வீழ்ந்தாலும் நீ வாழ்வாய்!

சுட்டெரிக்கும் சூரியனை
விட்டெரித்த சந்திரனே!!
முருகனே!! பாலச்சந்திரனே!!!
சூரிய ஒளியில் காணாத காட்சியை
செய்மதி சொல்லாத செய்தியை
விஞ்ஞான வினையின் வீழ்ச்சியை
விசமிகளின் விரோத விசத்தை
உலகிற்குக் காட்டிவிட்டு
கண்மூடிய கன்றே!
நீ கண்மூடினாய்
உலகம் கண்கலங்குகிறது.
மரணம் மரணித்ததடா - உன்
சாவுகூடச் சரித்திரம் படைத்ததடா
நீறுபூத்த நெருப்பாய்
நெருப்பினில் ஈன்ற அக்கினிக்குஞ்சாய்
அரக்கர்கள் பாசறையில்
அஞ்சும் விழிகளில்
அஞ்சாது இருந்தவனே!
பிஞ்சாக இருந்தாலும்
உன்நெஞ்சை விஞ்சுமா
வஞ்சகர்கள் வீரம்.
சூரியனால் சுடுபட்ட கண்ணிழந்த குரூரரே!
குளிர்நிலவு சந்திரனுமா தெரியவில்லை
பால்மணம் மாறாப் பாலனைக்கூட
படுகொலை செய்து பார்க்கும்
ஈன இலங்கை அரசே!!
உன்னுடனா உரிமை பற்றியும்
மனிதநேயம் பற்றியும் பேசுவது?
கம்பனே காணாத
இயக்கரான அரக்கரை
அகிலத்துக்குக் காட்டியவனே
முப்பது வருடமாய்க் காணாத
விளையாத வீரத்தை
உன்விழிகள் காட்டியது
எதிரியின் பாறையில்.
பால்வடியும் முகத்தினனே - இன்று
சீழ்வடிகிறது சிங்கமுகங்களில்...!
நாசி நடத்தி நாசம்செய் கிட்லரே தடுக்க
காந்தித் தாத்தா தடிகொடுத்தார்
உன்னை அடிக்க
காருண்யசீலரை கார் உண்டது போ.
அரைக்கண்ணில் தூங்கிய புத்தன்
உன்சாவைக் கண்டு
முழுக்கண்ணையும் மூடிக் கொண்டான் - இனி
இரக்கமற்ற அரக்கத்தை கேட்பது யார்
பாலச்சந்திரா!
நீ விழிமூடினாய்
விழித்தது உலகம்
திடுக்கிட்டுத் திகைத்தது மனிதம்
சினந்து சிதைகிறது சிதையேறும் சிங்களம்
விடியலின் கிழக்கைத் திறக்கும்
உயிர்சாவிதான் உன் விழிகள்
உலகம் கேட்ட மொழிகள்.
வீழ்ந்த தமிழ்தலைகளுக்கும்
ஈன ஈழத்தமிழினத்திற்கும்
உன்விழிகளால்தான் விடுதலை
விழி மூடி வழிதந்த வீரனே
வீழ்ந்தாலும் நீ வாழ்வாய்.
செத்தாலும் நீ சரித்திரமே...!
- நோர்வே நக்கீரா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.