இரண்டையும் படைத்தது...?
வானூர்வலம் போகும்
அந்த நிலவழகா ?
இல்லை
வண்ணத்தேர் போல
ஊர்கோலம் போகும்
இந்தச் சிலையழகா ?
இருளென்னும்
மேடையிலே விரித்த
நீலவானத் திரையினில்
கண்சிமிட்டி விளையாடும்
விண்மீன்கள் அழகா ?
இல்லை
ஓர்கணப் பார்வையில்
மெல்லத் தன் இமைமூடி
செவ்விதழ் ஓரங்கள்
மெல்லென விரியப்
புன்னகை பூத்தே செல்லும்
பூவையிவள் அழகா ?
இளம் மாலைப் பொழுதில்
செந்நிறக் கோலத்தில்
அகிலத்தின் அந்தத்துள்
ஆதவன்தனை மறைக்கும்
அக்காட்சி அழகா ?
இல்லை
பார்வையோடு பார்வை
மோதியதால் நாணிக் கன்னம்
சிவக்கச் சிரிக்கும்
அச்சிங்காரக் காட்சி அழகா ?
வியந்தேன் ! வியந்தேன் !
நான் காணும்
இயற்கையின் காட்சியோடு
போட்டி போடும் இந்த
இலக்கியக் காதலைக் கண்டு
இரண்டையும் படைத்தது
இயற்கையோ...?
- சக்தி சக்திதாசன், லண்டன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.