அம்மாவின் தீர்ப்பு!
குழந்தையின் நண்பனாக
இருப்பது யாரென
காகத்திற்கும் நிலவிற்கும்
வாக்குவாதம் நடந்தது
என்னைக் காட்டித்தான்
சோறூட்டுகிறார்கள்
எனக் காகமும்
என்னையும் காட்டித்தான்
அமுதூட்டுகிறார்கள்
என நிலவும்
என்னைப் பிடிக்கவே
தத்தி வருகிறது குழந்தை
எனக் காகமும்
என்னையும் எட்டிப் பிடிக்க
முயற்சிக்கிறது குழந்தை
என நிலவும்
தொடர்ந்து முட்டிக் கொள்ள
எட்டி நின்று
கேட்டுக் கொண்டிருந்த
அம்மா வந்து
தீர்த்து வைத்தாள்
பகலில் காகமும்
இரவில் நிலவும்
குழந்தைக்கு நண்பர்களாக
இருக்க வேண்டும்...!
- இவள் பாரதி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.