ஓவிய உலகம் சுருங்கி ஒரு சிறிய கிராமத்தில் அடங்க வேண்டும் என்று கற்பனை செய்தால், அதை உண்மையாக்கும் ஒரு இடமிருக்கிறது. அது ஓவிய உலகம் - டாபன். இந்த ஊரில் 5000க்கும் அதிகமான ஓவியர்கள் இருக்கின்றனர். இந்த ஊரில், ஒவ்வொரு ஆண்டும் ஐம்பது இலட்சம் படங்களுக்கும் மேல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஊரில் எங்கு திரும்பினாலும் அழகிய படங்களுடனான ஓவியக் கூடங்கள். இங்கு, உலகின் அனைத்து ஓவியக் கலைகளையும் ஒரே இடத்தில் காண முடியும்.
சீனாவின் சென்ஜென் நகரின் ஒரு சிறிய கிராமம். இந்தக் கிராமத்தை டாபன், எண்ணெய் ஓவியக் கிராமம் என்றே அழைப்பர்.
ஹாங்காங் வியாபாரி, 1989 ஆம் ஆண்டு பன்னிரண்டு ஓவியர்களைக் கொண்டு ஆரம்பித்த சிறிய கூடம், இந்த இருபது வருடங்களில் தேர்ந்த ஓவியர்களை உருவாக்கி, 5000 மக்களைக் கொண்டு, நூற்றுக்கணக்கான கூடங்கள் ஏற்பட்டு, இலட்சக் கணக்கில் ஓவியங்களை உற்பத்தி செய்யும் இடமாக உயர்ந்துள்ளது. உலகின் மிகவும் அதியமான ஓவியங்களை மொத்தமாக உற்பத்தி செய்யும் இடமாக இந்த ஊர் பெயர் பெற்றுள்ளதைக் கண்டு மகிழ்வதுடன் ஓவியக்கலையின் உச்ச நிலையையும் உணர முடியும்.
ஓவியத் தொழிலை ஏற்க விரும்பும் எவரும் இந்த நகரத்தைப் பார்ப்பது, இந்துக்களுக்கு காசி, முஸ்லிம்களுக்கு மெக்கா, கிருஸ்துவர்களுக்கு ஜெருசலேம் போல ஓவியருக்கு டாபன் என்று சொன்னால் அது மிகையாகாது.
திரும்பிய பக்கமெல்லாம் தெருக்கள். தெருக்கள் தோறும் ஓவியக் கூடங்கள். ஓவியக் கூடங்களில் விதவிதமான படங்கள். இயற்கைக் காட்சிகள், முக்கிய நபர்களின் படங்கள், சீனப் பண்பாட்டு ஓவியங்கள், புதுப்புது உத்தி ஓவியங்கள். மலர்கள். ஓடைகள். மலைகள். பறவைகள். குழந்தைகள். விளங்காத படங்கள். நவீனப் படங்கள் என பல்வேறு கருத்துகளைக் கொண்ட அனைத்தையும் காண உதவும் இடம். சீன எழுத்துக் கலை, சிலைகள், ஆங்காங்கே... ஓவியர்கள் படங்களை வரைந்து கொண்டு இருப்பதையும் காணலாம். அவர்கள் உபயோகப்படுத்தும் உத்திகளைக் கண்கூடாகக் கண்டு மகிழலாம்.
மன்னர்கள் ஓவியர்களையும், கலைஞர்களையும் ஆதரித்தார்கள் என்று வரலாற்றில் படித்த போது, அவர்கள் அப்படி ஏன் செய்தார்கள் என்று எண்ணியதுண்டு. ஆனால் இங்கிருக்கும் படங்களைக் கண்ட போது, ஒவ்வொரு படத்தின் ஆழத்தையும் அழகையும் காணும்போது, நாமும் அவர்களாக இருந்து நம்மிடம் அத்தனை செல்வம் இருந்தால், ஓவியர்களை நாமும் ஆதரிக்கலாமே என்று தோன்றும். உண்மைக் கலையை உள்ளன்போடு காணத் தகுந்த இடம் இது.