பனித்துளி வாழ்க்கை!
தமிழில் கவிதைகள் காலத்துக்குக் காலம் படிமுறைப் பரிமாண வளர்ச்சிகளைக் கொண்டிருக்கிறது. இதில் ஒரே பாடுபொருளைக்கொண்ட 3 வடிவங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.
முதல் வடிவம்
சூரியன் செத்தத் தொலைந்த தேசம் எங்கணும்
ஆரியன் வாழ்வென வரலாறு இயம்பும்- இங்கே
வெண்பனி மேகங்கள் கூடி ஊர்வலம் போகும்
தண்மதி மறைந்து குளிர் வெண்மதி காயும்.
வானம் வீசும் வெள்ளைப் பூக்கள்
சீலம் உறையும் வெண்பனி நாட்கள்
மிதித்து மிதித்தே இதயம் இறுகும் - பாதம்
பதிந்து பதிந்தே பனி உறைபனியாகும்
வானம் விட்டு விழுந்த வெண்பனி
மானம் கெட்டுப் போகுமா இனி?
குறுகிய வெண்பனி இறுகிடும் வேதனை- அதனால்
வெறியுடன் கிடந்து விழுத்திடும் சாதனை
வழுக்கி விழுந்தால் வாய்கை சிதறும்- இங்கே
வழுக்கி விழுவதே வாழ்க்கையும் ஆகும்- ஊரில்
வழுக்கி விழுந்தால் விபச்சாரி என்பர் - இங்கு
வழுக்கி விழுவதே அனுவமென் றறிவர்.
நெஞ்சை நிமிர்த்தி நடந்தவர் எல்லாம்
நெஞ்சாங் கட்டையில் கட்டை வைப்பர்
அடக்கு முறைகள் ஆண்டால் அதிகம்
இடக்கு முடக்காய் எதிர்ப்பே வெடிக்கும்.
பனிக்குக் கூட எதிர்புணர்வு உண்டு - இது
தனித்த தமிழா உண்டா உனக்கு
அடிபட்ட நாயே திருப்பிக் கடிக்கும்
முறிபட்ட பின்புமா மௌனம் சிறக்கும்
வழுக்கும் பனியில் சறுக்கியே செல்லுக- இனத்தை
இழுத்து விழுத்தும் இழிமையை விடுக
அணைத்து வெல்லும் தந்திரம் உண்டெனில்
அனைத்து வெற்றியும் உனதென்று கொள்க
இரண்டாம் வடிவம்
சூரியன் செத்ததால்
பஞ்சு பஞ்சாய் அழுகிறது
வெண்முகில்கள்.
தந்தை தவறியதால்
சிந்தை கலங்கி
விழுந்து கொள்ளும்
வெண்பனிகள்
விழுந்து
தனை மறந்து
மனமிழந்து
அழுது அழுதே
இழுகிப்போனது இறுகுபனி
மிதித்து மிதித்தோ
மதியிறுகிப்போனதனால்
வழுக்கி விழுத்தும்
வல்லமை கொண்டது.
தன்னினத்தை
இழுத்து விழுத்தும்
ஈனச்செயல் விட்டு
பனிபோல்
எதிரியை வழுக்கி விழுத்தும்
வல்லமை கொள்க
உருகி உருகிக் குளிரில்
இதயம் இறுகி
வைரம் பாயந்த நெஞ்சுரம் கொண்டதால்
நெஞ்சு நிமிர்த்தி நடந்தவரெல்லாம்
நெஞ்சடி பட்டு
மாட்டமை கண்டிடும்
வழுக்கல் பனியில்
சறுக்கிப் போவதே
வாழ்வின் வல்லமை
என்பதை அறிந்திடும்.
காலத்துக்கேற்ற மாற்றங்களை கண்டு
போராடி வெல்லும் மார்க்கத்தை பெறுக
மூன்றாம் வடிவம்
வெள்ளை வெள்ளையாக
விழுந்தது வானம்
கொள்ளை கொள்ளையாய்
மனங்களில் சோகம்
வெள்ளைப் புடவையுள்
விழுந்தாள் பூமி
மனிதன்
விதவை என்றே
மகிழ்ந்தான் சாமி
விதவையின் மேலே
வினைசெய்ய விரும்பி
வினைசெய்தானே
விபரீதமாக
வித்தை காட்டி
விதவையை மிதித்தான்
விடு தலையாகி
விடுதலையானான்.
குடித்த மார்பை ஏறி மிதிக்க
மிதித்து மிதித்து தசையும் தடிக்க
மிடுக்குடன் நடந்த மமதை மனிதர்
மார்பில் சறுக்கி விழுந்தே மரணமடைவர்
இது மார்பின் மயக்கம்
செத்த முலையென்று
செருக்குக் கொண்டால்
சேய்யாயினும்
செத்தே போவாய்
உண்ட முலையில்
கண்டது மரணம்
வழுக்கி விழுந்தால்
வாழ்வே சிதறும்
வழுக்கி நடந்தால்
வாழ்க்கை வளரும்
வழுக்கும் வாழ்வை
வழுக்கிக் கடக்க
வழுக்காது போனால்
விழுக்காடு தானே
பஞ்சின் மேலே படுத்துத் தூங்கும்
பஞ்சணைக்கனவு எமக்கு எதற்கு
வழுக்கி விழுந்தால்
அபச்சாரம் என்பார்
விபச்சாரம் என்று
விரிவுரை கொள்வார் - இங்கே
வழுக்கி விழுந்து அனுபவம் தேடு
வாழ்க்கை வளரும்
வழுக்கும் வாழ்க்கை
- நோர்வே நக்கீரா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.