நாளைக்காகத் துணிந்து நட...!
தோழா !
சற்றே நில்லாய்
சொல்வதைக் கேளாய் !
நாளைய உலகம்
நம்பிக்கை கொண்டுள்ளது
நெஞ்சத்தை நிமிர்த்தி
நேராக நடந்திடு !
காலம் எனும் வீணை
கானமொன்று மீட்டுது
கச்சிதமாய் உனக்கும் அங்கு
கடமைகள் பல இருக்குது
நடந்திடும் பாதையில் உன்
பயணத்தைத் தடுத்திட
முற்களைப் பரப்பி வைக்கும்
மூர்க்கர்கள் நிறைந்த பூமி
காரியம் ஆற்றிட விளையும் போது
காரணமின்றிக் குழப்பிடும்
கயவர்கள் சூழ்ந்த நானிலம்
சறுக்கி விழுந்திடும் போது
சத்தமாய்ச் சிரிப்பரே ஒழிய
சட்டெனக் கை கொடுத்திட மாட்டார்
நிறுத்திடாதே !
உன் பயணத்தை !
வெறுத்திடாதே
உன் வாழ்க்கையை
பொறுத்திடு
பூமியைப் போலவே
முறித்திடு
முட்டாள்கள் தடைகளை
அன்னை பூமியின் மேலே தோழா !
அனைவரும் சோதரர் தானே
அன்பினை ஈந்திடும் போது
ஆண்டவன் உன்னுள் உறைகிறான்
அமைதியின் துணையுடன்
அனைத்தையும் வென்றிடும் வகையினை
அகலத்தில் உணர்த்திடுவாய்
அணிகலன் அதுவென்றாகிடுவாய்
நேற்றைகள் தொலைந்தன காண்பாய்
இன்றைகள் உன்னுடன் வாழ்கின்றன
நாளைகள் செழித்திட வேண்டி
நடந்திடு முன்னால் துணிவுடன்
- சக்தி சக்திதாசன், லண்டன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.