தேடலைத் தொடர்கிறேன்...!
சூரியனுக்கு முன்பாக
சூட்சுசமம் ஏதுமின்றி
அதிகாலை சுப்ரபாதமும்
மங்கல இசையும்
மாறி மாறி இல்லங்களில் ஒலிக்கிறது
கரிச்சான் குருவிகள் கூச்சலிட
அதைக்கேட்ட அருவியோ
அதற்குப் போட்டியாக
இசையாகக் கீழ்நோக்கி வந்தது
விருந்தினர் வருகையை
அதிகாலையிலேயே
கரைந்து சொல்கிறது காகம்
என்று சிலரும்
விடியல் கீர்த்தனை
என்ற் சிலரும்
இரை தேடும் வித்தை
என்று சிலரும்
சொல்லித் திரிகின்றனர்
அதையெல்லாம் கண்டு கொள்ளாமல்
காகம் தினமும்
கரைந்து கொண்டுதான் இருக்கிறது
வாசலில் கோலம்
அதில் உரிமை கொண்டாடும்
பரங்கிப் பூவிடம் மோதுகிறது
அவள் கூந்தலில்
சூடியிருந்த மல்லிகையின் வாசம்
எறும்புகளின் விடாமுயற்சி
ஏதோ ஒன்றிரண்டு வீடுகளில்
அரிசிமாவு கோலத்தால்
சாத்தியமாகிறது
கோழியின் தேடலில்
ஒரு புழு பூச்சி கூட
சிக்கவே இல்லை
இருந்தாலும் அது தன் தேடலை
விடாமல் மண்ணைக் கொத்தியது
இப்படியே ஒவ்வொரு விடியலும்
தேடல்களும் போட்டிகளும்
தவறான புரிதல்களும்
எதார்த்தங்களும் ஏமாற்றங்களும்
எல்லாம் நிறைந்ததுதான் வாழ்க்கையென்று
எனக்கு நன்றாக உணர்த்தியது
மனம் தளராமல்
தொடங்குகிறேன்
மறுபடியும் என் இலட்சிய
தேடலைத் தொடர்கிறேன்...!
- தஞ்சை சதீஷ்குமார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.