சமத்துவம்
மூட நம்பிக்கையை இன்னும்
விரும்பும் மாமனிதர் கூட்டமே,
உம் மூளைகள் இன்னும்
மூடுபயிராய் மூடிக்கிடப்பதுதான்
முற்றுப் புள்ளி வைக்கின்றது
நம் சமத்துவத் தோட்டத்திலே!
சாதிக் கலவரம் தொடக்கினாய்
சமயக் கலவரம் தொடக்கினாய்
காதல் திருமணம் வேண்டாமென்று
தூக்கைப் பரிசாய் நீதியிட்டாய்
வெள்ளையென்றும் கறுப்பென்றும்
தேசத்துக்குத்தேசம் பிரிவினை
தோற்றுவித்தாய்... இறுதியாய்
யுத்த பூமியாய் அத்தனையும்
ஆக்கினாய்...!
மாட்சி மிகு ஆட்சி செய்யும்
மனிதர் குலமே...
உம் ஆட்சியில் அறிமுகம்
செய்திட வேண்டியதோ
சமத்துவமெனும் சிந்தையே...
வாழும் இந்த சொற்ப காலத்திலே
நீ வரவு வைக்க வேண்டியது
புதிய தலைமுறைக்காய் அதுவே!
உடலில் ஓடும் குருதியில்
உன்னால் இனம் பிரித்திட முடியுமா?
இயற்கை அழிவிலும்
உதிக்கும் சூரியனிலும்
ஓடும் நீரிலும் நீ
சுவாசிக்கும் காற்றிலும்
உன்னால் பிரிவினை காண
முடிகிறதா...?
இயற்கையில் இத்தனை
உதாரணமிருக்க,
உறக்கம் ஏனடா மானிடா...?
உன் உள் உணர்வை ஒருமுறை
தட்டி எழுப்படா...!
உதிக்கும் நாட்கள் இனியும்
செழிப்பாய் இருக்கட்டும்...
ஒற்றுமைச் சங்கொலி
பாரெங்கும் முழங்கட்டும்...!
- துஷ்யந்தி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.