தாயே நீ அதிசயம்!

ஒளியின்றிப் பார்த்தேன்
ஓசையின்றின் கேட்டேன்
உணவின்றி உண்டேன்
தொடுகையின்றி உணர்ந்தேன்
வாடகையின்றி வாழ்ந்தேன்
உயிருக்குள் உயிரானேன்
அதிசயங்கள் அனைத்தும்
தாயுள் மட்டும் தான்!
தாயே அதிசயம் தான்!!
கருவறையுள் தான் கடவுள்
தாயெனும் கடவுளினுள் கருவறை
அதிசயங்கள் அனைத்தும்
தாயுள் மட்டும்தான்!
தாயே அதிசயம் தான்!!
என்னைத் தொடாமல் தொட்டவளும்
பார்க்காமல் இரசித்தவளும்
இதயத்தால் தாளம் தட்டித்
தூங்க வைத்தவளும்
என்னைக் காணாமலே சுமந்து
சுகம் தந்தவளும் தாய்
இது தாய்மையின் அதிசயம்!
தாயே அதிசயம் தான்!!
நான் சுகமாகத் தூங்க
தன் தூக்கம் தொலைத்தவள்
அழாது இருக்க
அழுதழுதே வாழ்வைக் கழித்தவள்
பசியாதிருக்க
தான் பட்டினி கிடந்தவளைப்
பசிக்க விட்டுவிட்டு
வெளிநாட்டில் இருந்து
கடிக்க முடியாத
காசையே அனுப்பினேன்.
நான் நோயானபோது
தான் பத்தியம் காத்தாள்
விழுந்தபோது தாங்கிப் பிடித்தாள்
அடியெடுத்து வைக்க
தடிகொடுத்து நடந்தாள்.
அவள் தடிபிடித்து நடக்க
தடி தொலைத்து ஓடினேன்
காசுக் கோட்டைத் தேடி
வெளிநாட்டில் வாழ்க்கை நாடி
அன்பாய் ஆசையாய்
உன் வயிற்றைத் தடவிய போதே
காலால் உதைத்துப் பதிலளித்தவனிடம்
வேறு எதை எதிர்பார்ப்பாய்?
நீ இழுத்த மூச்சையே
சுவாசித்தேன்
மூர்ச்சையாகிப் போனால்
யாரிடம் யாசிப்பேன்
அதிசயம் அனைத்தும்
தாயுள் மட்டும் தான்!
தாயே நீ அதிசயம் தான்!!
- நோர்வே நக்கீரா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.