உழவு
கல்லை மண்ணாக்கி
மண்ணைப் புழுதியாக்கி
புழுதியில் சாணத்தையிட்டு
விதையை நட்டுவிட்டு
வருணணை கும்பிட்டு
மழையை விருந்திட்டு
வாடாமல் துளிர்விட்டு
வளர்ச்சியில் பூவிட்டு
மணியெல்லாம் குதிரிட்டு
கொட்டகையெல்லாம் நம்பிட்டு
பொங்கினதைச் சாப்பிட்டு
பொங்கலைக் கொண்டாடிட்டு
புத்துயிராயிருந்ந காலம் போயிட்டுது...
உழவோ இன்று...
இயந்திர கலப்பையும்
எந்திர விவசாயமும் - மந்திரமென
மூளையின் தந்திரமென
முளைக்கும் விதைக்கோ சாயமிட்டு
முளைத்த பின் களைக்கொல்லியிட்டு
பூத்தபின் பூச்சிக்கொல்லியிட்டு
அறுவடைமுன் இரசாயனபூச்சுமிட்டு
அறுவடைபின் மெழுகேற்றப் பூச்சுமிட்டு
அகப்பைக்கு அகலிப்பையுமிட்டு
விற்பனைக்கு வண்ணக்காட்சியிட்டு
விற்றபின் வாங்கிட்டு
வெந்தபின் சாப்பிட்டு - அரிசி
மாறிவிட்டதாம் ஆட்கொள்ளியாய்?
உண்ட களியெல்லாம்
கலித்தொகையோடு போய்விட்டதாம்
காலம் கடந்தும் வாழும் - உணவும்
கேப்பையும் - கூழும் காலம் கடந்துவிட்டதாம்
பசியும் - பட்டினியும் வந்துவிட்டதாம்
பச்சிளம்குழந்தையும் வறட்சியில் இறந்துவிட்டதாம்
கேட்கையில் விவசாயிகள் நொந்துவிட்டார்களாம்
பார்க்கையில் இளைஞர்கள் கண்ணீர் விட்டார்களாம்
பழைய உண(உழ)வுமுறைகள் இல்லாவிட்டாலும்
புதியபிறப்பிற்கு உணவு இருக்கனுமென
கணிணி படித்தவர்களெல்லாம்
கழனியில் இறங்கினார்களாம்
ரோபோட்டுகளெல்லாம் நஞ்சை ஓட்டியதாம்
பயிர்களெல்லாம் பச்சைகட்டியதாம்
உலக மக்களுக்கெல்லாம் உணவு கிட்டியதாம் என
இருபதாம் நூற்றாண்டு மக்களுக்கு
இதுவே உணவுக்குச் சாத்தியமென
இன்றைய இளைஞனுக்கு
நேற்றைய உழவு சொன்னதாம்.!
- எம். அன்பரசு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.