காலம் பொறுக்கி வைத்திருக்கும் முதுமையென்னும் துணை. தலைமுடியை விட முகத்தில் லேசாக அது தெரிகிறது என்று உற்றுப் நோக்கி நிலைக்கண்ணாடி வந்தனாவைப் பார்த்து எப்போதும் கோபப்படுவது உண்டு. காலம் தன் முகத்தோடு காட்டிய பாரபட்சத்தை நினைத்து அவளும் லேசாகக் கோபப்படுவது உண்டு.
அடுப்பில் விறகுக்கட்டையை விட்டு விலகிச் சென்று பல்லைக் காட்டிச் சிரித்த புகையை வந்தனா கை விரலால் சிறிய சுழல்களாக்கி சிந்தனையில் மூழ்கினாள். புகையின் சுழலில் இறங்கி அம்மிணி அக்கா புகை ஊதி தனக்குக் கொடுத்த கஞ்சியின் ஞாபகம் அவளுக்கு வந்தது. ஸ்கூலின் கஞ்சி காய்ச்சும் அறையில் கொதிக்கும் கஞ்சியின் மீது மூடி வைத்திருக்கும் தட்டை நீக்கி, கழுத்தில் பெருகிய வியர்வையை அக்கா தன் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொள்ளும் நாட்களை நினைத்துப் பார்த்தாள் அவள்.
அப்போது அங்கு வரும் அம்மா “மகளே, அடுப்புலேர்ந்து பாத்திரத்த எடுத்து கஞ்சிய ஊத்தி வை” என்று சொல்லும் அன்பு ஒழுகும் குரலை ஞாபகப்படுத்திக் கொண்டாள். சீறியும் அடங்கியும் எரியும் விராட்டியின் நெருப்பை விறகுகளோடுச் சேர்த்து அடுப்பில் தள்ளி வைத்த நாட்கள். அது போல தீக்கணல்களில் வெந்து உருகும் பெண் ஜென்மமாக தானும் மாறிவிட்டோமா?
தேய்மானங்கள் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. ஷியாமின் கோபமான பேச்சுகள். பிடிவாதங்கள். வங்கி ஊழியனான ஷியாம் கிருஷ்னா வந்தனாவின் கணவன். ஒன்றாம் வகுப்பில் படிக்கும் மீனு கிருஷ்ணா அவர்களுடைய ஒரே மகள். திடீரென்று உள் அறையில் இருந்து ஓங்கி ஒலித்த ஒரு குரல். “வந்தனா!”
பொறுமை இழந்து பாய்ந்து வந்த அந்தக் குரலைக் கேட்டு பாத்திரத்தில் பரிமாற இருந்த புட்டு தட்டுக்குள் தெறித்து விழுந்தது. அடுக்களை ஆட்டத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு அரங்கிற்குள் ஓடினாள் அவள். இஸ்திரிப் பெட்டியோடு யுத்தம் அறிவித்து நெளிவு சுளிவுகளோடு இருந்த பேண்ட்டையும் ஷர்ட்டையும் இஸ்திரி போட்டு மடித்து படுக்கையின் மீது எடுத்து வைத்தாள்.
பாலிஷ் செய்து பளபளப்பாக்கிய ஷூவையும், கூடவே சாக்ஸையும் லிவ்விங் ரூமில் இருந்த குட்டி டீபாய் மீது வைத்தாள். தயாராக வைத்திருந்த பகல் சாப்பாட்டையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து வைக்கப் பையோடு சமையலறையை நோக்கி மறுபடியும் ஓடினாள். செய்து வைத்திருந்த புட்டையும் அதற்குத் தொட்டுக் கொள்ளத் தயார் செய்திருந்த ஐட்டத்தையும் இன்னொரு தட்டில் பொரித்த பப்படமுமாக சாப்பாட்டு மேசையை நோக்கி ஓடினாள்.
அப்போது மீனு ஸ்கர்ட்டின் இடுப்புப் பகுதி சுளிவுகளில் கஷ்டப்பட்டு பெல்ட்டை மாட்டியபடி அறையில் இருந்து வெளியே வந்தாள். அவள் ஓடிச் சென்று மீனுவின் பெல்ட்டின் கண் பகுதியில் கம்பியை சொருகிவிட மீனு கேட்டாள். “என்ன அம்மா? இன்னும் நீ டிரஸ் மாத்தலயா? இன்னிக்குதானே அப்பா அம்மாவோட சேந்து அருங்காட்சியகத்த சுத்திப் பாக்க வரச் சொல்லியிருக்காங்க. இல்லயா? நீங்க ரெண்டு பேரும் கூட வரணும். அம்மா. நீ அத மறந்து போயிட்ட. அப்பா. நீ எப்பவோ குளிச்சிட்ட. ஓடி வா”டிரஸையும் எடுத்துக்கொண்டு அவள் பாத்ரூமுக்கு ஓடும் போது ஷியாமுக்கு கொண்டு போவதற்கு வைத்திருந்த லஞ்ச் கேரியரை கொடுக்க மறந்து போனதை நினைத்து சங்கடப்பட்டாள்.
“மறதியின் திலகம்” ஷியாம் அவளுக்கு சூட்டியிருந்த பட்டப் பெயர் அப்போது அவள் நினைவுக்கு வந்தது. பொறுமையில்லாமல் அடிக்கப்படும் காரின் ஹாரன் சத்தத்தைக் கேட்டு அவசர அவசரமாகக் கேட்டின் கதவை இழுத்து மூடிவிட்டு காரில் ஏறினால். அப்போது ஷையாமின் முகம் இறுக்கமாக இருந்தது.
விருப்பப்பட்ட புத்தகங்களையும் வார இதழ்களையும் ஆசை ஆசையாக எடுத்துக் கையில் வைக்கும்போது, அருகில் நடந்து வந்த ஷியாமின் உதட்டில் ஒரு உணர்வு ஒளிந்திருந்தது. அப்போது அவளுடைய மனதின் ஆழத்தில் பரிகாசத்தின் கூர் முனைகள் குத்திக் கிழித்தன.
இரத்தம் உறைந்தது போல வந்தனாவுக்குத் தோன்றியது.
அருங்காட்சியகத்தில் இருந்து வரும்போது ஷியாம் கேட்டான். “மியூசியம் எப்படி இருந்துச்சு? பிடிச்சிருந்ததா?”. “கடந்த காலத்த மந்திரம் போல ஜெபிக்கற இங்க இருக்கற ஒவ்வொன்னும் சரித்திரத்துல ஒரு மெல்லிய பாலம் கட்டறது போல இருந்துச்சு இல்லைங்கலா?”
வந்தனா மீனுவுடைய கையைப் பிடித்து இறங்கியபடியே சொன்னாள்.
“ஹோ! இலக்கியமாக்கும்… கதையையும் கவிதையையும் ஒன்னும் எழுதித் தொலைக்காதே! அதத் தாங்கறதுக்கு எனக்கு இதுக்கு மேல தெம்பு இல்ல” குத்திக் கிழித்த வார்த்தைகளுக்கு அகம்படியாக கை கூப்பி வெடித்துச் சிதறிய சிரிப்போடு இருந்த ஷியாமுக்கு முன்னால் வந்தனா நிசப்தமானாள்.
புடவையின் முந்தானையை எடுத்து இடுப்பில் சுற்றிக் கீழே பார்த்தபடி படிகளில் இறங்கி முன்னோக்கி நடந்தாள். காரின் கண்ணாடிப் படலம் போல ஒட்டிக் கொண்டிருந்த மௌனத்தை உடைத்துக் கொண்டு மீனுவுடைய குரல் உயர்ந்தது. “அம்மா. நாம் அந்த மியூசியத்துல பாத்த பேசற கிளிய வாங்கினா என்ன?”
“வேணாம் மகளே. நமக்கு எதுக்கு பேசற கிளி? அம்மா கிளி இல்லயா வீட்டுல?” ஷியாம் காரை ஓட்டியபடி புன்சிரிப்போடு வந்தனாவைக் கிண்டல் செய்தான்.
“அம்மா என்ன கிளியம்மாவா?”. மீனு ஷியாமிடம் பரிதவித்தபடிகேட்டாள். எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்கும்படி பேசி நடந்துகொள்ளும் ஒரு கிளிதான் தான் என்று வந்தனாவுக்குத் தோன்றியது.
கார் ஓட்டுவதில் கவனமாக இருந்த ஷியாமிடம் ஒரு புத்தகக் கடைக்கு முன்னால் கொஞ்ச நேரம் நிறுத்தச் சொல்லி வந்தனான் லேசான தயக்கத்தோடு கேட்டாள்.
“என்ன? புதுசா இருக்கு? வழக்கத்துக்கு மாறா ஒரு புத்தகக் கடைய நோக்கி ஒரு யாத்திரை? வீட்டுல இருக்கற நியூஸ் பேப்பருங்களயே இன்னும் படிச்சு முடிச்சபாடில்ல. இப்போ ஒரு வாசிப்புக்காரி புதுசா முளச்சு வந்திருக்கறாரு!”கிண்டல் செய்தான் என்றாலும் ஷியாம் ஒரு புத்தகக் கடைக்கு முன்னால் வண்டியை நிறுத்தினான். அது வந்தனாவின் மனதில் பதட்டத்தை ஏற்படுத்தியது. காரில் இருந்து அவசரமாக ஓடி இறங்கி புத்தகக் கடையில் கிளிப் செய்து வைத்திருந்த வாரப் பத்திரிகையைப் பிரித்து ஆவலோடு பக்கங்களைப் புரட்டிப் பார்த்தாள்.
சூரிய காயத்ரியுடைய “அவளில் நான்” என்ற கதையின் ஊடே வந்தனாவின் விரல்கள் மெல்ல ஓடின. கண்களில் ஆனந்தப் பரவசத்தின் நீரோட்டம் உண்டானது. “என்ன இவ்வளவு சந்தோஷம்?” காருக்குள் ஏறிய வந்தனாவை ஷியாம் கேட்டான். “இதுல என்னோட தோழியோட ஒரு கதை வந்திருக்கு. சூரிய காயத்ரியோடது”
உள்ளுக்குள் புன்னகையின் மணிகள் ஒலித்தன. வந்தனா கிளியைப் போலப் பேசினாள். அவள் சொன்னது அவளுக்கே கேட்காத சத்தத்தில் அவள் பேசினாள்.
“நீ அந்த வாரப் பத்திரிகைய நினைச்சு கனவு கண்டுகிட்டிருக்கியா?” ஷியாமுடைய குரலைக் கேட்டதும் அவள் அந்த வார இதழை நெஞ்சோடு சேர்த்து வைத்துக்கொண்டு காரில் இருந்து இறங்கினாள்.
அடுத்த நாள் இரவு. மீனு தூங்கிய பிறகு ஷியாமின் விரல்கள் வந்தனாவின் மேனியைத் தழுவின. ஒரு ஜென்மத்தின் ஆயுள் உள்ள வருடலோடு அவன் அவளுடைய தலையை தடவிவிட்டான். வந்தனா இரவின் நிசப்தத்தில் ஊர்ந்து வரும் நீல நாகத்திற்காக தன்னுடைய உடலைப் பக்குவப்படுத்தினாள்.
வழக்கத்துக்கு மாறாக ஷியாம் அவளைத் தன் மார்பில் கிடத்திக் கொண்டான். அவளுடைய கன்னங்களிலும் உதடுகளிலும் சூடு பகிர்ந்தான்.
“வந்தனா. சாரி. இந்த நாகரீகம் இல்லாத பயலோட பாரம் உனக்குக் கஷ்டமாயிடுச்சா?” அவள் சட்டென்று அவனை விட்டு விலகினாள். தாலியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு சொன்னாள்.
“ஒருபோதும் இல்ல. நீங்க என்ன இப்படியெல்லாம் பேசறீங்க?”
“நீ பறக்க அடங்காத ஆசையோட காத்துக்கிட்டு இருந்த ஆகாயத்துக்குப் பறக்க உனக்கு நான் ஒரு இறகைக் கூட அன்பளிப்பா தந்தது இல்ல. இல்ல இல்ல. அதப் பத்தி நான் யோசிக்கவே இல்ல. அதுதான் உண்மை. சுயநலத்தோட இருக்கற வெறும் ஒரு புருஷனா இருந்தேன் நான். சாரி வந்தனா”
இருண்ட இரவின் வட்டட்துக்குள் பளபளக்கும் ஷியாமின் கண்களைப் பார்த்து நம்பமுடியாமல் அவள் அவனுடைய மார்பின் மீது சாய்ந்து அணைத்து கட்டிக்கொண்டாள். “என்ன ஆச்சு உங்களுக்கு?”
“ஒன்னுமில்ல. உன்னோட தோழி சூரிய காயத்ரியோட கதை. இன்னிக்கு நான் அத வாசிச்சேன். உண்மையில அந்தக் கதையில மைதிலி நீயும் ஜிதேந்திரா நாந்தான்னும் எனக்குத் தோணிச்சு. மனசுக்குள்ள ஆழத்துல இறங்கற ஏதோ ஒரு மந்திர சக்தி அவங்களோட எழுத்துகளுக்கு இருக்கு. நம்பளோட சேர்ந்து நின்னு நம்பள்ல ஒரு ஆளா கதை சொல்ற அவங்களோட பாங்கு. நதி மாதிரி ஓடற எழுத்துங்க. புருஷங்கறவன் வீட்ட உருக்கி பொண்ணோட உடம்ப அடிமைப்படுதறவன்ல இல்ல. எவன் ஒருத்தன் பொண்ணோட இதயத்த அன்பால அடிமைப்படுத்தறவந்தான் உண்மையான ஆம்பள! அவந்தான் முதுகெலும்புஇருக்கற புருஷன்” சூரிய காயத்ரியோட கதையில நாயகனான ஜிதேந்திரங்கிட்ட கதாநாயகி மைதிலி சொன்ன வார்த்தைகள் ஷியாமின் நெஞ்சில் அன்பு கீதம் பாடியது.
வந்தனா அன்போடு ஷியாமின் மார்பில் இடைவெளிவிட்டு வளர்ந்திருந்த உரோமங்களில் விரல்களை ஓடவிட்டு புன்னகைத்தாள். “அப்பறம் பேங்க்ல எல்லாரும் சூரிய காயத்ரியோட ஆராதகருங்களாக்கும். முக்கியமான சர்ச்சை செஞ்ச விஷயம் என்ன தெரியுமா? இந்த வாரத்துல பிரசுரமான இந்த கதைதான் அது. அப்படிதான் கேஷியர் சாரிகாவோட கையில இருந்த இந்தப் பத்திரிகைய நான் வாங்கி படிச்சேன். ஆனா… ஒருத்தருக்குக் கூட எழுத்தாளரப் பத்தி ஒன்னுமே தெரியல. ஒரு போட்டோ கூட இல்ல. வார இதழ நடத்தறவங்களுக்கே தெரியாது போல இருக்கு. எப்பவாச்சும்தான் நல்ல கதைங்க அதுல வருது”
வந்தனா படுக்கையை விட்டு எழுந்தாள். ஷியாமின் தலைமுடியை வருடிவிட்டாள். “உன்னோட தோழிதானே சூரிய காயதிரி? அவள உனக்குத் தெரியும்னு நான் யாருகிட்டயும் சொல்லல. அதுல ஒரு சங்கதி இருக்கு. காலையில சொல்றேன்” வந்தனா ஷியாமின் கையின் மீது படுத்துக்கொண்டு அமைதியாக தூங்கினாள்.
உப்பு நீரில் நனையாமல், ஆலாபனை சொல்லி தாலாட்டு பாடாமல் அவள் தூங்க தலையணை அருகிலேயே காவலாக இருந்தது. கிருஷ்ணா ஆடிட்டோரியம். கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆடிட்டோரியத்தில் வங்கி ஊழியர்களின் மன மகிழ் மன்றத்தின் ஆண்டு விழா நடக்கிறது. செயலாளரான ஷியாம் மேடையில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தான்.
கரு நீல பட்டுப் புடவை. மயில் பச்சை ப்ளவுஸ். அணிந்துகொண்டு அழகியான வந்தனா. மீனுவை மடியில் உட்கார வைத்துக் கொண்டிருந்தாள்.
அரங்கின் முதல் வரிசையில் அவள் இருந்தாள். “வந்தனா. அவ இதுவரைக்கும் வரல தெரியுமா? இதோ நிகழ்ச்சிங்க ஆரம்பிக்கப் போகுது. கார அனுப்பறேன்னு சொன்னேன் இல்லயா?”. ஷியாம் வந்தனாவுக்கு அருகில் வந்து குரல் தாழ்த்தி சொன்னான். “அவ வருவா. ஒருநாளைக்கும் அவ என்னை ஏமாத்தமாட்டா. அவளுக்கு என்னையும் எனக்கு அவளயும் நல்லாத் தெரியும்”
“நீ என்ன சொல்ற? இதோ இப்ப நிகழ்ச்சிங்க ஆரம்பிச்சுடும்”
“ஷியாம். அவள மேடைக்கு அழைக்கறப்ப அவ வந்திருப்பா”
“ஓ! அவ வந்துட்டா இல்லயா? நீ என்ன கிண்டல் செய்யற இல்லயா? அப்படிதானே? சரி. சரி. நடக்கட்டும். உன்னோட காரியம் ரொம்ப நல்லா இருக்கு. இன்னிக்கு பந்து உன்னோட கோர்ட்டுல இருக்கு இல்லயா?”. ஷியாம் மேடையை நோக்கி ஓடினான். சிறிது நேரத்தில் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கான அறிவிப்பு முழங்கியது.
“இன்னிக்கு நம்பளோட ஆண்டு விழாவ ஆரம்பிச்சு வைக்கறவங்களும் முக்கிய விருந்தாளி. குறஞ்ச காலத்துலயே வாசிக்கறவங்களோட இதயத்துல தன்னோட பச்சையான எழுத்துங்களோட சக்தியால கொடி கட்டிப் பறக்கற ஸ்ரீமதி சூரிய காயத்ரிய மேடைக்கு அழைக்கறோம்”
அரங்கம் முழுவதும் அமைதி! யாரும் மேடைக்கு வரவில்லை. ஷியாமின் பலவீனமான கண்கள் சுழன்று வந்தனாவின் மீது பதிந்தன. வந்தனா மீனுவை மடியில் இருந்து இறக்கி நாற்காலியில் உட்காரவைத்துவிட்டு தோள் பையில் இருந்து ஒரு பேப்பரை எடுத்துக் கொண்டு லேசான பதட்டத்தோடு நழுவிக்கொண்டிருந்த தைரியத்தைப் பிடித்து நிறுத்தி ஷியாமின் முகத்தைப் பார்க்காமல் மேடையில் இருந்த போடியத்தில் மைக்கின் முன்னால் போய் நின்றாள்.
நடுங்கும் கரங்களால் பேப்பரை எடுத்தாள். மெல்லிய குரலில் வாசித்தாள்.
“அவளில் நாந்தான் சூரிய காயத்ரி! அவளில் பிறவியெடுத்த பொண்ணுதான் சூரிய காயத்ரி! அது நாந்தான்! அவளில் நாந்தான் சூரிய காயத்ரி!”