மனோரமா...!
கலைநிலத்தில் நாடக விதையானாய்
வளர்முகத்தில் நடிப்பு மரமானாய்
உன்னிடத்தில் உள்ள திறமையினால்
கொட்டும் அருவி போல் சிரிப்பு வெள்ளமானாய்...
என்னிடத்தில் எல்லாம் உள்ளதென
பன்முகக்காட்சிகளிலே நிமிர்ந்து நின்றாய்
செவிகொள்வதெல்லாம் சொல்லல்ல என
முத்துதமிழில் பாத்திரமொத்து முழங்கி விடுவாய்...
நடிப்புக் களத்தில் வீரநாச்சிதான் உனக்கான
வாழ்க்கை நிஜத்தில் கானல் காட்சியே தானே
ஆனாலும் ஆட்டமிட்டாய், பாட்டுமிட்டாய்
தன்னிலை குழையாத நீ மகிழ்ச்சி மிட்டாய்...
மனோரமா... மனோரஞ்சிதம் 'பூ'
கன்னியாக நாணி வெட்கம் கொண்டாய்
வீரப் பெண்மணியாகவும் போரில் சென்றாய்
காதல் களிப்பில் மோகப்பார்வை சுருக்குவாய்
கல்யாணக் கோலத்தில் மணவரையிலும் அமர்வாய்...
குடும்பம் காக்கும் மனைவியாக வருவாய்
குழந்தை சுமக்கும் தாய்மையிலும் மிளிர்வாய்
கொடுமைக் குணத்தில் மாமியார் நிமிர்த்தமாவாய்
உருக்கும் அன்பில் அம்மாவாக அரவணைப்பாய்...
ஒவ்வொரு தோற்றத்திலும் நீ மாறினாலும்
மெய்பெரும் உயிரோட்டமாக தெரிந்தாய்
அனைத்தும் கனமான பாத்திரங்கள் என்றாலும்
துயில் கொள்ளாத நகைச்சுவையே நிரந்தரம்...
பற்றாக நீ நினைத்தலெல்லாம் கலைக்கூடம்
அதில் வட்டாரச் சொற்கள் உனக்கு வசப்படும்
சோகப்பின்னனியில் எப்போதும் நீயிருந்தாய்
மக்கள் பார்க்கும் காட்சிகளில் முகம் பூத்திருந்தாய்...
அரிதாரஇளம் சிட்டாக நாடக மேடையேறினாய்
புகழ்ச்சி குறையாத உயர்வு ‘ஆச்சி'யானாய்
துளியும் இகழ்ச்சி வாராது வாழ்ந்துவிட்டாய் - நீ
மறித்தாலும் தமிழ் மனசுகளில் வாசமாகிவிட்டாய்...
- பாரதியான், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.