பரத்தைவயல் நாக முத்தையா என்ற புலவர் ராமநாதபுரத்திலுள்ள நயினார் கோயில் நாகநாத சுவாமியிடமும் சௌந்தர்ய நாயகி அம்பாளிடமும் பேரன்பு கொண்டவர்.
ஒரு சமயம் அவர் முத்துராமலிங்க சேதுபதி அரண்மனைக்குச் செலுத்த வேண்டிய பணத்தில் நூறு பொன் பாக்கி வைத்துவிட்டார்.
அதனால் இரக்கமின்றி தாசில்தார் அவரைச் சிறையில் அடைத்து விட்டார்.
சிறையில் வாடிய அவர் நயினார் கோயில் சுவாமியை நினைத்து இந்தப் பாடலைப் பாடினார்.
”கையிலே ஒருகாசுக்கு இடமோ இல்லை
கடனென்றால் ஐஞ்ஞூறு பொன் மேலாச்சு
நெய்யிலே கைபோட்டுக் கொடுப்போம் என்றால்
நிருவாகம் அரண்மனையார் அறிய மாட்டார்
பையிலே பணமிருக்க நீரும் சும்மா
பார்த்திருக்க நீதியுண்டோ பரனே எம் ஐயா
மையிலே தோய்ந்த விழி உமையாள் பங்கா
மருதூரா என் வரிக்கே வழி செய்வாயே”
அவர் பாடிய பாடலைக் கேட்டு பரமனின் மனம் இளகியது. பக்தனுக்கு உதவ அன்றிரவே சுவாமி, சேதுபதியின் கனவில் சென்று, ''ஏன், என் மகன் நாகமுத்தனைச் சிறையில் அடைத்தாய்?'' எனக் கேட்டு மறைந்தார்.
திடுக்கிட்டு எழுந்த மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரம் யோசித்துவிட்டு மீண்டும் உறங்கச் சென்றார்.
ஆனால் சற்று நேரத்தில் அம்மனும் அவர் கனவில் தோன்றி, ''அப்பா, என் தாலிப் பொட்டை அடகு வைத்து, வரிப் பணத்தை வாங்கிக் கொள்'' என்று சொல்லி மறைந்தார்.
நடுக்கத்துடன் விழித்தெழுந்த சேதுபதி விவரம் அறிய தாசில்தாரை வரவழைத்தார். நடந்ததை அறிந்து, தானே சிறைச்சாலைக்குச் சென்று, புலவரை வணங்கி, மன்னிப்புக் கேட்டு அவரை விடுவித்தார். அத்தோடு தன் தவறுக்குப் பரிகாரமாக அவருக்கு இரண்டு கிராமங்களை மானியமாக அளித்தார்.