வந்து செல் சுதந்திரமே...!
வருத்தமுடன் ஓர் மடல்
வழக்கம் போல்
எழுதி விடுகிறேன்...
விருப்பமற்றிருந்தாலும்
பொறுப்புள்ள
ஞாபகத்திற்கு
மரியாதை நிமிதம்
வந்து ஏற்றுக்கொண்டு
போக சுதந்திரமே...
ஓராண்டு
பிரச்சனை உண்மைகளை
ஓரிருநாட்களில்
எதுவமற்றதாய் சரி செய்து
பொய்க் கம்பள விரிப்போடு
தேச மேடையை
அலங்காரப்படுத்தியுள்ளோம்...
எல்லை மீறல்கள்
எங்கும் பயங்கரவாதம்
உள்ளூர் பிரிவினை
கனமான இவையெல்லாமும்
சமாதான சுமைதாங்கியில்
இறக்கிக்கொண்டேயிருப்போம்...
இன்றைய
ஆரஞ்சு மிட்டாயில்
கசப்பான நேற்றுகளை
இனிப்பாக்கும்
வல்லரசு
நம்பிக்கை கொள்வோம்...
இமயமும் குமரியும்
என்றும் எங்கள் சாலை...
பயணத்திலே
பாகுபாடுகளென்றாலும்
பார்த்துப் பார்த்துக் கடப்போம்...
இனத்தாலும்
மொழியாலும் வேற்றுமை
பல உண்டென்ற போதும்
இந்தியர்
ஒற்றுமையிலேதான்
தேசிய கீதம் சொல்வோம்...
எங்கும் பசுமை
எதிலும் வளமை செழிமை
இது தான்
தன்னிலை தேசமென்போம்...
நதிகளின் குறுக்கே
புதிது புதிதாக
அணைகளையிடுவோம்...
மதகுகள்
திறக்கும் சாவியினை
நடுவர் நீதி
மன்றத்தில் வைப்போம்...
குடிநீர் கேட்கும்
குடம் கொண்டு வரும் மங்கையரை
தடியடி நடத்தி விரட்டுவோம்...
நிலநீர் ஆதாரம்
மழைநீர் சேகரிப்பு என
விளம்பரப்படுத்துவோம்...
பெண்ணுரிமை எழுதி
சரிசமம் சொன்னாலும்
அதிகாரம் கொண்டமைக்கே
ஆண்மைத்தனத்தை
அடக்கிக்கொள்வோம்...
பேராண்மை
பெண்ணுயர்த்தல்
முப்பத்தி மூன்று சதத்தில்
முடக்கித்தானே வத்துள்ளோம்...
வழிபாட்டு நெறிகளில்
ஒருபோதும் முறையற்று
உரச மாட்டோம்...
அவ்வப்போது
மதத்தின் கூர்மை
தீட்டினால் மட்டும்
மனித உயிர்களில்
வன்முறைப் பதம் பார்ப்போம்...
சமுதாயக் கலப்பு
மணங்களில் சாதிகள்
இல்லையென முழங்குவோம்...
சமூக முறைப்படி
தன் இனம் விடுத்து
ஒருபோதும் பெண்
எடுக்கவும் மாட்டோம்...
கொடுக்க மாட்டோம்...
மோசடி குறித்த
விசாரணையில்
முக்கியப் பிரமுகர்கள்
பட்டியலின் நீளம் நீள்கிறது...
ஊழலற்ற நேர்மையான நிர்வாகம்
இந்த வார்த்தைக்கு
தங்கத்திலான வார்ப்பு
பூசிக்கொண்டே இருப்போம்...
நீ நான் என்ற
ஏற்ற தாழ்வுகளில்
அன்னியமோடு நாங்கள்...
இயற்கை சீற்றம்
ஏக சேதமென்றால்
புண்ணியம் தேடும்
நன்கொடையாளனாக
தன்னை மாற்றுவோம்...
பை நிறைய பணம்
உதவ மனமில்லாது
ஏங்கும் ஏழையரை
கடந்து நடப்போம்...
பேரும் புகழும்
ஊரில் உயர
தான பிரபுவென
கண் மூடிய பூனை
நெனப்பாய் ஊர்ப்
பெருமை கொள்வோம்...
பாவமற்று
யதார்த்ததில்
வாழ்க்கையை நகர்த்த
நாளும் நினைத்து
அடுத்தவர் உழைப்பில்
உயரும் தந்திரம் கற்போம்...
சொல்லும் செயலும்
தெளிவாகவே இருக்கும்
உள்ளத்தில்
கள்ளத்தையே
விழிப்போடு திறந்திருப்போம்...
வாக்கு வாங்கிப்போனவர்
பார்க்கும் தூரம் கடந்து போய்
தேசிய நாயகர் என்பார்
அதை செவி கூசாது கேட்போம்...
அங்கே
இங்கே தீமைகள்
என்று செய்திகள் வந்திருக்க
நாட்டின் பாதுகாப்பு
உறுதி செய்யப்பட்டுள்ளது
என குண்டு புகாத
கண்ணாடிப் பேழைக்குள்
பிரதமரின் வீர உரையைத்
தொலைக்காட்சியில் கேட்டு
பொறுமையோடிருப்போம்...
மரியாதை நிமித்தம்
ஆண்டு தோறும்
வந்து செல்லும் சுதந்திரமே...
இந்த ஆண்டும்
எங்கள் சுதந்திரப் பெருமையை
ஏற்றுக் கொள்ள
வந்து செல் சுதந்திரமே...!
- பாரதியான், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.