திருமாலின் வில்லுக்கு சாரங்கம் என்று பெயர். காக்கும் கடவுளான திருமாலிடம் பல்வேறு வகையான ஆயுதங்கள் இருந்தாலும், ஐந்து ஆயுதங்கள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
சுதர்சனம் என்னும் சக்கரம், பாஞ்சசன்யம் என்னும் சங்கு, கௌமோதகீ என்னும் கதை, நந்தகம் என்னும் வாள் ஆகிய நான்கோடு, சார்ங்கம் என்னும் வில்லும் சேர இவற்றுக்குப் 'பஞ்சாயுதங்கள்' என்றே பெயர். இந்த ஐந்து ஆயுதங்களும் திருமாலின் திருக்கரங்களில் இருந்துகொண்டு, நம்மையெல்லாம் காக்கின்றன.
பழைய காலங்களில் ஒரு வழக்கம் உண்டு. இந்த ஐந்து ஆயுதங்களைப் போல், சிறு சிறு வடிவங்களில் செய்வார்கள். அப்படிச் செய்யப்பட்ட சிறு வடிவங்களைக் கயிற்றிலோ, பொன்னிலோ கோர்த்துக் குழந்தையின் கழுத்தில் கட்டிவிடுவார்கள். இதற்கு ஐம்படைத் தாலி என்று பெயர். இந்த ஐந்து ஆயுதங்களும் ஐந்து படைகளாக இருந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றும் என்பது நம்பிக்கை.