ஒரு வாய்ச் சோறு!
வடிசோறு மொத்தமிங்க
வடிச்ச கஞ்சிக்கு மாடும் கெஞ்ச
கருவாடு வறுத்தாச்சு
கருமிளகு தூவியாச்சு
நுனி இலை பறிச்சாச்சு
நான்கு வகை பொரியலாச்சு
மத்தியானக் கஞ்சிக்கு
மாமனத்தான் கூப்பிட்டவ
ஊருக்குத் தெற்கு பக்கம் உழுத மச்சான்
உசுறவிட்டு கருவோட கதற வச்சான்
நாத்து நட்டு களை எடுத்து
மண்பாரம் சொமந்து
மகராசன் மெத்த மக்க
மதியோடு வாழ
புள்ளை படிப்புக்கு
அடிமடி நிறைஞ்சாலும்
அம்புட்டும் போதுமான்னு
கால் வயிறு கஞ்சி போதும்
களத்துமேடே கதியேன்னு
கால் கடுக்க ஒழைச்சவ
தான் பெத்த மகன்
பட்டணத்தில் படிச்சிப்புட்டு
பத்து மணி ரயிலேறி
பட்டிக்காட்டுக்கு வரானே
பெத்தவள பார்க்கத்தான்னு
ஊர்முழுக்க வாய்
முரசு கொட்ட
ஒத்த புள்ளை அவன்
ஒசந்து வந்து நின்னானே
ஆனந்த கண்ணீரில்
அவசேர்த்து அணைச்சுக்கிட்டா
இனி தொண்டக் குழி நிறஞ்சிடுச்சு
பெத்த மனம் மகிழ்ந்திருச்சு
கருவாடும் கருமிளகும் தயாராச்சு
ஒரு வாய்ச் சோறு முழுசா இறங்கிடுச்சு
பெத்தவளுக்கு!!
- தஞ்சை சதீஷ்குமார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.