தீபமேற்றுவோம்!
தீபாவளித் திருநாளிலே தீபமேற்றுவோம்!
தீயஎண்ண மிருந்தாலதைத் தூரவோட்டுவோம்!
கோபம்கயமை கள்ளமில்லா உள்ளம் பெறவே
கண்கள்மூடி கடவுளையே நாமும் போற்றுவோம்!!
புத்தாடைகள் அணிந்தே நாமும் பாதம் பதிப்போம்!
பூமிப்பந்தைப் புரட்டிப் போட்டு நாமும் குதிப்போம்!
தத்துவங்கள் பொய்களல்ல மெய்யேதானென்ற
தாத்தாபாட்டி அறிவுரைகள் நாமும் மதிப்போம்!!
பலகாரங்கள் வகையாய்ச்செய்து நாமும் தின்னலாம்!
பக்கம்அக்கம் உள்ளோரிடம் பகிர்ந்தே உண்ணலாம்!
சிலகாலங்கள் வாழ்ந்தேநாமும் போகும் முன்னரே
செயல்கள் நல்லசெயல்களையே நாமும் பண்ணலாம்!!
பட்டாசுகள் வாங்கிவாங்கிக் கொளுத்திப் போடுவோம்!
படபடவென்று வெடிக்கும்போது நாமும் ஆடுவோம்!
கடவுள்வேறாய் மதங்கள்வேறாய் நாமே பிரித்தோம்
கருணைஒன்றே அன்பேகடவுள் நாமும் பாடுவோம்!!
தீபாவளித் திருநாளிலே தீபமேற்றுவோம்!
தீயஎண்ண மிருந்தாலதைத் தூரவோட்டுவோம்!
கோபம்கயமை கள்ளமில்லா உள்ளம் பெறவே
கண்கள்மூடி கடவுளையே நாமும் போற்றுவோம்!!
- முனைவென்றி நா. சுரேஷ்குமார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.