இன்னொருவனின் மனைவியாக!

ஊனை உருக்கி
உயிரை உறுத்தி
பேனாவுள் ஊற்றி
புகழ் நாவால்
இதயத்தில் உயிர்த்தன
என்காதல் கவிதைகள்.
கனவு கற்பனைகள் சுமந்த
என் கவிதைகளின்
கரு-விதையே அவள்தான்.
பக்கம் பக்கமாய் புரட்டிப் பார்த்தாலும்
புதிரான புரியாத புதுக்கவிதைகளாய்
பொடிவைத்துப் பேசும் படிமப் பெண்ணாய்
என்நெஞ்செல்லாம் நிறைவாள்
உடைமாற்றும் போது
இடைமாறும் கோலம்
என்காண்ணும் காட்சியே
வானம்கொள் வர்ணஜாலம்
வசந்தத்தின் குளிர்நிலவாய்
கவிதைவடிவங்களாய்
நானில்லா நானாக
சர்வமும் அவளாக....!
பொட்டிட்டு பூவும் வைத்து
பட்டுச்சேலை கட்டி
பாங்காய் நடந்து வந்தால்
அவள் மரபு
சுள்ளென்று சுரிதாரில்
துள்ளிவரும் புள்ளிமானாய்
கள்ளி துள்ளிவந்தால்
வளமான வசனநடை
மொடேன் உடைபோட்டு
தொடேன் மரபு என
அங்கங்கே அங்கம்காட்ட
கிளித்துவிட்டுக் கிழுகிழுத்தால்
மத்தாப்பாய் புதுக்கவிதை
காட்டி மறைக்கும்
கட்டழகுக் கவர்ச்சிகாட்டி
காதல் கேட்டால்
பெண்ணியலின் படிமம்.
அட்டைப்படமாய் அவள்முகம்
நீண்ட நெடிய கூந்தல்
தாங்கி நிற்கும் நந்தவனத்தில்
பூ நாறும் புகழ் மேவும்
தொகுப்பின் கவிதைவளம்
எல்லாமே அவளாய்
இல்லாளும் அவளாய்
இல்லாது போகாது
எண்ணத்தில் வாழந்தாலும்
வாழ்த்தவும் வழிகாட்டவும்
முன்னோடிகளை
நாடி...தேடி...கூடி...!!!
பாடி..... கவிபாடி
பேரரசை.... கவிப்பேரரசை
புவியரசை....புவிசார் புகழரசை
அழைந்துவந்து தர்பார் அமைத்து
அணிந்துரை...வாழ்துரை
முன்னுரை...முகவுரை
எனஅணிசேர்த்து
கவிதைகளிலும் அணிசேர்த்து
அணிகலனாய் பொருள் சேர்த்து
நாள்பார்த்து நாள்குறித்து
மாங்கல்யம் வாங்கி வந்து
தந்து நானே என
திருமண அழைப்பு வைக்க
காதலியை அழைத்தபோது....
கழுத்திலொரு மாங்கல்யத்துடன்
முடிவுரை எழுதிவந்தாள்
இன்னொருவனின் மனைவியாக
களவெடுக்கப்பட்ட என்கவிதைகளாக
என்கவிதைத் தொகுப்புப்போல்
கொஞ்சமேனும் ஈரமின்றி
என்நெஞ்சம் எரிந்தது
வாழ்த்தவா?
அணைக்கவா?
வாழ்த்தி அரவணைக்கவா?
அறுகரிசி போட்டு வாழ்த்தவா?
வாய்க்கரிசி போட்டு மீட்கவா?
- நோர்வே நக்கீரா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.