சிறுகதையல்ல...தொடர்கதை!
பாசத்தில் வேசங்களைப் பார்த்து
பழகிய எனக்கு உன் பாசம்
இன்ப அதிர்ச்சியடி!
வாசத்தை நுகர்ந்ததுண்டு
உண்மை நேசத்தை
உணர்ந்ததில்லை...
இன்று...
உன்னால் உணர்ந்தேனடி
இவ்வுலகில் மனித ஜென்மம்
மரணிக்கவில்லையென்று!
உன் இரக்க மனதை
வரவேற்கும் அதே நிமிடம்
இவ்வுலகைப்பற்றி
நான் கூறுகிறேன் கேள்!
உண்மைகளையும் பாசங்களையும்
இவ்வுலகம்
புதைத்துக் கொண்டிருக்கின்றது
யாரையும் நம்பாதே!
என்னைக் காணவில்லையென்று
உன் மனம்
நோகுகிறதென்றாயே
உன்னை உயிர்வாழ வைக்கும்
காற்றுக்கூடதான் உன் கண்ணில்
தென்படுவதில்லை
அதனால் காற்று இல்லையென்பாயா?
பாசங்கள் உருவமாவதை விட
அருவமாக இருப்பதே
அழியாமலிருக்கும் அன்பே!
உண்மை அன்பை
உரக்கக் கூறவேண்டும்
என்று எண்ணுகிறாயே
அப்படியானால்...
பேச முடியாதவர்களெல்லாம்
அன்பில்லாதவர்கள் என்பாயா?
என் அன்பும் அப்படிதான்
புரிந்து கொள் அன்பே...!
நான் வரிகளில் இனிமையாய்
எழுதி முடிக்க என் அன்பு
சிறுகதையல்ல... அது
என்றுமே முடியாத ஒரு
தொடர்கதை!
- வி. சந்திராதேவி, நமுனுகுல, இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.