ஜப்தி நடப்பதற்கு முன்பே விற்பனையானது அதிர்ஷ்டம்தான். நல்ல விலை கிடைக்கவில்லை என்றாலும், மோசமில்லாத விலை கிடைத்தது. அது பாலைவன பூமியில் இருபது வருடத்தின் சாட்சிப் பத்திரம். மிச்சம் மீதி. ஒரு ஆயுளின் விலை அது. எல்லாக் கடன்களையும் அடைக்க இதில் முக்கால் பங்கு வேண்டும். மிச்சம் இருப்பதை வைத்து இந்த ஊரில் இனி மேல் ஒரு வீட்டைப் புதிதாக வாங்கமுடியும் என்று தோன்றவில்லை. குக்கிராமத்திலாவது ஒரு வீடு வாங்கியிருந்தால் போதுமாக இருந்தது. அது வரை வாடகை வீடே சரணம்.
எப்படி இப்படி எல்லாம் நடந்தது? வளைகுடாவில் நல்ல வேலை. நல்ல சம்பளம். காசு பணம் அதிகமாகச் சேர ஆரம்பித்த போது மனைவிக்கு எல்லாம் பழையதாகப் போனது. ஓடு போட்ட பெரிய வீடும் மரங்களும் பசுவும் வாத்து கோழி எல்லாம் தொல்லையாக மாறின. உதிர்ந்து விழுந்த இலைகளும் பூக்களும் எல்லாம் சாப வாக்குகளுக்கு நடுவில் அகப்பட்டுச் சிக்கித் தவித்தன.
காலையிலும் மாலையிலும் வீட்டையும் முற்றத்தையும் பெருக்கிச் சுத்தப்படுத்துவதை தன் அன்றாட வேலைகளில் ஒன்றாக அம்மா மாற்றிக் கொண்டிருந்தாள். என்றாலும் மனைவிக்கு அது நிம்மதியைக் கெடுத்தது. தேவாரம் பாடுவதும் கோயில் காட்டில் விளக்கேற்றி வைப்பதும் துளசி மாடத்தின் பரிசுத்தத்தைப் பாதுகாப்பதும் அம்மாவின் உயிர் மூச்சாக இருந்தது.
வயலில் நெல்லும் தோட்டத்தில் தேங்காய் சேனை சேம்பு போன்றவை எல்லாம் செல்வமாகக் குவிந்து கிடந்த பத்தாயமும் தினப்படி உபயோகத்திற்கான பச்சைக் காய்கறிகளும் வீட்டின் செல்வச் செழுமையை அதிகரித்துக் கொண்டிருந்தன. லாரியிலும் நான்கு சக்கர, மூன்று, இரண்டு சக்கர வாகனங்களிலும் வாசல்படிக்கு வந்து விற்பனை செய்யும் வீட்டுத்தேவை சாமான்கள் பற்றி அன்று கேள்விப்பட்டதேயில்லை. மனித மனதில் மதில்கள். தோட்டத்தைச் சுற்றிலும் பாக்கி வடிவத்தை படைத்த இன்றைய உலகத்தில் மதில்களே இல்லாமல் இருந்த காலம் பற்றி பேசினால் அது அந்நியமாகவே தோன்றும். துரைமார்களின் கல்வியைப் படித்ததால் பட்டம் வாங்கியது முதல் மண்வெட்டியும் மண்ணும் சேறும் அக்காலத்தில் என்னைப் பொறுத்தவரை அசுத்த வஸ்துகளாக இருந்தன.
விமானம் ஏறி வலைகுடாவிற்குப் போய்ச் சேர்ந்த போதுதான் மணல் ஆரன்யத்தின் கொடும் சூட்டை சொந்த கிராமத்தின், வீட்டின் குளிர்ச்சியை உணர முடிந்தது. இயந்திரமாக வேலை பார்த்தேன். தூங்கினேன். நல்ல சம்பளம். அது ஆரம்பத்தில் மகிழ்ச்சியைத்தான் பரிசாகக் கொடுத்தது. ஊரில் நண்பர்களும் க்ளபும் கொண்டாட்டங்களும் சாயங்கால நேரங்களில் மைதானத்தில் விளையாட்டும் கொடுத்த சந்தோஷத்தைத் தர வளைகுடாவால் தரமுடியாது என்பதை உணர அவனுக்கு அதிக காலம் எடுக்கவில்லை.
அப்பாவும் அம்மாவும் நண்பர்களும் கொட்டாங்குச்சியில் சோறு வடித்து ஆடிய விலையாட்டுகளும், ஊருக்குக் கிழக்கே நீரின் ஜில்லிப்பும் எல்லாம் ஈடு செய்யமுடியாத நன்மைகள் என்று உணர யந்திரமயமான ஒரு வெளிநாட்டு வாழ்க்கை தேவைப்பட்டது. வாழ்வின் அவசியம் என்பது போல வாழ்க்கைச் சுழற்சிக்கு நடுவில் கல்யாணமும் ஆனது. புருஷனை பணம் காய்க்கும் மரமாக மட்டுமே பார்க்கும் மனைவி. அது வாழ்க்கையின் பெரும் துன்பம். பேரிடர். அவளுடைய போன்
அழைப்புகள் அவசியங்களின் பட்டியலாக சுருங்கியபோது “நீங்க நல்லா இருக்கீங்களா?” என்று ஒரு ஒற்றைக் கேள்வி அவள் கேட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ரு நினைத்து நான் ஏங்கினேன். கேட்பதையெல்லாம் வாங்கி அனுப்பும், இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை வந்து போகும் ஒரு கொரிய சர்வீஸ்காரனின் வருகையைப் போல என்னுடைய வருகை குழந்தைகளுக்கு இருந்தது. நகரத்தில் குடியேறலாம் என்ற மனைவியின் யோசனை மெல்ல மெல்ல சாத்தியமாக மாறியது.
குழந்தைகளின் படிப்புக்கு நல்ல ஸ்கூலும் டியூஷனும் எண்ட்ரென்ஸ் கோச்சிங்கும் எல்லாம் இருக்கும் வசதியுள்ள ஒரு பள்ளிக்கூடம் ஓனம் கூட எட்டிப்பார்க்காத இந்த குக்கிராமத்தில் எங்கே இருக்கிறது?என்ற அவளுடைய கேள்வி என்னை வெகுவாக வேதனைப்படுத்தியது. “ஊர்ல இருக்கற கிராமத்துப் பள்ளிக்கூடத்துல படிச்சுதான் நான் இந்த நிலைக்கு வந்தேன்னு சொல்லணும்னு தோனினாலும் நான் சொல்லல”
முன்னோரின் காலடி பதிந்த, அவர்களின் மணம் வீசும் இந்த மண்ணை விற்பதா? நகரம் என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே அப்பாவுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “இந்த வீட்ட இடிச்சு புதுசா கட்டலாம்” என்ர யோசனையோடு மனைவியுடன் சமாதானம் செய்துகொண்டேன்.
பிறந்த மண்ணையாவது காப்பாற்றமுடிந்ததல்லவா?என்ற சமாதானம் ஏற்பட்டது. மகனுடைய வாழ்க்கையை நினைத்துப் பார்த்து “சிவா… சிவா…” என்று மனதிற்குள் பிரார்த்தனை செய்துகொண்டு அப்பாவும் அம்மாவும் பாரம்பரியமான அந்த பழையகால வீட்டை இடிக்கக்கூடாது என்ற எதிர்ப்பை வெளியில் தெரியாமல் நெஞ்சுக்குள் அடக்கிக் கொண்டார்கள் அவர்கள்.
புதிய வீட்டைக் கட்ட வங்கிக் கணக்கில் இருந்த பணத்தின் இரண்டு மடங்கு தேவைப்பட்டது. இதற்கும் அவளுடைய பக்கத்தில் இருந்து யோசனை இருந்தது. வங்கிக் கடன். கடனை எவ்வாறு அடைப்பது என்றோ அதற்கு உண்டான ஆரோக்கியம் என்னிடம் இருக்கிறதா என்பதைப் பற்றியோ அவளுக்குக் கவலையில்லை. வீட்டு வேலைகள் ஆரம்பித்தன. கட்டுமானச் சாமான்கள் தோட்டத்திற்கு வந்து சேர தென்னையையும் மாமரத்தையும் பலா மரத்தையும் வீட்டில் இருந்த சிறிய கோயிலையும் எல்லாம் இடித்துத் தள்ளும்போது குழந்தைகளை பறி கொடுத்தவர்கள் போல அப்பாவும் அம்மாவும் அறைக்குள் இருந்து நிசப்தமாக அழுதார்கள்.
ஒரு மரத்தை வெட்டினால் வெட்டும்போது எண்ணற்ற ஜீவன்களின் வீடு இடிக்கப்படுகிறது என்ற உணர்வை ஏற்படுத்த அவள் படித்த இரட்டை முதுகலை முனைவர் பட்டங்களால் முடியவில்லை. பூசை செய்து மரத்தோடு அதில் கூடு கட்டி குடியிருக்கும் பறவைகளிடமும் எறும்புகளிடமும் அனுமதி கேட்டு மிக மிக அவசியமான கட்டத்தில் மட்டுமே முன்பெல்லாம் மட்டும் இந்த வீட்டில் மரம் வெட்டப்பட்டது. மரத்தை வெட்டுவதற்கு முன்பே அதற்குப் பதிலாக புதியது நட்டிருக்கவேண்டும் என்பது அந்த வீட்டில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டுவந்த எழுதப்படாத சட்டம். ஆனால் இதோ இப்போது அது மீறப்பட்டிருக்கிறது. இதை சொன்னவுடன் “மூட நம்பிக்கை உள்ளவங்க” என்று அவள் பரிகசித்தாள்.
வெட்டப்பட்ட மரங்கள் அங்கங்களை இழந்து வேதனையால் துடிப்பதாகத் தோன்றியது. “இந்த பாவத்தை எல்லாம் நான் எந்த கங்கையில போய்க் கழுவறது?” இயற்கையின் தோழமைகளாக, உச்சி வெய்யிலில் கூட ஜில்லென்று குளிர்ச்சியைத் தந்த, விளையாட்டு சிரிப்போடு, கலகலவென்ரு பேசி மகிழும் பெரியவர்களின் நம்பிக்கைகள் தங்கி நின்ற நான் நடை பயின்ற, ஆட்டம் போட்ட வீடு ஜேசிபிக்களின் அரக்கக் கரங்களில் சிக்கி ஒரு சில மணி நேரத்திற்குள் கனவுகளின் சுடுகாடாக மாறியது.
கூட்டத்தில் இருந்து வழி மாறிவந்த ஒற்றை யானையைப் போல எழுந்த புதிய வீடு மனைவியை சந்தோசப்படுத்திக் கொண்டேயிருந்தது. இண்டீரிய எக்ஸ்டீரியர் என்றெல்லாம் சொல்லி லட்சங்கள் வெறும் நாணயங்களுடைய லாவகத்தோடு கட்டிடக் கலைஞர் கைக்குள் போட்டுக் கொள்ளும் போது அவளுடைய சந்தோஷத்தைப் பார்த்து நான் பதட்டமடைந்தேன்.
நான் வெறும் ஒரு பணம் பட்டுவாடா செய்யும் யந்திரம் மட்டுமே. வீடு கட்டி முடிக்கப்பட்டது. பால் காய்ச்சல் சடங்குகள் எல்லாம் கோலாகல கொண்டாட்டங்களாக அமர்க்களப்பட்டது. என்றாலும் அந்தக் கான்க்ரீட் கட்டிடத்தை வீடாகப் பார்க்க என்னால் முடியவில்லை. புற்றுக்குள் அகப்பட்டுக்கொண்ட எறும்பாக இருந்தேன் நான். கடன்களுடைய முகமூடிகளோடு மணல் பாலைவனத்திற்குத் திரும்பினேன். அடுத்த வருகையில் புதிய வீட்டுக்குக் கொண்டு வரவேண்டிய சாதனங்களின் பட்டியல்ஐ கையில் கொடுத்து “இந்த விஷயத்த மறந்துடாதீங்க” என்று திரும்பத் திரும்பச் சொல்லி அவள் வழியனுப்பி வைத்தாள்.
தங்கள் பங்குக்கு குழந்தைகள் அவரவர்களுடைய பட்டியல்களை முன்பே தந்திருந்தார்கள். கொதிக்கும் சட்டியில் இருந்து எரியும் எண்ணைச் சட்டிக்கு நான் திரும்பினேன். எண்ணையின் விலை குறைவு, பொருளாதார மந்தம், சுதேசித்துவம் எல்லாம் சேர்ந்து பயந்தது போலவே நடந்தது.
“வேலையில் இருந்து டிஸ்மிஸ்” என்ற அறிவிப்பு கண்ணில் இருட்டைப் பரப்பியது. விவரத்தை வீட்டிற்குச் சொன்னேன். விளைவு… வீட்டில் இருந்து வரும் போன் அழைப்புகளின் எண்ணிக்கைக் குறைந்தது. ஒரு ஆயுசின் கடன்! குழந்தைகளின் படிப்புச் செலவு. வயதான அம்மா அப்பா. யோசித்துப் பார்த்தபோது வேறு வழி எதுவும் தோன்றவில்லை.
வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது மனைவியிடமும் குழந்தைகளிடமும் முன்பு இருந்த உபசரிப்பு எதுவும் இப்போது இல்லை. கேட்காமல் வீட்டிற்குள் நுழைந்த அந்நியனுடைய நிலை. வழக்கம்போல நெற்றியில் பாசத்தோடு முத்தம் கொடுத்து அப்பாவும் அம்மாவும் வரவேற்றார்கள். மகனுடைய வாழ்க்கையில் ஒரு நெருடலாக மாறிவிடாமல் இருக்க என்றும் மௌனத்தின் ஆழ்கடலுக்குள் ஒளிந்துகொண்டு அவர்கள் இருந்தார்கள். அது என்னுடைய வேதனைக் கடலின் ஆழத்தை அதிகப்படுத்தியது.
“பணம் இல்லாதவன் பிணம்” என்று காலம் மீண்டும் நிரூபித்தது. கடன் அதிகமானது. தினப்படி சோற்றுக்குக் கூட வழி இல்லாமல் ஆன போது “வீட்ட வித்துட்டா என்ன?” என்ற யோசனையை மனைவி முன் வைத்தாள். அவளுடைய முகத்தில் ஓங்கி ஒரு அறை கொடுக்கலாம் என்று தோன்றியது.
அம்மாவும் அப்பாவ்ம் எப்போதும் எதற்கும் தடையாக இல்லாதவர்கள். மகனுடைய, குடும்பத்துடைய நன்மையை மட்டும் கனவு காண்பவர்கள் அவர்கள். அவர்களை வேதனைப்படுத்தக் கூடாது. காலுக்கு அடியில் மண் அரித்துக்கொண்டு போகத் தொடங்கியபோது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டி வந்தது.
வீட்டையும் தோட்டத்தையும் விற்கத்தான் வேண்டும். முன்னோர் வாழ்ந்த பூமி. கோயில் காடு. அன்னமூட்டிய தோட்டம். அம்மா அப்பாவின் எதிர்ப்பு கண்ணீராகப் பொழிந்தது. கடனைத் தீர்க்க வீட்டை விற்று வரும் காசில் பாதிக்கும் மேல் வங்கிக்குப் போய்விடும். வேறு எங்கேனும் ஒரு பிடி மண். நிம்மதியாக தலை சாய்க்க… மீண்டும் கிடைக்குமா? அப்பாவின் அம்மாவின் கண்ணீர் இனி ஒருபோதும் சிந்தப்படாது என்று தெரிந்தபோதும் அவர்கள் என்னை இனி ஒருபோதும்
சபிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கைதான் என்னை தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்டு வந்தது.
வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒவ்வொரு மனிதனும் பாழ்மரம்தான். பணம் காய்க்கும் பாழ்மரம்! வருமானம் இல்லாமல் போனால் வாழ்க்கையே குப்பை. “தெய்வமே! ஏன் இப்படி செய்கிறாய்?” எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.