தூக்கம்
உழைத்த களைப்பில் உண்டான மயக்கம்!
மூளையின் இயக்கத்தில் மின்சாரத் தடங்கல்!!
கண்களில் பிறந்த கனவுதொழிற் சாலை!
தன்னிலை மறந்து தள்ளாடும் போதை!!
மரணம் பெற்ற மகவுகளில் ஒன்று!
நரக வாழ்க்கையின் நிரந்தரமில்லா ஒய்வு!!
காதலர் வரவேற்கும் கனவு மாநாடு!
மோகம் அரங்கேறும் மோகனப் பூமேடு!!
குருட்டுப் பயணத்தில் குறட்டை ஒலியே!
இருட்டில் மிரட்டும் மௌன மொழியே!!
மரணத்தின் ஒத்திகையாய் மயக்குமிந்த உறக்கம்!
குரங்கான மனதினையே கட்டிவைக்கும் கடிவாளம்!!
பிறந்த குழந்தையின் பிஞ்சு மனம்போல!
உறங்கிச் சாய்வாய் உறக்கத்தில் பிணம்போலே!!
இருள் சூழ்ந்து இமைதழுவச் சொல்கையிலே
காரிகை வேண்டுமடா கண்ணுறங்கச் செல்கையிலே!!
கவிதை முடியுமுன்னே கவிக்கிரண்டு சந்தேகம்!
புவிதனில் உள்ளோரே பதில் சொல்வீரே!
உடலென்னும் கூட்டுக்குள்ளே உயிரெங்கு உள்ளதடா?
உடலா உயிரா உறக்கத்தில் ஒய்வுபெறுவது?
கவிதை முடியும்போது கவிக்கிரண்டு சந்தேகம்!
புவிதனில் உள்ளோரே பதில் சொல்வீரே!
- முனைவென்றி. நா. சுரேஷ்குமார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.