சங்கப்பலகையில் வங்கக்கவி!

செங்கமல விரிப்பில் சிவந்த காஞ்சிப் பட்டுடுத்து
சங்கப் பலகையிலே வங்கக் கவிபடிக்க
சித்திரமாய் வந்தமர்ந்தாள் சிங்காரப் பெண்ணாள்
செட்டை முளைத்த மனம் சுற்றிவர
தொட்டத் தொட்டுத் பார்த்தேன் சிந்தனையால்
வட்டநிலா மின்சாரமாய் வந்தமர்ந்தாள்
வடிவழகென்றேன் வதனமலர்ந்தாள்
சிறகடித்த தேனீக்கள் சிலையை வட்டமிட
துடிதுடித்த நயனங்கள் கெஞ்சலாய் நோக்க
கடிதெனக் கரங்களால் விரட்டினேன்
படபடக்கும் பட்டாம்பூச்சி வதனத்தில் வந்தமர்ந்ததோவென
பவித்திரமாய்த் தொட்டேன் பிடிபட்டதோ விழிகள்
சிதறிய முத்துக்கள் இசையாய் இதழோரம்
இங்கிதமாய் பொழிந்தன, வெட்கித் தலைகுனிந்தேன்
செம்பஞ்சுக் கால்கள் மென்பஞ்சு மனங்களைச் சிறையெடுக்க
கவிதையே கவிதை வார்க்க எழுந்து வந்தது
சக்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தது
அறியாத மொழி ஆனாலும் அமுதமாய் இருந்தது
அர்த்தம் புரியவில்லை அடுக்கடுக்காய் அடுக்கு மொழி
சுடுக்கிச் சுடுக்கிச் சொல் வரிகள்
முறுக்கு மீசை முனைப்புடனே துடிதுடித்தது
தலைப்பாகை உச்சியிலே உதறலெடுத்தது
தமிழ்த்தாயே சரணடைவாளோவெனத் தடுமாறி விட்டேன்
எடுத்துவந்த கருவெல்லாம் நடுக்கம் கண்டது
தொடுத்தேன் கவிவரிகள் கற்பனையின் சொல்வரிகள்
காளமேகமாய் சரமாரி பொழிந்தன கவிதைகள்
காற்றாய்ப் பறந்துவந்தாள் கண்திறக்கும் முன்
கட்டியணைத்து என் கன்னத்திலே இச்சு இச்சு
என்னடா! கட்டியணைக்கும் தலையணை
என்ன பாவம் செய்ததோ எழுந்திரு
எழுந்து விட்டான் கதிரவனெனக்
காதில் கேட்டது தாயார் அதட்டல்
இன்னுமொரு நாள்இக் கனவு
என்வாழ்வில் வாராதோ
- சந்திரகௌரி சிவபாலன், ஜெர்மனி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.