முத்தங்கள் பலநூறு தா!
சேலைகட்டி வந்தமயில் சோலையிலே கூவும்குயில்
காலையிலே என்முன்னே நடந்தாள்! – நானும்
மாலையிடும் ஆசைகொண்டு வேளைவரும் நாளையெண்ணி
சாலையிலே அவள்பின்னே நடந்தேன்!!
கார்மேகக் கூந்தலோடு வார்த்தமுகப் பொலிவோடு
சேர்த்தெடுத்த அகிலாக மங்கை! – அவளைப்
பார்த்தவுடன் என்னுள்ளே வார்த்தைவழிக் கவிதையாக
பூத்துவிட்டாள் எழிலான மங்கை!!
கச்சணிந்த முன்னழகில் மச்சமுள்ள இடையழகில்
மிச்சமுள்ள பெண்ணழகில் மயங்கி! – நானும்
கச்சணிந்த முன்னழகை மச்சமுள்ள இடையழகை
அச்சமுடன் பின்தொடர்ந்தேன் தயங்கி!!
கொஞ்சதூரம் போனபின்னே வஞ்சியவள் திரும்பிநிற்க
அஞ்சிநின்று வேறுதிசை பார்த்தேன்! – அவள்
நெஞ்சமதை நானறிய வஞ்சியவள் பெயரறிய
கொஞ்சதூரம் நடந்தபடி வேர்த்தேன்!!
தத்தையவள் எனைநோக்கிச் சித்திரமாய்த் திரும்பிவந்து
பத்திரமாய் ஒருசேதி உரைத்தாள்! – ‘நானுன்
அத்தையவள் பெற்றமகள் பைத்தியமா நீ?’என்று
புத்திமதி சொல்லிவிட்டு முறைத்தாள்!!
உண்மையது புரிந்தவுடன் மென்மையான பெண்மையிடம்
உண்மையான காதலென்று சொன்னேன்! – அவளும்
‘நானுமுனைக் காதலித்தேன் நாணமுற்ற நாள்தொடங்கி’
பெண்மையவள் மென்மையாகச் சொன்னாள்!!
முத்துரத வீதியிலே தத்திவிளை யாடுங்கிளி
சித்திரமாய் என்னருகே வந்தாள்! –அவள்
முத்துதிரும் இரத்தினமாய் மோகனமாய்ப் பத்திரமாய்
முத்தங்கள் பலநூறு தந்தாள்!!
‘குழவியாகப் பார்த்தவுன்னை தலைவியாகப் பார்த்தவுடன்
குழம்பியது என்னறிவு’ என்றேன்! – என்
தலைவியான அவளோடு தலைகோதி சாய்ந்தபடி
மழலையாக வீடுநோக்கிச் சென்றேன்!!
- முனைவென்றி. நா. சுரேஷ்குமார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.