திருநாவுக்கரசர் திருவானைக்கா, திருவெறும்பியூர், திருச்சிராப்பள்ளி முதலிய தலங்களிலுள்ள சிவபெருமானைத் தரிசித்துவிட்டு, காவிரியாற்றைக் கடந்து திருப்பைஞ்சீலியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் பசியாலும் தாகத்தாலும் மிகவும் களைத்திருந்தார்.
மெய்யடியார்களின் துன்பம் பொறுக்காத அருட்பெருங்கடலாகிய இறைவன், திருநாவுக்கரசரின் வருத்தத்தைப் போக்கத் திருவுளம் கொண்டார்.
அதனால் அவர் திருநாவுக்கரசர் வரும் வழியில் ஒரு சோலையையும் குளத்தையும் உண்டாக்கி, திருநீறு அணிந்த அந்தணர் வேடம் பூண்டு, பொதிச்சோறு (கட்டுச்சோறு) வைத்துக் கொண்டு காத்திருந்தார்.
நாவுக்கரசர் தம் அருகில் வந்தபோது இறைவன் அவரை அழைத்து, “தாங்கள் மிகவும் களைத்திருக்கிறீர்கள்! என்னிடம் சோறு இருக்கிறது; அதை உட்கொண்டு, இந்தக் குளத்தில் தண்ணீரும் அருந்தி இளைப்பாறிச் செல்லுங்கள்' என்று கூறினார்.
அதற்கு நாவுக்கரசர், “சிவனருள்” என்று இசைந்து அந்தணர் தந்த உணவை உண்டு, தண்ணீரும் அருந்தி இளைப்பாறினார்.
அதன் பிறகு அந்தணர், “நீங்கள் எங்கே போகிறீர்கள்?" என்று அப்பரிடம் வினவினார்.
“திருப்பைஞ்ஜீலிக்குப் போகிறேன்” என்று சொன்ன நாவுக்கரசரிடம், "நானும் அங்குதான் செல்கிறேன்” என்று கூறி, இறைவனும் அவருடன் புறப்பட்டார்.
இருவரும் பைஞ்சீலியை நோக்கி நடந்து சென்றார்கள்.
அங்கு திருக்கோயிலை அடைந்ததும் அந்தணர் மறைந்தருளினார். அப்போது தான், "சிவபெருமானே அந்தணராக வந்தவர்” என்ற உண்மை திருநாவுக்கரசருக்குப் புரிந்தது.
அவர் இறைவனின் திருவருளை எண்ணி வியந்து திருப்பதிகம் பாடினார்.
இன்றும் அந்த ஊரில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் 'அப்பர் கட்டுசாத விழா' என்ற விழாவைக் கொண்டாடி வருகிறார்கள்,