வந்து விட்டாயா...? தீபாவளியே...!
வந்து விட்டாயா...? தீபாவளியே...!
என்னை கொண்று விடுபதுபோல்
குடும்பத் தேவைகள் ஏந்தி...
*****
ஒரு நாள் கூத்துக்கு
ராஜ எண்ணங்களுடன்...
*****
கடந்த ஒரு மாதமாய்
எனக்கு மந்திரி பதவி...!
வீட்டாரின் கோரிக்கை மனுக்கள்
வாங்கியே கனத்து விட்டது மனசு...
*****
கையளவு சரிகைப் பார்டருடன்
பட்டுச்சேலை உடுத்தனுமென்ற
நீண்ட நாள் தனதாசையை
ராத்திரி சபையில்
ரகசியமாய் வைத்தாள் மனைவி...
*****
புகுந்த வீடு போனாலும்
பிறந்த வீட்டு சீதனமாய்
புருஷன் கேட்டாறென
தங்கவண்ணக் கடிகாரம் வாங்கும்
விடாப்பிடி உறவோடு மூத்த மகள்...
*****
உயர்ந்த ரகத்திலே
ஜீன்ஸ் பேன்டும், டி -சர்ட்டும்,
கூலிங்கிளாசும்தான் தனது
கின்னஸ் சாதனையே என்ற
கற்பனையோடிருக்கும் மகன்...
*****
தாவணி போடும் சடங்கிற்கு பிறகு
சுடிதாரிலேயே
சுறுங்கிப்போயிருந்த சலிப்பில்
‘ஆப் ஸாரி ' கட்டிக்கொண்டு
மினுக்க விரும்பும் கடைசி மகள்...
*****
முதுமையை
மூலையில் நகர்த்தும் நிலையிலும்
‘அம்மா பிள்ளை '
நானென்பதை நிருபிக்க
ஆறு கெசம் கோடம்பாக்கம்
புடவை எதிர்பார்பில் தாய்...
*****
இத்தனையும் நிறைவேற்றினால்
என் வீட்டிலும்
எண்ணெய் குளிரும்
புத்தாடை மிளிரும்
பலகாரம் ருசிக்கும்
வெடி சத்தமிக்கும்
மத்தாப்பு சிதறும்...!
-பாரதியான், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.