ஒன்றே நன்று!
நமது ஆதி சமூகம் திட்டுத் திட்டாய் இருந்தது
சீர்திருத்த உளி கொண்டு வந்தனர் அனி அனியாய்
காலத்தின் மதிப்பில் அழகானதோர் சிற்பம் வெளிப்பட்டது...
அதன் பெயர்தான் ‘ஜனநாயகம்'
இமயம் முதல் குமரி வரையிலான
இப்பெரும்தோற்றத்தில்
அலங்காரங்களும், அலங்கோலங்களும்,
அவலட்சனமும் வரிசைசூட்டினாலும் ...
நமது நோக்கமெல்லாம்
சமத்துவக்கூர்மையிலேயே உள்ளது
அதனால்தான் சமூகச்சிந்தனையும், சமூகமுன்னேற்றமும்
‘ஒன்றே நன்று' என்ற மகுடம் வைக்கிறது.
நீ அந்த மதம் சார்ந்தவன்
அவன் இந்த மதம் சார்ந்தவன்
இவர்கள் அந்த பிரிவுக்காரர்கள்
அவர்கள் இந்த பிரிவில் உள்ளவர்கள்...
இந்தக் கோட்பாடெல்லாம்
கேட்பாறெற்று போகும்போது
‘ஒன்றே நன்று' என்ற சொல்லில் வைரமின்னல் ஜொலிக்கும்.
தானாக உதிரும் விதைகள்
இடம்பார்த்தா முளைகொள்கிறது
மானுடப் பிறப்பும் அப்படியே
மதம் பார்த்துக்கொண்டு, இனம் தெரிந்துகொண்டு,
மொழியறிந்துகொண்டு உயிர்பெறுவதில்லை...
கண்ணுக்குத்தெரியாத வேற்றுமை சுவாசம் நமது அணுக்களில்
ஊடுருவியபோதும் சொல்லுக்குள் அடங்காத அன்யோனிய
மனப்பான்மை நுண்ணிய உதவியில் வெளிப்படும்போது
‘ஒன்றே நன்று' என்ற உணர்வு உளவியலில் தெரிகிறது.
ஓர் நிகழ்வு
மிதிவண்டியில் சென்ற சிறுவன் நடு சாலையில் விழுந்தான்
சில மனிதர்கள் ஓடினர், கூடினர்.
விலிப்பு நோயில் துடித்த அச்சிறுவனை அலக்கா தூக்கி
சாலையோரம் கிடத்தினான் ஓர் இளைஞன்
‘ஒன்னுமில்லடா தம்பி... ஒன்னுமில்லடா...'
கூட்டுப்பிராத்தனையென தைரிய வார்த்தைகள்
அவனின் முகத்தில் தண்ணீர் தெளித்தாள் ஒரு மூதாட்டி
சிறுவன் தெளிச்சி பெற்றபோது அனைவரது முகத்திலும்
நெகிழ்ச்சி, மகிழ்ச்சி...
கவனிக்க
மீண்டும் மிதிவண்டியில் சென்ற அந்தச் சிறுவனின் பெயர் பீட்டர்
பரிதவிப்போடு தூக்கிய இளைஞனின் பெயர் ராமர்
தண்ணீர் தெளித்த மூதாட்டியின் பெயரோ பாத்திமா...
அன்னியம் இங்கே அடியோடு எடுபடாமல் போனபோது
‘ஒன்றே நன்று' என்ற மனிதநேயக் கூட்டு உச்சம் பெறுகிறது.
ஒரு கை ஓசைபெரும் என்பது மூடத்தனம்
சங்கிலிக்கோர்வையிலேதான் சமூக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன
நமது பாதையில் பிரிவினைகளின் இடர்பாடுகளைக் களைய
விட்டுக்கொடுத்தலின் மனப்பான்மையை வளர்க்கவேண்டும்...
சமவெளி என்பது நேராகவும் உறுதியாகவும் இருக்க
சகமனிதர்களை சகோதரத்துவத்தோடு ஏற்றுக்கொண்டால்
‘ஒன்றே நன்று' என்ற தேர் தேசவீதிகளில் நிமிர்ந்தோடும்.
எங்கிருந்து வந்தது இந்த பாழாய்ப்போன பாகுபாடு?
சுட்டெரிக்கும் வெயிலில் செல்பவனுக்கு தேவை தண்ணீர்
மதமறிந்து கேட்டு வாங்கித் தாகம் தீர்க்க முடியுமா...
அப்போதைக்கு அவனுக்கான ஈரமே உயிர் நனைப்பு...
தேவைப்படுவது நமது தேவையறிந்து கிடைக்கும்போது
நமது சார்ந்த எதுவுமே மனதுக்கும், உணர்ச்சிகளுக்கும்
அப்பாற்பட்டதாக அருவறுக்கத்தக்கதாகத் தெரிவதில்லை என்பதில்
‘ஒன்றே நன்று' என்ற கருத்து உண்மையானதாக வலுப்பெறுகிறது.
இந்த வேற்றுமைகள் எங்கெங்கு விஷம் விதைக்கிறது
என்பதைக் கூர்மையாகவும் ,நேர்மையாகவும் ஆராய்ந்தால்...
சுயநலச் சிந்தனைகளின் கொடிய நோக்கில்தான் என்பது
நூறு விழுக்காடு வெட்டவெளிச்சமாகத்தெரியும்...
இங்கே அழிவின் ஆழ்கிணற்றில் தூர்வாரும் போக்கை நிறுத்தி
செழிப்பின் ஆறுகளை எங்கும் திசைதிருப்பினால்
மனிதவளர்சியின் நோக்கில் சமூகப்பசுமை வீறுபெறும் அப்போதோ
‘ஒன்றே நன்று' என்ற சிந்திப்பு எத்திக்கும் நிலைக்கும்.
முகம் பார்த்தல்,ஒருவர் ஒருவருக்கான புன்னைத்தல்,
இந்த அடிப்படையிலேதான் பேருந்திலும் தொடர் வண்டியிலும்
தினந்தோறும் நமது பயணமெல்லாம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது
பகைமையின் பொதிகளோடு மட்டுமே இந்த பயணமென்றால்
நடைசவங்களாக,உயிர்ப்பிண்டங்களாகவே போவோம் வருவோம்...
நம்பிக்கை, பெருங்கடலில் அவரவர் விட்டுக்கொடுக்க முடியாத
நீந்தலோடு கரைகாண முடியாது என்பதே மறுக்க இயலாத உண்மை
அதிலே விடாப்பிடியாகக் கைகள் கோர்த்துக் கடந்தோமானால்
சமூகநல்லிணக்கக் கலங்கரை வெளிச்சம் பார்க்க நேரிடும்போது
‘ஒன்றே நன்று' என்ற அன்பு, கருணையெல்லாம் உள்புகும்.
ஒன்றுபட்ட சமூகமொன்றும் தொடமுடியாதவெகு தூரத்தில் இல்லை
நம்முடனேதான் அது ஒட்டிக்கொண்டுள்ளது என்பதை உணராது
பிறர் போன போக்கென தப்பாக தடம் பதிக்கிறோம்...
நமது எண்ணங்களின் தொலைநோக்கில் தெரிவதெல்லாம்
கருப்பு அன்டம்தான் என நம்பிக்கொள்வதை விட்டுவிட்டு
அருகில் சென்று பார்த்தாலே அற்புத இணைப்பு கிடைக்கும்...
- பாரதியான், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.