அழும்போதோ அல்லது உணர்ச்சி வசப்படும் போதோ கண்ணீர்ச் சுரப்பிகள் தூண்டப்பட்டு கண்ணீர் வரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் திடீரென ஒரு நகைச்சுவையைக் கேட்டு வெடித்துச் சிரிக்கும் போது நம்மையறியாமல் நமது கண்களில் கண்ணீர் பொங்கி வரும். இது எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா?
நாம் திடீரென சிரிக்கும்போது நமது கன்னத்தின் தசைகள் வேகமாக அழுத்தப்படும். இதனால் கண்ணின் ஓரத்தில் அமைந்துள்ள கண்ணீர் சுரப்பிகளுக்கு திடீர் அழுத்தம் உண்டாகும். இதன் காரணமாக கண்ணீர் வெளிவரும். உணர்ச்சி வசப்படும் போது நமது மூளையில் டோபோமைன், செராட்டினான் உள்ளிட்ட பலவித ஹார்மோன்கள் சுரக்கும். இதனால் நமது உணர்ச்சி காரணமாக மூளை நியூரான்களின் உத்தரவின் பேரில் கண்ணீர் சுரப்பிகள் கண்ணீரை வெளியிடும்.
திடீர் மகிழ்ச்சியின்போது மூளை ஹார்மோன்கள் சில சமயங்களில் தூண்டப்படும். இதனால் கண்ணீர் வரலாம். ஆனால் சிரிக்கும்போது அதிகளவு கண்ணீர் வந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. இது வைட்டமின் சி சத்துக் குறைபாடு காரணமாகவும் ஏற்படலாம். ஆனால் அழுது முடித்த பின்னரும், கண்ணீர் வர சிரித்து முடித்த பின்னரும் மன மகிழ்ச்சி, நிம்மதி ஏற்படும்.