நானில்லா மனிதன்!
என் பெயர் நாணயம்
நானில்லாத மனிதன்
நாணயமில்லாதவன்!
# நாணயம் நான்
நியாயமாய் இருந்தால்
நாணயமாயிருப்பேன்...
# மனிதனின்
எல்லாவிதமான
உழைப்பு தவத்திற்கும்
உயர்வு வரம் கொடுப்பேன்...
# என்னைத் தொடாதவர்
ஒருவருமில்லை
தொட்டுவிட்டு
மதியாதவர் எவரும்
வாழ்ந்ததுமில்லை...
# காலங்காலமாய்
உலகின் மொத்த
கஜானாவில்
எனக்கே
முதல் மரியாதை...
# நான்
வெளியேறி விட்டால்
பெரும் செல்வச் சீமானும்
நொடிப்பொழுதில்
தெருவுக்கு வந்துவிடுவார்...
# நான்
நுழைந்த வீட்டின்
உள்ளே சந்தோசம்
சம்மனம் போட்டு அமரும்...
# ஒரு பெண்ணுக்கு
வரன் தேடும் முன்
இப்போதெல்லாம்
என்னைத்தான்
முதல் வரவாய்க்
கணக்கு வைக்கனும்...
# எனக்கு
எலும்பு கிடையாது
எப்படியும் மாறுவேன்
எதையும் மாற்றுவேன்...
# உயிர் போகும் நிலையிலும்
எனது உதவியால்
மரணம்கூட கொஞ்சம்
தள்ளிப் போகலாம்...
# முன்பு நான்
தங்கத்திலான ஆடையுடுத்திய
அரசு சேவகன் - நகை
தாம்பூழத்தட்டில்
கௌரவமாயிருந்தேன்...
# இன்றைய ஜனநாயகத்தில்
இரண்டாக, நான்காக
மடக்கவும்
கறுப்பாக முடக்கவும்
வழிசெய்து விட்டனர்...
# பொருளாதாரம்
என் தலைமையின் கீழ்
ஏற்றத்தாழ்வாய்
அணிவகுக்கப்படுகிறது...
# பல தீமைகளுக்கும்
பெரும் இழப்புக்கும்
நானே கூட காரணம்...
ஆனாலும், என்னைத்
தீண்டத்தகாதவனாய்
ஒரு நாள் கூட
யாராலும் ஒதுக்கமுடியாது...
# மனிதன்
இந்த பூமிப்பந்தில்
இருக்கும் போதும்
நான் வேண்டும்
இறந்த பின்பும்
நான் வேண்டும்
ஆமாம், கடைசியில்
உயிரற்ற உடலுக்கும்
என்னைக் கொண்டு
நெற்றிப் பொட்டு!
என் பெயர் நாணயம்
நானில்லாத மனிதன்
நாணயமில்லாதவன்!
- பாரதியான்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.