அன்னைத்தமிழ் தந்த ஆசியென ...
பாடிடுவேன் என் தாய்த் திரு தமிழ்தன்னை
பாமாலை சூட்டிப் பாடிடுவேன்...
சூடிடுவேன் அன்னைத் தமிழ் தந்த மொழியை
சுந்தரமாய் என் நெஞ்சில் சூடிடுவேன்...
போற்றிடுவேன் கண்ணென அவள் தன்
பண் செய்த பொன் மைந்தர்களை போற்றிடுவேன்...
கற்றிடுவேன் ஓய்வின்றி அன்னைத் தமிழை
கற்கக் கசடறக் கற்றிடுவேன்...
மீட்டிடுவேன் சிந்தையெனும் யாழெடுத்து அதில்
சிந்தும் பல கவி புனைந்து மீட்டிடுவேன்...
சாற்றிடுவேன் புகழ்மாலை என் சோதர சோதரியருக்கு
அவர் தமிழ் பாடுகையில் புகழ்மாலை சாற்றிடுவேன்...
பீற்றிடுவேன் என் அன்னைத் தமிழின் பெருமைதனை
வாழ்விருக்கும் நாள்வரை ஓயாமல் பீற்றிடுவேன்...
யாத்திடுவேன் அவள் புகழ் கூறும் பாமலை ஒராயிரம்
சளைக்காது இன்மொழி கூட்டி யாத்திடுவேன்...
சேர்த்திடுவேன் அரிய பல தமிழ் நூல்களை
பேறாக எண்ணிப் பெரும் செல்வமென சேர்த்திடுவேன்...
உணர்ந்திடுவேன் இவையெல்லாம் என் திறமையல்ல
அன்னைத்தமிழ் தந்த அன்புமிகு ஆசியென உணர்ந்திடுவேன்...
- சக்தி சக்திதாசன், லண்டன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.