அலாரம் அலற விழித்தன விழிகள்
இரவெனும் நதியிலேகி வண்ணக்
கனவெனும் படகிலேறி வானில்
மிதந்து சென்ற உணர்வினையேந்தி
வியந்து நின்ற வகையிங்கு பகர
சின்னச் சின்ன நட்சத்திரங்கள்
சொன்ன பல சுவையான கதைகள்
வண்ண முழு நிலவது தானும்
மெல்லத் தேயும் விந்தை விளக்க
தவழ்ந்து மெல்ல நகரும் வெண்முகில்
கனத்த பொழுதொன்றில் தானும்
கறுத்துக் கார்மேகமாய் பொழியும்
கனத்த மழையின் காரணம் சொல்ல
அனைத்தும் கலைந்து மறைந்து போக
ஆதவன் கதிர்களை ஒளியாய்ப் பொழியும்
வேளை வந்தது என்றே அருகிருந்த
அலாரம் அலற விழித்தன விழிகள்
- சக்தி சக்திதாசன், லண்டன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.