கிச் சென்றான்.
சொன்னான். “இத்தன பேரு மத்தியில் உங்களுக்கு மட்டும் அப்படி ஒரு இலை கிடச்சது ஒரு அபூர்வமான வாய்ப்பு இல்லயா? அதுவே ஒரு அதிர்ஷ்டமான விஷயம் இல்லயா? இத நினைச்சு நீங்க சந்தோஷப்பட வேணாமா?”. இதைக் கேட்ட அவர் லேசாகத் திடுக்கிட்டார். பிறகு சிரித்தார். அதற்குள் அவர் செல்லவேண்டிய ரயில் பெரிதாக நீட்டி முழக்கி சத்தம் போட்டுக் கொண்டு வந்து நின்றது.
(குறிப்பு -புளிமோடு, தீர்த்தபாத மண்டபம் திருவனந்தபுரத்தில் உள்ள இடங்களின் பெயர்கள்)