சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் உபகரணங்களைச் சிறிய அளவில் செய்த விளையாட்டுப் பொம்மைகளைச் சொப்பு பொம்மைகள் என்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கைவினைக் கலைஞர்களால் 18 ஆம் நூற்றாண்டிலிருந்து தயாரிக்கப்படும் சொப்புச் சாமான்கள் புகழ் பெற்றவை. குழந்தைகள் விளையாடவும், நவராத்திரி திருவிழாவின் போது கொலு வைக்கவும் இந்த பொம்மைகள் உதவுகின்றன.
இந்தச் சொப்புச் சாமான்கள் மரத்தால் தயாரிக்கப்பட்டு ஊறு விளைவிக்காத இயற்கை வண்ணங்கள் பூசி விற்கப்படுகின்றன. அம்பாசமுத்திரத்தில் தயாரிக்கப்படும் சொப்புப் பொம்மைகளை அம்பைச் சொப்புச் சாமான்கள் என்று அழைக்கின்றனர்.
இந்தச் சொப்பு பொம்மைகளை மஞ்சள் கடம்பு, தேக்கு, ரோஸ்வுட் ஆகிய மரக்கட்டைகளில் முன்பு தயாரித்து வந்தனர். மஞ்சள் கடம்ப மரங்கள் கிடைப்பது அரிதான பிறகும், தேக்கு மற்றும் ரோஸ்வுட் மரங்களின் விலையுயர்வுக்குப் பிறகும் ரப்பர் மரம் மற்றும் யூக்கலிப்டஸ் மரங்கள் பொம்மை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
யூகலிப்டஸ் மரத்தண்டு வெண்மையாக இருப்பதாலும், கடைவதற்கு எளிதாக இருப்பதாலும் இவற்றை வெட்டி ஆறு மாதங்களுக்கு முன்பே காய வைத்து விடுகின்றனர். பின்னர் ஒரு அடி நீளக் கட்டையாக வெட்டித் தேவையான அளவு இழைத்தும். சில பொம்மைகளுக்குக் கடைசல் முறையைப் பயன்படுத்தியும் செய்கின்றனர்.