புதிய முகத்துடன் வா...!
புத்தாண்டே
புன்னகை தளையத்தளைய
பூரிப்பு மலர மலர
புதிய முகத்துடன் வா...!
உன் நாட்களின் நகர்வு
நல் பொழுதாக
அடுத்த விடியலிலும்
சிரித்த முகத்துடன் வா...!
எங்கும் எதிலும்
பொங்கும் ஆனந்தம் நிலைக்க
விட்டுக்கொடுத்தல் உணர்த்தி
நேச முகத்துடன் வா...!
நீ
நான்
பேதங்களற்ற உறவு
தேசங்கள் தோறும் விரிய
பாச முகத்துடன் வா...!
பயங்கரவாதமும்
விரோதமும் விலகிப் போய்விட
ஒற்றுமைப் பட்டொளி வீசிக்
கருனை முகத்துடன் வா...!
வறுமை ஒழிய
வாழ்வுரிமை உயர
எல்லோரும் சமமென
சாதிக்கும் முகத்துடன் வா...!
சாதியும்
மதமும் சாக்கடை நாற்றமாய்
மனித இனம் சந்தனமாய்
மணக்கும் முகத்துடன் வா...!
இல்லாமையற்ற
வல்லமை வாழ்வில்
நிரந்தரம் பெற்றிட
பொக்கிச முகத்துடன் வா...!
- பாரதியான், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.