குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதலமைச்சர் மற்றும் இப்பதவிகளில் இருந்தவர்கள் இறக்கும் நிலையில், அவர்களுக்கு முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் நிகழ்வு நடைபெற்று வந்தது. அதன் பிறகு, இதில் மாற்றம் செய்யப்பட்டு, அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், சட்டம் என்று ஏதாவதொரு துறைக்குச் சிறப்பான பங்களிப்பு செய்தவர்கள் மறைந்து விட்ட நிலையில், அவர்களது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு இந்திய அரசு அல்லது மாநில அரசு முடிவெடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அரசின் முழு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் நிகழ்வில், 21 குண்டுகள் முழங்கும் வழக்கம் நடைமுறையிலிருக்கிறது. அதாவது, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் போது, இராணுவச் சடங்குகளுள் கடைப்பிடிக்கப்படுகிற வானத்தை நோக்கி 52 வினாடிகளில் 21 குண்டுகள் முழங்க சுடப்படுவதைக் குறிக்கிறது.
இந்த நடைமுறை எப்படி வழக்கத்திற்கு வந்தது தெரியுமா?
அன்றையக் காலத்தில் கடல் வழிப் பயணமே முதன்மையானதாக இருந்து வந்தது. போர் முடிந்து சொந்த நாட்டிற்குக் கடல் வழியாகத் திரும்பி வந்த வீரர்கள், இனி எவரையும் தாக்குகின்ற எண்ணம் இல்லை என்பதைத் தெரிவிக்கும் விதமாகத் துப்பாக்கியில் இருக்கும் அனைத்து ரவைகளையும் கடற்கரையை நோக்கிச் சுட்டுவிடும் சடங்கைக் கடற்படையினர் செய்து வந்தனர்.
இதே போன்று, வேற்று நாட்டினர் கடல் வழியாக இறங்கி, இன்னொரு நாட்டிற்குள் நுழையும் போது, தங்களுடைய துப்பாக்கிகளில் குண்டுகள் ஏதும் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக வானம் பார்த்துக் குண்டுகளை முழங்கி விட்டு நாட்டிற்குள் நுழைவார்கள். பிரிட்டிஷார் தங்களுடைய ஆதிக்கத்தில் நிறைய நாடுகளை வைத்திருந்ததால், அவர்கள் இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்கச் செய்து வந்தனர். அதன் பிறகு, தலைவர்களின் இறப்புக்கு இந்தத் துப்பாக்கிச் சுடுதலை ஒரு மரியாதையாகச் செய்யத் தொடங்கினர்.
17 ஆம் நூற்றாண்டில் இருந்து கடற்படையில் நீண்ட நாட்களாகப் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வந்த இந்தப் பழக்கம், இன்று ராணுவ மரியாதையாக நிலைத்து விட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி புரிந்தக் காலத்தில் இறந்தவர்களின் தகுதியைப் பொறுத்து, அரசர் என்றால் 101 குண்டுகள் என்பதிலிருந்து கவர்னர் என்றால் ஒன்பது குண்டுகள் வரை முழங்க வேண்டும் என வரையறை வகுத்திருந்தார்கள். இந்தியா விடுதலை பெற்ற பின்பு, குண்டுகள் முழங்குவதற்கான எண்ணிக்கை வேறுபாடுகளை நீக்கி 21 குண்டுகள் என்பதை நிலையாக்கி விட்டனர். தற்போது, பன்னாட்டு முறையாக மாறியதுடன், இறுதிச் சடங்கில் அரசு மரியாதையை வெளிப்படுத்தும் விதமாகவும் மாறிவிட்டது.
இறுதிச் சடங்கில் சுடப்படுகின்ற இந்தக் குண்டுகள் சோடியம் நைட்ரேட்டால் தயாரிக்கப்படுகின்றன. இந்த குண்டுகள் முழக்கம் என்பது இறுதிச் சடங்கிற்கு மட்டுமன்றி, குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு, வெளிநாட்டு தலைவர்களை நம் நாட்டுக்கு வரவேற்பது, குடியரசு தினம் இப்படி அரசு விழாக்களிலும் கடைபிடிக்கின்றனர்.
துப்பாக்கியில் சுட்டு முடித்ததும் கீழே விழுந்த குண்டுகளை ராணுவ வீரர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கட்டாயம் ஒப்படைக்க வேண்டும். இது ராணுவத்தில் கடைபிடிக்கப்படும் நடைமுறையாகவும் இருந்து வருகிறது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.