வாழ்வின் கோடு!

வாழ்க்கையை
கணக்கொடுக்கிறது காலம்.
காலத்தை
தின்று கொண்டிருக்கிறது நேரம்
மணி மணியாய் தின்னும்
மணியின் மணியான கூட்டை
மணிக்கட்டில் கட்டி அழகு பார்க்கினும்
காலத்தைக் கொன்று தின்கிறது
மணி மணியாய் கடிகாரம்.
காலத்தைக் கலைத்துக் கொன்ற
நேரத்தைத்தானே
கணக்கெடுக்கிறதுக் காட்டுகிறது
கடிகாரம்.
காரமாய் கடிப்பதால் கடிகாரமோ?
கடியக் கடிய கடித்தகாலமே இறந்தகாலம்.
இனி நாம் இறக்கும் காலமே எதிர்காலம்
காலம் கடித்தாலும்
ஓடாத சிலர் வாழ்க்கை
கடிகாரம் கடித்தா ஓடப்போகிறது?
பறந்துபோன இறந்த காலத்தை எண்ணி
நிறைந்து கொண்டாடுகிறதே பிறந்தநாள்
சாவைச்சந்திக்கும் மரணப் பயணத்தின்
மைல்கற்களாம் பிறந்தநாட்களை வாழ்துகிறார்களே
சாவுக்குச் சுகம் சொல்கிறார்களே!
சாவும் ஒரு விடுதலைதான்
உடலை விடும் தலை
விழும்தலைதானே
உயிருக்கு விடுதலை.
கடிகாரம் நின்றாலும்
நிமிடங்கள் தின்னும் நேரம் நிற்குமா?
காலத்துக்காய்
காத்திருக்கிறான் காலன்.
வாழ்வை கணிக்கும்
வாழ்வுக்காலம் குறிகினும்
நேரம் நிற்காது
நிமிடம் உனை நினைக்காது.
நிமிடங்கள் ஓடுகின்றன
மணியை நோக்கி
வாழ்க்கை ஓடுகிறது
சாவை நோக்கி
சாகும் காலம்தானே
கடிகாரத்தால்
கணக்கெடுக்கப்படுகிறது.
சாவைத்தேடி ஓடும் வாழ்வை
வாழ்வு என்கிறார்களே வக்கற்றவர்கள்.
காலன் கவர்ந்த உன் உயிர்போல்
சொன்ன சொல்லும்
செத்த செக்கனும் திரும்பாது.
காலத்தைக் கையகப்படுத்து
காலத்தைக் கடந்து நிற்கும்
ஒர் உயரிய வாழ்வுக்காய்
புண்ணியம் கொண்டு
ஊனுடலால் புண்ணியம் தேடு
இதுவே வாழ்வின் கோடு
- நோர்வே நக்கீரா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.