இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றி, அதன் பின்பு, இந்திய தேசியக் காங்கிரசின் தலைவர், சென்னை மாகாண முதல்வர், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் என்று பல பதவிகளில் பணியாற்றியவர் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார். பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் மூன்று இந்தியர்களில் ஒருவர். இராஜாஜி என்றும், மூதறிஞர் இராஜாஜி என்றும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டவர்,
இவர் தமிழ் மொழியில் துக்கடா பாடல் ஒன்றை எழுதியிருந்தார்.
அதென்ன துக்கடா பாடல்...? என்றுதானேக் கேட்கிறீர்கள்.
கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் மங்களம் பாடி நிறைவு செய்வதற்கு முன்பாக பாடப்படும் சிறிய பாடல்கள், ‘துக்கடா’ என்று அழைக்கப்படும். துக்கடா என்பதற்கு ‘அளவில் சிறிய’ என்று பொருள். பொதுவாக, இராகம் தானம் பல்லவி எனும் இசைவடிவம் தனி ஆவர்த்தனத்துடன் முற்றுப் பெற்ற பிறகு, தில்லானாக்களும் துக்கடாக்களும் பாடப்படும்.
இசை நிகழ்வுகளில் 75 சதவிகித நேரம் முடிந்த நிலையில், பாடகர் தனது முறைப்படி வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சிப் பகுதியை முடித்துக் கொண்டு அளவில் சிறிய பாடல்களை பாடத் தொடங்குவார். இவ்வேளையில், நேயர்களின் ‘வேண்டுகோள் பாடல்’களையும் பாடுவார். துக்கடாக்கள் பாடப்படும் அந்தக் காலக்கட்டம், பாடகருக்கும் நேயர்களுக்கும் இடையேயுள்ள உறவுப்பாலத்தை வலுப்படுத்தும் நேரமாகும்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான கருநாடக இசைக் கச்சேரிகளில் 'துக்கடா'வாகப் பாடப்படும் புகழ் மிக்க பாடல் எதுவென்று தெரியுமா?
‘குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா’
எனும் வரிகளுடன் தொடங்கும் இப்பாடல்தான் பெரும்பான்மையான மேடைகளில் துக்கடாவாக பாடப்படுகிறது.
திருவேங்கடக் கடவுள் மீது பாடப்பட்ட இந்தத் தமிழ்ப்பாடல்தான் இராஜாஜியால் எழுதப்பட்டது. தமிழறிஞர் மீ. ப. சோமசுந்தரம் அவர்களின் உதவியுடன் இயற்றப்பட்ட இந்தப் பாடல் 1967 ஆம் ஆண்டில் ‘கல்கி’ இதழில் வெளிவந்தது. இந்தப் பாடலுக்கு இசை வடிவம் தந்தவர் கடையநல்லூர் வெங்கட்ராமன் என்பவர் ஆவார். மறைந்த இசை மேதை பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமியால் 1979 - 1980 ஆம் ஆண்டுகளில் முதலில் பாடப்பட்டது. அதன் பிறகு இசையுலகில் மிகப் பிரபலமானது. இராஜாஜி இந்த ஒரு பாடலைத் தவிர, வேறு பாடல் எதையும் எழுதவில்லை என்றாலும், இந்தப் பாடல் இன்றும் அனைவரும் கேட்டு ரசிக்கும் பாடலாக இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமிருக்க முடியாது.