இறைவன் இருக்கின்றானா?
சாலைகளின் நடுவில்,
பேருந்து நிறுத்தத்தில்,
தொடர் வண்டிக்குள்,
பூங்காவில் இப்படியாய்
தாயைத் தவிக்க விட்டவர்கள்
தாய்ப்பால் குடித்துத்தான்
வளர்ந்தார்களா...?
வயதான காலத்தில்
ஓய்வெடுக்க விடாமல்
வீட்டு வேலைகளைக் கொடுத்து
வேலைக்காரியாக்கியவர்கள்
தாய்ப்பால் குடித்துத்தான்
வளர்ந்தார்களா...?
வசதிகள் இருப்பதால்
வயது முதிர்ந்தவர்களை
வயதானோர் இல்லத்திற்கு
வழியனுப்பி வைப்பவர்கள்
தாய்ப்பால் குடித்துத்தான்
வளர்ந்தார்களா...?
இப்படியெல்லாம்
சிலரை கேட்க வேண்டும்...
என்று நினைத்தாலும்
எல்லாம் வல்லவன் வீற்றிருக்கும்
வாசலில் வறுமையாய்
எத்தனையோ தாய்கள்...!
இருப்பதைப் பார்க்கும் போது...
இறைவன் இருக்கின்றானா...?
என்றுதான் கேட்க வேண்டும்...!
- பாரதிசந்திரன், திருநின்றவூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.