ஒரு வழிப்பாதையில்லை...!
நான் ஊருக்கு வரமாட்டேன் என்றெண்ணி
”நாளுபுள்ளையில ஓரு புள்ளைய
அந்த நாட்டுக்குத் தத்துக்கொடுத்துட்டேன்” என்று
அக்கம் பக்கம் சொல்லி ஆதங்கப்பட்டு
உறக்கம் வராமல் உருண்டு உருண்டுப் படுத்து
விழியோரம் நீர் சிந்தும் அம்மா...
உயரத் தூக்கிப் போட்டாலும்
மீண்டும் மண்மடியில் விழும் கல்லாய்
உன்மடியில் வந்துப் படுப்பேன்
அம்மா...
பதவி,பணம் புகழென்று
பட்டமாய் படப்படத்து
உயர உயரப் பறந்தாலும்
உன் அன்புச் சொல் சொடுக்களில்தான்
சோராமல் மீண்டும் மீண்டும்
உயர உயரப் பயணிக்கிறேன்
அம்மா...
ஈழம் மலரும் என்று
நாம் மட்டுமல்ல
சிட்டுக்களும்,மொட்டுக்களும்
நம்பிக்கையோடு காத்திருக்கிறதோ
அதேநம்பிக்கை சற்றும் குறையாமல்
இயக்கமாய் காத்திரு அம்மா...
என்பயணம் ஒருவழிப்பாதையல்ல
இருவழிப் பதைதான்...!
-தியாக.இரமேஷ், சிங்கப்பூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.