சென்னை, மாநிலக் கல்லூரியில் அந்நாட்களில் வாரந்தோறும் தமிழ்ச் சங்கக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
வாரம் ஒருவர் அங்கு சொற்பொழிவு நிகழ்த்துவார். அந்தக் கூட்டத்திற்கு மகாகவி சுப்ரமணிய பாரதியார் தவறாமல் வருவார்.
ஒரு முறை அங்கு பேசுவதற்காக ஜி.ஏ. வைத்தியராமையர் என்பவர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்.
அவர் ஆங்கிலத்தில் மிகவும் புலமை வாய்ந்தவர். எனவே அங்கிருந்தவர்கள், "இவருக்குத் தமிழ்மொழியின் சிறப்பைப் பற்றி என்ன பேசத் தெரியும்? என்று தங்களுக்குள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் வைத்தியராமையர் பேசும் போது, “தமிழைப் பற்றி அதிகம் பேசுவானேன்? உயர்ந்த பழைய மொழிகள் என்று சொல்லப்படும் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளைத் திருவள்ளுவர் இயற்றிய மொழி இது; நவரசம் பொருந்திய ராமாயணத்தைக் கம்பர் செய்த மொழி இது; எல்லோருடைய மனதையும் கரைத்து உருக்கி, பக்தி உண்டாக்கும் தேவாரத்தை நாயன்மார்கள் பாடிய மொழி இது; ஆழ்வார்கள் பிரபந்தம் பாடிய மொழி இது” என்று இரத்தினச் சுருக்கமாகத் தமிழின் பெருமையைக் கூறினார்.
"இவருடைய பேச்சுதான், பாரதியார், யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்' என்றும், 'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர் போல்' என்றும் எழுதத் தூண்டுகோலாக அமைந்திருக்கும்” என்று தமிழ்த்தாத்தா உவே. சாமிநாதய்யர் தமது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.