இருவேறு சிரிப்புகள்
வந்தார்கள்
அமர்ந்தார்கள்
தேநீர் அருந்தினார்கள்.
இல்லாததையெல்லாம்
சேர்த்தும்
கோர்த்தும்
அவனை ஏராளம் புகழ்ந்து
புல்லரிக்க வைத்தார்கள்.
ஒவ்வொரு புகழ்ச்சியிலும்
அவன் சிரிப்பை
நிறுத்துப் பார்த்தார்கள்.
எடை குறைந்திருந்தால்
புதுப்புது உத்திகளைக்
கையாண்டு
புகழுரைகளில்
புதுமை படைத்தார்கள்.
அவர்கள் புகழ்ச்சியின்
நீள அகல ஆழம் அளந்து
அவனும் அவர்களுக்குச்
செய்ய வேண்டியன செய்து
அவர்களை
மகிழ்வித்தான்.
விடைபெறும் முன்
இன்னொரு முறை
உச்சத்திற்குப்
புகழ்ந்து வைத்தார்கள்.
அவனைக் கடந்தவுடன்
அவர்கள்
ஒருவரை ஒருவர் பார்த்து
அவர்களுக்குள்
சிரித்துக் கொண்டார்கள்.
அவர்களை நினைத்து
அவனும்
சிரித்துக் கொண்டான்.
- தங்கம் மூர்த்தி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.