உன் கையில் உலகிருக்கு!

கருதாங்க நிறைவலி உடலெங்கும் பாய
உடலுள்ளே புரியாத உயிரொன்று புரண்டிடவே
ஒவ்வாதகுணம் கொண்ட குடலது வயிற்றைக் குமட்டி வர
வாந்திவாந்தி என்று குடலே வெளிவருமாப் போல்
குணமொன்று தொண்டையிலே தொடர்ந்து வர
கருவென்ற காரணம் கருத்தே புரிந்து கொண்டு
உணவேதும் உடலுக்கு உதவாது வெளிவரினும்
உணர்வெல்லாம் கருவிலே பதிந்திருக்க
சிறிதளவு தானேதும் கருவுக்குச் சேர்ந்திடவே
வலியோடுணவு உண்ட மகத்தான மாதாவே!
கடினமான கல் போல் கருவொன்று உந்தியிலே உதைத்திருக்க
கட்டிலிலே புரண்டு திரும்பிச் சரிந்து படுக்கவொண்ணா
நிலையது தோன்றிடினும் வயிறது தடவி
நிலையது புரிந்து நீண்ட மூச்சை உள்ளிழுத்து
உதடு குவித்து ஓங்கிப் பெருமூச்சை வெளியிட்டு
நயனமது இறுக மூடி நவரத்தினம் அத்தனையும் ஒன்றாய்
நயமாய் இணைந்திருக்கும் அழகு மகவு காணும்
நாள் பார்த்து நோவெல்லாம் பொறுத்திருக்கும்
பொறுமையின் பெட்டகமே பேருண்மைப் பாசமே!
பொன்னுலகின் பெருமைக்குப் பேர் மகவைத் தந்திடு!
ஈர்பத்து எலும்புகள் இணைந்தேயுடைவது போல்
உடலிலே வலி எடுக்க உறுதியுடன் வலி தாங்கி
உலகுக் கணக்கு நாற்பத்தைந்தலகுகளே
ஓர் மனிதன் உடல் தாங்கி வாழ்ந்திருக்க
உடல் துடிதுடிக்க ஐம்பத்திரண்டலகுகள்
அற்புதமாய்ப் பிரசவ வலியதனை அதிசயமாய்த் தாங்கியே
கருவறை தங்கிய உயிருலகிலே நடமாட
உருத்தந்த உன்னத உயிரே!
ஆருயிர்கள் வாழ்ந்திருக்க ஆதரவு சேர்ந்திருக்க
அன்புமனம் கொண்டவுயிர் அவனிக்குத் தந்துவிடு
பிரண்டு தவண்டு நடந்து நிமிர்ந்து நலமெல்லாம் நாம் காண
வலியெல்லாம் தான் கண்டு சுகமெல்லாம் எமக்களித்து
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவைப்
பருவங்கள் அத்தனையும் பாடாய்ப்படுத்தி
பருவங்கள் தோறும் பற்பல பிரச்சனைகள் பலவிதமாய்
வகைவகையாய்த் தந்தே பாடாய்ப்படுத்திய எம்மை
ஆதரவாய் அணைத்தெடுத்து ஆறுதலாய் அறிவுரைகள்
ஆற்றியே வழிப்படுத்திய அன்புருவே!
அழகான இவ்வுலகு அன்புருவாய் ஓங்கி நிற்க
அவனிக்கு ஓருயிரைஅற்புதமாய் வளர்த்தெடு
உலகெங்கும் அச்சம் உயிர்களெல்லாம் வாட்டம்
காலத்தைக் கடந்திடவே கலங்கி நிற்கும் மனிதர் கூட்டம்
கூட்டமுள்ள இடம் நாடவாட்டமுள்ள மனம்
கூடிக் கழித்திருக்க காவலரண் காத்திருக்கும் காலம்
அணுகுண்டும் ரவைகளுமே ஆட்சி செய்யும் மோசம்
ஆட்டிப்படைக்கும் ஆளரக்கர்அள்ளிச் சென்றவுயிர்ஆயிரம்
அமைதியுலகு தந்துவிடு ஆருயிர்கள் வாழவிடு
அன்புமக்கள் வளர்ந்துவர அறிவுரைகள் ஊட்டிவிடு
உலகுயிர்கள் மகிழ்ந்திருக்க உன்மகவைத் திருத்திவிடு
உன் கையில் உலகிருக்கு உணர்ந்துவிடு மாதாவே!
- சந்திரகௌரி சிவபாலன், ஜெர்மனி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.