குப்தப் பேரரசர்களில் புகழ்பெற்ற இரண்டாம் சந்திர குப்தரின் அரசவையின் நவரத்தினங்கள் எனப் போற்றப்பட்ட ஒன்பது அறிஞர்களில் ஒருவர் அமரசிம்மன். கி.பி நான்காம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த பௌத்த அறிஞரும், அமரகோசம் எனும் சமஸ்கிருத மொழியின் இலக்கண ஆசிரியர் மற்றும் கவிஞருமான இவரது படைப்புகளில் மிகவும் புகழ் பெற்றது சமசுகிருத மொழி இலக்கண நூலான அமரகோசம் ஆகும். சமஸ்கிருத மொழியில் 'அமரம்' என்றால் அழிவு இல்லாதது, 'கோசம்' என்றால் புத்தகம் என்றும் பொருள் கொள்ளலாம். அமரகோசம் என்பதற்கு ‘அழிவில்லாத புத்தகம்’ என்பது பொருள்.
இந்தியாவில் தோன்றிய சமயங்களைச் சேர்ந்த, அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சமஸ்கிருத நூலான அமரகோசத்தில், மொத்தம் 1608 சுலோக வரிகள் உள்ளன. அவ்வரிகள் மொத்தமாக, 11,580 சொற்களால் உருவாக்கப் பட்டுள்ளன. இந்நூலின், ஒரு சொல்லை எடுத்தால் அதற்கு ஈடான வேறு பல சொற்களையும் (synonyms – பர்யாய சப்தம்), ஒரு சொல்லுக்குரிய பல்வேறு பொருட்களையும் (நாநார்த்த சப்தம்) தருவது, இதன் சிறப்பாகக் கருதப்படுகிறது. இவற்றில் திரும்பத் திரும்ப இடம் பெற்ற சொற்களைத் தவிர்த்தாலும், மொத்தம் 9031 சொற்கள் உள்ளன. இந்நூல் ’காண்டங்கள்' என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1. பிரதம காண்டம் – 2465 சொற்கள்
2. துவிதிய காண்டம் – 5827 சொற்கள்
3. திருதிய காண்டம் – 3288 சொற்கள்
ஒவ்வொரு காண்டமும், வர்க்கம் எனும் பெயரில் பல உட்பிரிவுகளாகக் கீழ்கண்டவாறு தொகுக்கப்பட்டுள்ளது.
1. ஸ்வர்க வர்க்கம் (ஸ்வர்கத்தில் இருப்பவற்றின் பெயர்கள்)
2. வ்யோம வர்க்கம் (ஆகாயம்)
3. திக் வர்க்கம் (திசைகள்)
4. காலவர்க்கம் (காலம்)
5. தீ வர்க்கம் (அறிவு / ஞானம்)
6. சப்த வர்க்கம் (ஓசை, இசை)
7. நாட்ய வர்க்கம் (நாடகம்)
8. பாதாளபோகி வர்க்கம் (பாதாள உலகம்)
9. நரக வர்க்கம் (நரகம்)
10. வாரி வர்க்கம் (நீர்)
11. பூமி வர்க்கம் (பூமி)
12. புரவர்க்கம் (நகரங்கள், ஊர்கள்)
13. சைல வர்க்கம் (மலைகள்)
14. வநௌஷதி வர்க்கம் (காடு, மூலிகைகள்)
15. சிம்ஹ வர்க்கம் (மிருகங்கள்)
16. மனுஷ்ய வர்க்கம் (மனிதர்கள்)
17. பிரம்ம வர்க்கம் (மனிதர்கள்)
18. க்ஷத்ரிய வர்க்கம் (மனிதர்கள்)
19. வைஸ்ய வர்க்கம் (மனிதர்கள்)
20. சூத்ர வர்க்கம் (மனிதர்கள்)
21. விசேஷ்யநிக்ன வர்க்கம்
22. சம்கீர்ணவர்க்கம் (மற்றவை)
23. நாநார்த்த வர்க்கம் (ஒரே சொல்லுக்கு ஈடான பல சொற்கள்)
24. அவ்யய வர்க்கம்
25. லிங்காதி சங்கிரக வர்க்கம் (ஆண்பால்/பெண்பால்)
பொருள் செறிவு மிக்க இந்நூலுக்கு, பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு அறிஞர்கள், விளக்க உரைகள் எழுதி உள்ளனர். அமரகோசத்திற்கு கிட்டத்தட்ட அறுபது உரைகள் வரை எழுதப்பட்டுள்ளன. இது தவிர, சீனம், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உரைகள் எழுதப்பட்டுள்ளன. கி.பி. 1700 ஆம் ஆண்டு காலத்தில் ஈசுவர பாரதி என்பவரால் அமரகோசம் தமிழில் “பல்பொருட் சூடாமணி” என்னும் பெயரில் தமிழ் விருத்தப் பாக்களாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக, தமிழறிஞர் மு. சண்முகம் பிள்ளை அவர்களின், “நிகண்டு சொற்பொருட்கோவை” என்னும் நூலின் மூலம் தெரிய வருகிறது. இது தவிர லிங்கய்ய சூரியின், லிங்க பட்டீயம் என்கிற அமரகோச உரையைத் தழுவி, திருவேங்கடாசாரி கி.பி. 1915 ஆம் ஆண்டில், கிரந்த எழுத்தில் சமஸ்கிருதமும், தமிழும் கலந்து ஒரு நூலும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு, தஞ்சை சரசுவதி மகால் நூலகம், இந்த அமரகோசத்தை எளிய தமிழில் பொருளுடன் பதிப்பித்து உள்ளது.